ஜிஎஸ்டி-யை குறைத்து மத்திய அரசு அதிரடி! மொபைல் மற்றும் டிவி, ஏசி உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருள்களின் விலை குறைகிறது!
ஜிஎஸ்டி-யை குறைத்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளதால் மொபைல் மற்றும் டிவி, ஏசி உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருள்களின் விலை குறைய உள்ளது.
ஜூலை 1ம் தேதி, ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டு 6 ஆண்டுகள் நிறைவடைந்து, 7ம் ஆண்டு துவங்கியிருக்கும் நிலையில், வீட்டு உபயோகப்பொருட்களின் மீதான ஜிஎஸ்டி வரி விகிதங்களை குறைத்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட ஜிஎஸ்டி வரிவிதிப்பானது, பிரதமராக மோடி பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு, 2017ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி முதல் நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவைகள் (ஜிஎஸ்டி) வரி அமலுக்கு வந்தது.
அதற்கு முன்பு வாட், ஜிஎஸ்டி, சுங்க வரி என்று 17 விதமான வரிமுறைகள் அமலில் இருந்த நிலையில், அனைத்தையுமே ஜிஎஸ்டி என்று ஒரே வரிவிதிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டது. அதாவது, மாநிலங்களுக்கு தக்கபடிமாறும், பல்வேறு வரி விதிப்புகளை அகற்றிவிட்டு, நாடு முழுக்க ஒரே மாதிரியான வரி விதிப்பு நடைமுறை ஜிஎஸ்டியாக கொண்டுவரப்பட்டது.
அதன்படி, வரிவிதிப்பில் 5%, 12%, 18%, 28% என்று மொத்தம் 4 வகையில் வரி விதிக்கப்படுகிறது… அதேபோல, தங்கத்துக்கு 3% வரி விதிக்கப்படுகிறது. உணவுப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு சரக்குகளுக்கு ஜிஎஸ்டியில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த வரி, மத்திய ஜிஎஸ்டி மற்றும் மாநில ஜிஎஸ்டி என 2 வகைகளில் வசூல் செய்யப்படுகிறது.
அந்தவகையில், ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டு 6 வருடங்கள் முடிந்து, 7வது ஆண்டு துவங்கி உள்ளது. இந்த 7வது ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒரு ட்வீட்டை பதிவிட்டுள்ளார். அதில், ஜிஎஸ்டியால் நுகர்வோருக்கு என்னென்ன பயன் என்று விளக்கமளித்திருக்கிறார்.
'ஜிஎஸ்டி வரி விதிப்பிற்கு முன்பு, வாடிக்கையாளர்கள், ஒரு பொருளுக்கு 31 சதவிகிதவரி செலுத்த வேண்டியிருந்தது.. இப்போது அந்த வரிகள் அனைத்தும் ஒன்றாக்கப்பட்டுள்ளதால், வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்… வாடிக்கையாளர்களிடையே வாங்கும் சக்தி அதிகரித்துள்ளது… 2018 ஏப்ரல் 1ம் தேதி அன்று ஜிஎஸ்டி வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 1.03 கோடியாக இருந்தது. ஆனால், இப்போது 1.36 கோடியாக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் பொருட்களின் முந்தைய வரி மற்றும் தற்போதைய ஜிஎஸ்டி வரி குறித்து விவரங்களை பார்க்கலாம்:
குளியல் அறை, சுத்தம் செய்யப் பயன்படுத்தும் சிங்க்குகள், வாஷ் பேசின்கள், கழிப்பறை பொருட்கள், இருக்கைகள் மற்றும் கவர்கள் இவற்றிற்கு 28 சதவீதமாக இருந்த வரி விதிப்பு 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
தலைமுடி எண்ணெய், பற்பசை, சோப்பு இவற்றிற்கான வரி விதிப்பு 27 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
டிடெர்ஜெண்ட்டுகள் மற்றும் சலவை பவுடர்களுக்கான வரி விதிப்பு 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
அழகுசாதனப் பொருட்கள் மற்றும் வாசனை திரவியங்களின் வரி விதிப்பு 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைப்பு.
டேபிள்வேர், கிச்சன்வேர், மற்ற வீட்டு உபயோகப் பொருட்களின் வரி விதிப்பு 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
பென்சில், ஷார்ப்பனர்களின் வரி 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைப்பு
இதே போன்று 27 இன்ச் வரையிலான டிவியின் வரி 31.3 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைப்பு
குளிர்சாதனப் பெட்டியின் வரி 31.3 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைப்பு
வாஷிங் மெஷினுக்கு விதிக்கப்பட்டு வந்த 31.3 சதவீத வரி 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
எலக்ட்ரிக்கல் பொருட்கள், மிக்சர், ஜூசர், வேக்கம் கிளீனர் இன்ன பிற பொருள்களின் வரி 31.3 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது
கீசர், ஃபேன், கூலர் ஆகியவற்றின் வரி 31.3 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
முக்கியமான மொபைல் போன்களுக்கு விதிக்கப்பட்டு வந்த 31.3 சதவீத வரி விதிப்பு, 12 சதவீதமாக குறைப்பு
இதே போன்று மரச்சாமான்களுக்கு விதிக்கப்பட்ட வரி விதிப்பை 25 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமா குறைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
No comments