Breaking News

நீட் தேர்வில் அதிர்ச்சி... 200 கேள்விகளுமே வேற வேற... தூத்துக்குடியில் மாணவர்கள் திடீர் கோரிக்கை!

 


தூத்துக்குடியில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் வினாத்தாளில் இடம்பெற்றிருந்த 200 கேள்விகளும் வேறாக இருப்பதால் தங்களுக்கு தனியாக ரேங்கிங் வெளியிட வேண்டுமென தூத்துக்குடியில் நீட் தேர்வெழுதிய மாணவர்கள் திடீர் கோரிக்கை வைத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நேற்று நடைபெற்றது. பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு நீட் தேர்வு நடைபெற்ற நிலையில், முதல் முறையாக வெளிநாடுகளிலும் இந்த முறை தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு மாணவர்கள் நீட் தேர்வை எழுதினர். தமிழ்நாட்டில் இந்த தேர்வுகளை எழுதிய பெரும்பாலான மாணவர்களும் தேர்வு வினாத்தாள் எளிமையாக இருந்ததாக கருத்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில் நீட் தேர்வு தொடர்பாக புதிய சர்ச்சை ஒன்று எழுந்துள்ளது.

பி6, எம்6 என இரண்டு விதமான வினாத்தாள்கள் வழங்கப்பட்டுள்ளது

தூத்துக்குடி மாவட்டம் அழகர் பள்ளியில் 768 மாணவ மாணவிகள் நேற்று நீட் தேர்வை எழுதினர். இந்த தேர்வு மையத்தில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு இரண்டு விதமான வினாத்தாள்கள் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் 200 கேள்விகளும் வெவ்வேறாக இருந்ததாக மாணவர்கள் தற்போது குற்றம் சாட்டியுள்ளனர். நேற்று மாலை விடைகள் அடங்கிய தொகுதி வெளியிடப்பட்டிருந்த நிலையில், இந்த மாணவர்கள் எழுதியுள்ள வினாத்தாளுக்கான விடைத் தொகுதிகள் மட்டும் இதுவரை வெளியாகவில்லை எனவும் மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

நீட் தேர்வு எழுத வந்த மாணவர்கள்

நாடு முழுவதும் நீட் தேர்வு நடத்தப்பட்டாலும், கேள்விகள் முன்பின் மாற்றியமைக்கப்பட்டு மாணவர்களுக்கு வினாத்தாள்கள் வழங்கப்படும். ஆனால் முதல் முறையாக 200 கேள்விகளுமே வேறாக உள்ள ஒரு வினாத்தாள் வழங்கப்பட்டிருப்பதாக மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே தங்களுக்கு தனியாக ரேங்கிக் வெளியிட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக நீட் தேர்வு பயிற்சி நிறுவனத்தில் பயிற்றுநராக உள்ள கல்வியாளர் ஒருவரிடம் பேசிய போது, "இதுபோன்று முதல்முறையாக நடந்துள்ளது. நிச்சயம் இது தேசிய தேர்வு முகமையின் தவறாகத்தான் இருக்கும். ஆனால் அவர்கள் இதை ஒப்புக் கொள்வார்களா என்பது சந்தேகம் தான். மாறாக குறிப்பிட்ட பிரச்சினைக்குரிய வினாத்தாளுக்கான விடை தொகுப்புகளை அவர்கள் வெளியிடுவதற்கான வாய்ப்பு உள்ளது. மாணவர்களிடம் இது மேலும் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு வாய்ப்புள்ளதால், இதனை தேசிய தேர்வு முகமை கவனத்தில் கொண்டு அடுத்த முறை சரியான நடைமுறையை மேற்கொள்ள வேண்டும்" என்றார்.

No comments