ரூபாய் 150க்கு பாரம்பரிய இனிப்புகளுடன் தீபாவளி பரிசு பெட்டகம்! தமிழக அரசு விற்பனை. முன்பதிவு செய்யலாம்..
சுய உதவிக்குழுக்கள் மூலம் தயாரிக்கப்படும் பாரம்பரிய தீபாவளி இனிப்புகளுடன் தீபாவளி பரிசு பெட்டகம் விற்பனையை தமிழ்நாடு அரச தொடங்கி உள்ளது.
இதற்கு ஆர்டர் செய்வதற்கான தேதி அக்டோபர் 25 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, குறைந்த பட்சம் ரூபாய் 150க்கு முதல் அதிகபட்சம் ரூ.450 வரையில் தீபாவளி பலகாரங்களைக்கொண்ட தீபாவளி பரிசு பெட்டகம் விற்பனை செய்யப்படுகிறது. இதில், பாரம்பரியமான சிவப்பு அரிசி லட்டு, உலர் பழ லட்டு, கம்பு லட்டு, சோள லட்டு, ராகி லட்டு உள்ளிட்ட பல்வேறு வகையான லட்டுக்கள், முறுக்கு வகைகள் மற்றும் தஞ்சாவூர் பொம்மைகள், ஓவியங்கள் போன்ற கலைப்பொருட்கள் இடம்பெற்றுள்ளன.
தீபாவளி என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது பட்டாசு, அடுத்ததாக இனிப்புகள், அந்த வகையில் தீபாவளி பண்டிகையானது வருகிற அக்டோபர் 31ஆம் தேதி உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. தீபாவளியையொட்டி, அப்போது தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இனிப்புகளை வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். இதனால், நாடு முழுவதும் இனிப்புகள் தயாரிப்பதும், பட்டாசு விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. .
இந்த நிலையில், தமிழ்நாடு அரசு, சுய உதவிக்குழுக்கள் மூலம் தயாரிக்கும் இனிப்பு பொருட்களை விற்பனை செய்யும் வகையில் தீபாவளி பரிசு பெட்டகத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் இயக்குனர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்திட பல்வேறு விற்பனை வழிமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவற்றின் தொடர்ச்சியாக விழாக் காலங்களுக்கு ஏற்ற வகையில் சுய உதவிக் குழுக்களின் தரமான தயாரிப்புப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. தீபாவளியினை முன்னிட்டு தற்போது சுவையயும் தரமும் நிறைந்த பல்வேறு இனிப்பு மற்றும் கார வகை தின்பண்டங்களைக் கொண்ட 'மதி தீபாவளி பரிசுப் பெட்டகம்' (Mathi Diwali Gift Hampers) இணையதளம் மற்றும் கைபேசி எண் வாயிலாக மொத்தம் மற்றும் சிறிய அளவில் விற்பனை செய்யப்படுகிறது.
நவதானியங்களை கொண்ட இனிப்புகள்
இந்தப் பரிசுப் பெட்டகத்தில், சிவப்பு அரிசி லட்டு, உலர்பழங்கள் லட்டு, கம்பு லட்டு, சோள லட்டு, ராகி லட்டு. கருப்புக் கவுனி லட்டு, கருப்பு உளுந்து லட்டு, நரிப்பயிர் லட்டு, தினை லட்டு, சாமை வட்டு மற்றும் ஆவாரம் பூ வட்டு ஆகிய லட்டு வகைகள். சாமை முறுக்கு. தேங்காய் பால் முறுக்கு. அரிசி முறுக்கு, கை முறுக்கு ஆகிய கார வகைகளும் 23.10.2024 வரை விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், தீபாவளிப் பண்டிகைக்கு பரிசளிக்க ஏற்ற வகையில் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள், தஞ்சாவூர் ஓவியங்கள், மண்ணால் செய்யப்பட்ட விளக்குகள், கோரைப்புல்லில் செய்யப்பட்ட அலங்காரப் பொருட்கள் போன்றவையும் விற்பனை செய்யப்படுகின்றன. தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிட மற்றும் முன்பதிவு செய்திட '76038 99270' என்ற கைப்பேசி எண்ணை அழைக்கவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விலை விவரம்
மேலும் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் தரமான பொருட்களை வாங்கி பயன்படுத்தி, சுய உதவிக் குழுக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவிடுமாறு தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது. அழகிய பரிசு பெட்டியில் சிவப்பு அரிசி லட்டானது விற்பனைக்கு வந்துள்ளது.
அந்த வகையில் 100 கிராம் எடை கொண்ட லட்டானது 150 ரூபாய்க்கும், உலர் பழங்களை கொண்ட லட்டும் விற்பனைக்கு உள்ளது. 100 கிராம் உலர் லட்டானது 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் 320 கிராம் உடை கொண்ட உலர் பழங்களை கொண்டு தயாரிக்கப்பட்ட லட்டு பெட்டகத்தின் விலை 350 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கலை பொருட்கள் விற்பனை
இதே போல கம்பு சோளம் ஆகியவற்றின் மூலமாக செய்யப்பட்ட லட்டும் அரை கிலோ 450 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ராகி லட்டும் நவதானியங்களை கொண்டு செய்யப்பட்ட லட்டின் விலையும் அரை கிலோ 450 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கருப்பு கவுனி லட்டு, திணை லட்டு, கை முறுக்கு, பால் முறுக்கு அரிசி முறுக்கு போன்ற தீபாவளி பரிசு பெட்டகங்களும் தயாராக உள்ளது. மேலும் கலைப் பொருட்கள் கொண்ட தீபாவளி பரிசு பெட்டகமும் தீபாவளி பண்டிகையையொட்டி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments