40 வயதிற்குள். வேலை இல்லாத நபர்களுக்கு தமிழக அரசு வழங்கும் மாதம் தோறும் உதவித்தொகை.! முழு விவரம்:
சேலம் மாவட்டத்தில் உள்ள வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கூறியதாவது; படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் அனைத்துவகை மாற்றுத்திறனாளி இளைஞர்களிடமிருந்து வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கான விண்ணப்பங்கள் தற்பொழுது சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பெறப்படுகின்றன.
பத்தாம் வகுப்பு (தோல்வி), பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்கும் மேலான கல்வித்தகுதிகளை பெற்றவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, பதிவினை தொடர்ந்து புதுப்பித்து, ஐந்தாண்டுகள் நிறைவடைந்த பின்னர் வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கும். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓர் ஆண்டு நிறைவடைந்த மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கும் தமிழக அரசால் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000/- க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். மேலும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மனுதாரர்கள் 45 வயதிற்குள்ளும், இதர இனத்தைச் சார்ந்தவர்கள் 40 வயதிற்குள்ளும் இருத்தல் வேண்டும். மாதமொன்றுக்கு பத்தாம் வகுப்பு தோல்விக்கு ரூ.200/- பத்தாம் வகுப்பு தேர்ச்சிக்கு ரூ.300/- மேல்நிலைக் கல்வி தேர்ச்சிக்கு ரூ.400/- பட்டப்படிப்பு தேர்ச்சிக்கு ரூ.600/- வீதம் காலாண்டிற்கு ஒருமுறை பயனாளிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு பத்தாம்வகுப்பு தோல்வி மற்றும் தேர்ச்சிக்கு ரூ.600/- மேல்நிலை கல்வி தேர்ச்சிக்கு ரூ.750/- மற்றும் பட்டப்படிப்பு தேர்ச்சிக்கு ரூ.1,000/-வீதம் மாதந்தோறும் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.
பொறியியல், மருத்துவம், கால்நடை மருத்துவம், விவசாயம், சட்டம் போன்ற தொழிற் பட்டப் படிப்புகள் படித்தவர்கள் மற்றும் அரசின் பிறதுறை சார்ந்த நலத்திட்டங்களின் கீழ் உதவித்தொகை பெற்றுவரும் பயனாளிகள் ஆகியோருக்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கப்படமாட்டாது. உதவித்தொகை விண்ணப்பபடிவம் பெற விரும்பும் மனுதாரர்கள். தங்களின் வேலைவாய்ப்பு அடையாள அட்டையினை ஆதாரமாக காண்பித்து. சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் விண்ணப்பங்களை அனைத்து அலுவலக வேலை நாட்களிலும், இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் அல்லது www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் இத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே பயன்பெற்றவர்கள் மீள விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்களாவார்கள்.
அக்டோபர் 2024 முதல் டிசம்பர் 2024 முடிய உள்ள காலாண்டிற்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் நவம்பர் மாதம் இறுதிக்குள் அனைத்து அலுவலக வேலை நாட்களிலும் சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் அனைத்து அசல் கல்வி சான்றிதழ்கள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கணக்குப்புத்தகத்துடன் நேரில் வந்து விண்ணப்பிக்கலாம்.
No comments