Breaking News

உங்கள் வங்கிக் கணக்கை ரிசர்வ் வங்கி முடக்கப் போகிறதா..? தீயாக பரவும் தகவல்… உண்மை என்ன..?

 


நாட்டில் சமீபகாலமாக டிஜிட்டல் மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது சைபர் குற்றவாளிகள் புதிய மோசடியை கையாண்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது இந்திய ரிசர்வ் வங்கி உங்கள் வங்கிக் கணக்கை முடக்க போகிறது என்ற தகவல் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

அதாவது, கிரெடிட் கார்டு மோசடியில் ஈடுபட்டதால், உங்கள் வங்கிக்கணக்கு முடக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி பெயரில் போலி வாய்ஸ் மெயில் ஒன்றை மோசடி கும்பல் அனுப்புகின்றனர். எனினும் இது ஒரு மோசடி மெயில் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.

மத்திய அரசின் பத்திரிகை தகவல் பணியகமான PIB இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அந்த பதிவில் “ கிரெடிட் கார்டு மோசடிச் செயலில் ஈடுபட்டதால், உங்கள் வங்கிக் கணக்கு முடக்கப்படும் எனக் கூறி, இந்திய ரிசர்வ் வங்கி யிடமிருந்து குரல் அஞ்சல் வந்துள்ளதா? “ஜாக்கிரதை! இது ஒரு மோசடி,” என்று தெரிவித்துள்ளது.

“ரிசர்வ் வங்கி ஒருபோதும் வங்கிக் கணக்கு முடக்கப்படுவது குறித்து தொலைபேசி அழைப்புகள் / மின்னஞ்சல்கள் மூலம் பொதுமக்களை தொடர்பு கொள்ளாது” என்று PIB விளக்கம் அளித்துள்ளது.

மேலும் அந்த போலி செய்தியில் “ அடுத்த இரண்டு மணி நேரத்தில் உங்கள் பெயரில் உள்ள அனைத்து வங்கிக் கணக்குகளும் முடக்கப்படும். மேலும் தகவலுக்கு, ஒன்பதை அழுத்தவும்.” என்று கூறப்படுகிறது. எனவே இதுபோன்ற அழைப்புகள் வந்தால் எந்த எண்ணை அழுத்த வேண்டாம் என்று பொதுமக்களை PIB எச்சரித்துள்ளது.

இந்த பதிவிற்கு ஆயிரக்கணக்கானோர் பதிலளித்துள்ளனர். பயனர் ஒருவர் “எனது கார்டு தேச விரோத செயல்களில் இருப்பதாகக் கூறி இரண்டு முறை அழைப்பைப் பெற்றேன், பின்னர் பேச விருப்பம் கொடுக்கப்பட்டுள்ளது, மேலும் நான் பேசத் தேர்ந்தெடுத்தேன், அதனால் நான் 9 ஐ அழுத்தினேன். ஒரு பெண் மறுமுனையிலிருந்து பேசினார்.. கார்டு மூலம் நான் தவறாக பணத்தை பயன்படுத்தியதாக அவர் கூறினார். மேலும் என்னை பணம் அனுப்புமாறு கூறினார். நானும் பணத்தை அனுப்பிய பின்னரே அது மோசடி என்பது தெரியவந்தது” என்று தெரிவித்துள்ளார்.

No comments