Breaking News

அரசு பள்ளி ஆசிரியர்கள் காலை 8:30 மணிக்கே பள்ளி வருகை தர வேண்டும்:

 


அரசு பள்ளி ஆசிரியர்கள் காலை 8.30 மணிக்கே பள்ளிக்கு வந்து, மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்த வேண்டும் என மாவட்ட கல்வி அலுவலர் வேண்டுகோள் விடுத்தார்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெறவும், தேர்ச்சி விகிதத்தில் மாநில அளவிலான ரேங்க்கை அதிகரிக்கவும், அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு முகாம், நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. பள்ளி துணை ஆய்வாளர்கள் பெரியசாமி, கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) கற்பகம் தலைமை வகித்து பேசியதாவது:
தினமும் ஆசிரியர்கள், காலை, 8:30 மணிக்கே பள்ளிக்கு வருகை தந்து, பள்ளி துவங்கும் முன், மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்த வேண்டும். அதேபோல், மாலையும் சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டும்.

தினமும் பயிற்சித்தாள் (ஒர்க் சீட்) கொடுத்து தேர்வு நடத்த வேண்டும். பி.டி.ஏ. மூலம் தயாரித்து வழங்கி உள்ள வினா-விடை புத்தகம் கொண்டு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். மெல்ல கற்கும் மாணவர்களுக்கு, சிறப்பு வழிகாட்டு புத்தகம் கொண்டு பாடம் நடத்த வேண்டும்.
மாணவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வருகை தருவதை உறுதி செய்ய வேண்டும். செல்போன் மூலம் சோஷியல் மீடியாக்களில் மாணவர்கள் தொடர்ந்து பொழுதுபோக்குவதை கண்டறிந்து அவற்றை தடுக்க வேண்டும்.

மாணவர்களின் பெற்றோர்கள், பாட ஆசிரியர்கள் கொண்ட ‘வாட்ஸ்ஆப்’ குழுவை உருவாக்க வேண்டும். எதிர்மறையான தாக்கத்தை மாணவர்கள் மத்தியில் உருவாக்கக் கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.

பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

No comments