மனதை புண்படுத்துபவரை சமாளிப்பது எப்படி? இதை மட்டும் ஃபாலோ பண்ணுங்க..!
நம்மைச் சுற்றியுள்ளவர்கள் தான் நம்மை மட்டம் தட்டுவார்கள். திட்டுவார்கள். மனதைப் புண்படுத்தும்படி பேசுவார்கள். அவர்களிடம் இருந்து சமாளிப்பதுதான் பெரிய விஷயமாக இருக்கும். கோபம் அதிகமானவர்கள் எதிர்த்து சண்டை போடுவார்கள். அவர்களை எதிர்க்க முடியாதவர்கள் மனதிற்குள்ளேயே புழுங்கி தவித்து வேதனைக்கு ஆளாவர். இதுதான் நியதி. ஆனால் இதில் இருந்து விடுபட என்னதான் வழின்னு பார்க்கலாமா…
நாம் அனுமதிக்காமல் நமக்கு இன்னொருவர் இன்பத்தையோ, துன்பத்தையோ தர முடியாது. அவற்றை அனுமதித்தால் மட்டுமே நமக்குள் நுழைந்து அந்த உணர்வை ஏற்படுத்த முடியும். ஒருவர் நம் மனதைப் புண்படுத்துவதோ, கேவலப்படுத்திப் பேசுறதோ, உதாசீனப்படுத்துறதோ நாம் இடம் கொடுத்தால் மட்டுமே நமக்குப் பாதிப்பு வரும்.
ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து.
என்பார் வள்ளுவர். தனக்கொரு பிரச்சனை வந்தால் அந்த ஆமை தன்னைக் கூட்டுக்குள் இழுத்துக் கொண்டு பாதுகாப்பாக இருக்கும். தனக்கொரு பிரச்சனை என்றால் அது தன் பொறிபுலன்களை எல்லாம் அடக்கி தன் கூட்டுக்குள் ஒழிந்து கொள்ளும்.
நிலைமை சரியான பிறகுதான் வெளியே வரும். அந்த வகையில் நீண்ட நாள் உயிர் வாழும் பிராணி அதுதான். தன் பொறி புலன்களை எல்லாம் அடக்கி ஆமை போல வாழ்ந்தால் ஏழு பிறவிகளிலும் நமக்கு துன்பம் இல்லை என்கிறார் வள்ளுவர்.
சிலருக்கு மனதைப் புண்படுத்திப் பேசுவதே ஒரு வேலை. இன்னொரு வகை இருக்கு. இடித்து உரைத்துப் பேசுவது. சூடு சொரணை வரும் மாதிரி பேசினால் தான் இவங்க திருந்துவாங்கன்னு நினைப்பாங்க. ஒருத்தர் மனம் நோகும்படி பேசினால் நமக்கு கோபம், வேதனை வரும்.
கோபம் வந்தால் எதிர்த்து சண்டை போட்டு அந்தப் பிரச்சனையைப் பெரிசாக் கொண்டு போவோம். வேதனை என்றால் நம்மைப் படைச்ச கடவுள் இப்படி நம்மை சோதிக்கிறானே… என்ன செய்வதுன்னு எதிர்த்துப் போராட முடியாம மனம் நொந்து அழுது விடுவோம்.
சிலர் உண்மையாக இருந்து திட்டினால் அவர்கள் சொல்லும் விஷயத்தை ஆராய்ந்து பார்க்க வேண்டும். சிலர் நம் மீது மதிப்பு, மரியாதை, அன்பு, பாசமாகக் கொண்டவர்கள் திட்டினால் அதை இடித்து உரைத்தலாக எடுத்துக் கொள்ள வேண்டும். இதைத்தான்
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்
என்று சொல்லிருப்பார். மன்னனையே இடித்து உரைக்கிற ஆள் இல்லன்னா அவனது ஆட்சி கெட்டு விடும் என்பார் வள்ளுவர்.
குண்டா இருக்குறவங்களை இடித்து உரைத்து சொன்னால் தான் உடலை மெலியச் செய்ய முயற்சி எடுப்போம். சிலர் வேணும்னே நம்மை அவமானப்படுத்தினால் அதைக் காதிலேயே வாங்காமல் விட்டுவிட வேண்டும். அவர் பாட்டுக்கு கத்துறாருன்னு நாம போய்க்கிட்டே இருக்கலாம். அது நம்மைப் பாதிக்காது. சிலர் குத்தலாக, நக்கலாகப் பேசினால் சரி சரி கிண்டல் பண்ணியது போதும் என்று நகைச்சுவையாக மழுப்பி விட்டு போவோம்னு போயிடலாம்.
இதை நம்மை நேசிப்பவர்கள் கோபப்படும்போது மட்டும் பயன்படுத்தலாம். தொடர்ந்து நம்மைக் குத்திக்கிட்டே இருப்பவர்களாக இருந்தால் அவர்களிடம் இப்படி பேசலாம். இனிமே இந்த மாதிரி சொல்ற வேலையை வச்சிக்காதீங்க. நாலுபேரு முன்னாடி இப்படி பேசாதீங்க. இனி இப்படி செய்யாதீங்கன்னு அவர்களைத் தனியாக அழைத்துச் சென்று பேசினால் அது பலமான உறவாக மாறும்.
இவ்ளோ விஷயத்தையும் நாம் பொறுமையாக நிதானமாக யோசித்துப் பார்க்க வேண்டும். பிறருடைய வார்த்தைகள் என்பது எப்போதும் நாம் காது கொடுத்துக் கேட்டு மனதுக்குள் கொண்டு சென்றால் மட்டும் தான் அது நம்மைப் பாதிக்கும்.
மற்றபடி எப்போதும் நம்மை பேரானந்த பெருவெள்ளத்தில் வைத்துக் கொண்டால் ஒரு கடுகளவு கூட துன்பம் வரவே வராது என்பதில் திடமாக இருக்க வேண்டும். அந்த வகையில் நம்மைப் புண்படுத்துபவரை சமாளித்து விட்டால் எந்த இடத்திலும் நாம் வெற்றிபெற்றவர்களாக செல்ல முடியும்.
No comments