Breaking News

குடையை மறக்காதிங்க.. தமிழகத்தில் 30ம் தேதி வரை மழை இருக்கு.. இன்று 17 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்

 


வளிமண்டல சுழற்சி உள்ளிட்ட காரணங்களால், தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த கனமழையானது வரும் 30ம் தேதி வரை நீடிக்கும் என்றும் வானிலை மையம் அறிவித்திருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவி கொண்டிருக்கிறது.. இந்நிலையில் டானா புயல் உருவெடுத்தது..

டான புயல்: மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலை கொண்டிருந்த டானா புயல், வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, மத்திய மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், நேற்று இரவு 11.30 மணி அளவில் தீவிர புயலாக வலுப்பெற்றது. இது மேலும் வடக்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடற்கரை பகுதிகளில், பூரி - சாகர் தீவுகளுக்கு இடையே, பிதர்கனிகா மற்றும் தாமரா அருகே மிகத்தீவிர புயலாக, இன்று காலை கரையைக் கடந்தது.

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதையொட்டி தமிழகத்தில் இன்று நல்ல மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்திருந்தது.. இதுகுறித்து வெளியிட்ட அறிக்கை இதுதான்:

குமரிக்கடல்: "மத்திய கிழக்கு வங்கக்கடலில் உருவான, 'டானா' புயல், படிப்படியாகவலுவடைந்து, தீவிர புயலாக மாறியுள்ளது. இது, வடக்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, ஒடிசா -மேற்கு வங்காளம் இடையே, பூரி - சாகர் தீவுகளுக்கு இடையில், இன்று காலை அதி தீவிர புயலாக கரையை கடக்கும்.

குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நிலவிய, வளி மண்டல சுழற்சி அரபிக்கடல் நோக்கி நகர்ந்துள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல், அதை ஒட்டிய லட்சத்தீவு கடல் பகுதியில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில், இன்று இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும், 30ம் தேதி வரை மழை தொடர வாய்ப்புள்ளது.

கடல் கொந்தளிப்பு: நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பெரம்பலுார், அரியலுார், நாமக்கல், கரூர் மாவட்டங்களில், ஒரு சில இடங்களில், இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது. இதற்கான, மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு, வானம் மேகமூட்டமாக காணப்படும், ஒரு சில இடங்களில், இடி மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

மீனவர்கள்: டானா புயல் வலுவடைந்து வருவதால், மத்திய கிழக்கு, மத்திய மேற்கு, வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், இன்று மணிக்கு 110 முதல், 115 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும். கடல் கொந்தளிப்பாக இருக்கும் என்பதால், இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்" என்று கூறப்பட்டுள்ளது.

No comments