LIC : எல்ஐசியில் கேட்பாரற்று கிடக்கும் ரூ.880 கோடி.. உங்களுடைய பணமும் அதில் உள்ளதா.. தெரிந்துக்கொள்வது எப்படி?
இந்தியாவின் சிறந்த காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றாக அரசின் எல்ஐசி விளங்குகிறது. இந்த நிலையில், ஏராளமான பொதுமக்கள் மருத்துவ காப்பீடு, ஆயுள் காப்பீடு உள்ளிட்ட திட்டங்களில் முதலீடு செய்து வருகின்றனர்.
இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான எல்ஐசி, சமீபத்தில் வெளியிட்டுள்ள தகவல் ஒன்று பொதுமக்களையும் அதன் பயனர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் விதமாக அமைந்துள்ளது. அதாவது, 2023 – 24 ஆம் நிதியாண்டில் சுமார் ரூ.880.93 கோடி பணம் முதிர்வு காலம் முடிந்த பின்னும் திரும்ப பெறப்படாமல் உள்ளதாக கூறியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில், நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்திரி இதுதொடர்பான தகவலகளை பகிர்ந்தார். அப்போது கூறிய அவர், எல்ஐசியில் சுமார் 3.72 லட்சம் பாலிதாரர்கள் முதிர்வு பெற்ற தங்களது பணத்தை திரும்ப பெறவில்லை என்று கூறியுள்ளார்.
எல்ஐசியில் இருந்து இத்தகைய தகவல் வெளியாகியுள்ள நிலையில், நீங்களும் உங்கள் பாலிசியை பெறவில்லை என்று நினைத்தால் அதை உடனே சோதனை செய்து, எல்ஐசியில் இருந்து பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளுங்கள்.
உரிமை கோரப்படாத எல்ஐசி பாலிசிகளை சரிபார்ப்பது எப்படி?
- எல்ஐசி பாலிசி தாரர்கள் தங்களது பாலிசி உரிமை கோரப்பட்டுள்ளதா இல்லையா என்பதை எல்ஐசியின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://licindia.in./home என்ற இணையதளம் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
- அதற்கு முதலில் வாடிக்கையாளர்கள் சேவை (Customer Service) என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
- பிறகு உரிமை கோரப்படாத பாலிசி தாரர்களின் தொகை (Unclaimed Amounts of Policy Holders) என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
- பிறகு பாலிசி எண், பெயர், பிறந்த தேதி மற்றும் பான் கார்டு எண் உள்ளிட்ட விவரங்களை பதிவிட பேண்டும்.
- பிறகு சமர்ப்பி (Submit) என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
மேற்குறிப்பிட்டுள்ள நடைமுறைகளை பின்பற்றி உங்கள் பாலிசி தொகை எதுவும் நிலுவையில் உள்ளதா என்பதை சோதனை செய்துக்கொள்ளலாம்.
நீண்ட நாட்களாக உரிமை கோரப்படாத தொகைகள் என்ன ஆகும்?
உங்களின் பாலிசி தொகை சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக உரிமை கோரப்படாமல் இருக்கும் பட்சத்தில் அது மூத்த குடிமக்களுக்கான நலன் நிதிக்கு சென்றுவிடும். இதன் காரணமாக காப்பீட்டாளர்கள் உரிமை கோரப்படாத ரூ.1,000-க்கு மேல் உள்ள தொகைகளை இணையதளங்களின் மூலம் தெரியப்படுத்த வேண்டும் என்று இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் கூறுகிறது. வழக்கு, போட்டி உரிமை கோரல்கள், தடுக்கப்பட்ட பாலிசிகள், பாலிசிதாரர் வெளிநாட்டில் வசிப்பது உள்ளிட்ட காரணங்களால் இவ்வாறு லட்சக்கணக்கில் பாலிசிகள் திரும்ப கோரப்படாமல் உள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
No comments