நீங்கள் 50 வயதில் வேலையை விட்டு விலகினாலும் ஓய்வூதியம் பெறலாம் என்று தெரியுமா?
முதன்முறையாக வேலைக்கு செல்லும் போது, அதில் குறிப்பிட்ட அளவு பணம் தொழிலாளர் வைப்பு நிதியாக பிடித்தம் செய்யும் போது பெரிய ஏமாற்றத்தை அளிக்கும்.
ஆனால், சில ஆண்டுகள் கழித்துதான் அதன் மூலமாக நம்முடைய எதிர்காலத்தை, குறிப்பாக ஓய்வு காலத்தை திட்டமிட இந்த பணம் பெரிய அளவில் உதவும் என்பதே புரியும்.
ஆனால் பலருக்கும் அவர்களின் பி.எஃப். கணக்கில் வரவு வைக்கப்படும் பணம் எதிர்காலத்தில் திரும்ப கிடைக்கும் என்று கூட தெரியாமல் இருக்கும் சூழலும் இன்று நிலவுகிறது.
அதற்கு முன்பு பி.எஃப். எப்படிச் செயல்படுகிறது என்று தெரிந்துகொள்ள வேண்டும்.
அரசு வேலையா இருந்தாலும் சரி தனியார் வேலையாக இருந்தாலும் சரி, அதில் பணிபுரியும் ஒரு ஊழியருக்கு கட்டாயம் பிஎஃப் கணக்கு இருக்கும்.
அந்த ஊழியரின் அடிப்படை ஊதியத்தில் இருந்து 12 சதவீதம் இந்த பி.எஃப். கணக்கில் மாதாமாதம் செலுத்தப்படும். அதே அளவு பணத்தை அந்த ஊழியர் வேலை செய்யும் நிறுவனமும் இந்த கணக்கில் செலுத்தும்.
ஆனால், நிறுவனம் செலுத்தும் 12% பணத்திலிருந்து, 8.33% ஓய்வூதிய நிதியிலும், மீதமுள்ள 3.67% பி.எஃப். கணக்கிலும் பகிர்ந்தளிக்கப்படும்.
உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால் உங்களின் அடிப்படை ஊதியம் 15,000 ரூபாயாக இருந்தால், ஒவ்வொரு மாதமும் அதிலிருந்து 8.33% அதாவது 1,250 ரூபாய் ஓய்வூதிய நிதியில் டெபாசிட் செய்யப்படும்.
அடிப்படை ஊதியம் அதிகமாக இருந்தால் என்ன செய்வது?
அப்போதும், உச்ச வரம்பின்படி, நிறுவனத்தின் பங்கில் 1,250 ரூபாய் மட்டுமே உங்களுடைய ஓய்வூதிய நிதியில் சேர்க்கப்படும். மீதமுள்ள தொகை உங்களின் பி.எஃப். கணக்கில் டெபாசிட் செய்யப்படும்.
இந்த திட்ட விதிகளின் படி, ஓய்வூதியத் திட்டத்தின் எந்த ஒரு உறுப்பினரும் 10 ஆண்டுகளுக்கு பி.எஃப். பங்களிப்பைச் செய்த பிறகு ஓய்வூதியம் பெற உரிமை பெறுகிறார்.
இது மட்டுமல்லாமல், ஒருவர் தன்னுடைய 50வது வயதில் வேலையை விட்டு விலகினாலும், அவரால் இந்த ஓய்வூதியம் பெற முடியும். ஆனால் அவருக்கு குறைந்த அளவே ஓய்வூதியம் கிடைக்கும்.
No comments