நெல்லை ஜல் நீட் அகாடமியில் பிரம்படி வாங்கிய பிள்ளைகள் அங்கேயே நீட் படிப்பார்கள்! பெற்றோர் மனு
நெல்லை ஜல் நீட் அகாடமியில் அடி வாங்கிய எங்கள் குழந்தைகள் அதே பயிற்சி மையத்தில் நீட் படிப்பார்கள் என அவர்களுடைய பெற்றோர், ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளனர்.
மேலும் மாணவர்களை அடித்தது குறித்து நாங்கள் ஏதும் புகார் அளிக்கவில்லை என்றும் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
நெல்லை ஜல் அகாடமியில் விடுதிகள் சட்டத்திற்கு புறம்பாக இயங்கி வருவதை அடுத்து அங்கிருந்த மாணவ, மாணவிகள் வெளியேற்றப்பட்டனர். இந்த நிலையில் நெல்லை ஆட்சியரை அந்த அகாடமியில் பயின்று வந்த மாணவர்களின் பெற்றோர் நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
அதில் அவர்கள் கூறியிருப்பதாவது: நெல்லை ஜல் அகாதெமியில் படிக்கும் எங்கள் குழந்தைகளை நீட் பயிற்சியாளர்கள் அடிப்பதாக நாங்கள் யாரும் புகார் அளிக்கவில்லை. நீட் மைய முன்னாள் வார்டனின் தனிப்பட்ட விரோதத்தால் இதை பெரிதுப்படுத்துகிறார்கள்.
அடி வாங்கிய எங்களது குழந்தைகள் அதே மையத்தில் நீட் படிப்பார்கள் என பெற்றோர் மனு அளித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த விடுதியே முறையான அனுமதி பெறாமல் செயல்பட்டு வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் விடுதி மூடப்பட்டதை அடுத்து அங்கிருந்த மாணவ, மாணவிகள் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டனர்.
கேரளாவை சேர்ந்தவர் ஜலாலுதீன் அகமது. இவர் சென்னையில் பிரபல நீட் பயிற்சி மையத்தில் பயிற்சியாளராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நெல்லையில் இரு ஆண்டுகளுக்கு முன்பு ஜல் நீட்அகாடமி என்ற பெயரில் பயிற்சி மையத்தை நடத்தி வந்தார். இந்த மையத்தில் கடந்த ஆண்டு 12 பேருக்கு அரசு மருத்துவக் கல்லூரியில் சீட் கிடைத்ததாக தெரிகிறது.
இதையடுத்து இங்கு ஏராளமான மாணவர்கள் சேர்ந்தனர். அவர்களிடம் இருந்து நீட் பயிற்சிக்கு ரூ 60 ஆயிரம் முதல் ரூ 80 ஆயிரம் வரை கட்டணம் வசூல் செய்யப்படுவதாகவும் தெரிகிறது. இதையடுத்து புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல், தேனி, நாகர்கோவில், நெல்லை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் படித்து வந்தனர்.
இங்கு ஆண்கள், பெண்களுக்கு தனித்தனி விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு தினமும் 12 மணி நேரத்திற்கு மேலாக பயிற்சி கொடுப்பதாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வகுப்பறையில் மாணவன் ஒருவர் தூங்கியதாக தெரிகிறது. இதனால் அந்த மாணவனை நீட் பயிற்சியாளர் பிரம்பால் தாக்கிய வீடியோ வெளியானது.
மேலும் அந்த மாணவரின் உடல் முழுவதும் ரத்த காயம் ஏற்பட்டிருந்தது. அது போல் மாணவி மீது செருப்பை வீசிய காட்சிகளும் பதிவாகியுள்ளன. இந்த சிசிடிவி காட்சிகள் காவல் துறையினருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. புகாரின் பேரில் நீட் பயிற்சி மையத்தின் உரிமையாளரை காவல் துறையினர் தேடி வருகிறார்கள்.
சமூக நலத் துறை, மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் பெற்றோர்கள், நெல்லை ஆட்சியரை சந்தித்து, "தங்கள் பிள்ளைகள் மீது தாக்குதல் நடத்துவதாக நாங்கள் யாரும் புகார் அளிக்கவில்லை, எங்கள் பிள்ளைகள் அந்த மையத்திலேயே நீட் படிப்பார்கள்" என மனு அளித்துள்ளனர்.
No comments