365 நாட்களில் தீபாவளிக்கு மட்டுமே திறக்கப்படும் அதிசய கோயில் பற்றி தெரியுமா? எங்கு இருக்கிறது?
ஒரு வருடம் கழித்து நேற்று திறக்கப்பட்ட ஹாசனாம்பா தேவி கோயிலில் பொதுமக்கள் தரிசனம் செய்ய 24 மணி நேரமும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஹாசன் மாவட்டத்தின் கடவுளான ஸ்ரீ ஹாசனாம்பா தேவி கோயிலின் கதவுகள் இந்த ஆண்டு பஞ்சாங்கத்தின் படி நேற்று (வியாழன்) மதியம் 12:15 மணிக்கு கருவறை முன் வாழைத்தண்டு வெட்டப்பட்டு திறக்கப்பட்டது. நவம்பர் 3 வரை பக்தர்கள் தேவியை தரிசிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆதிச்சுஞ்சனகிரி மகாசம்ஸ்தான மடத்தின் ஸ்ரீ நிர்மலானந்தநாத சுவாமிகள், தும்கூரின் சித்தகங்கா மடத்தின் ஸ்ரீ சித்தலிங்க சுவாமிகள், மாவட்ட பொறுப்பு அமைச்சர் கே.என். ராஜண்ணா, நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரேயஸ் எம். படேல் மற்றும் பிற பிரமுகர்கள் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில், அரச வம்சத்தைச் சேர்ந்த நரசிம்மராஜ அரசு கருவறை முன் உள்ள வாழைத்தண்டை வெட்டி, திருவிழாவை தொடங்கி வைத்தார்.
இந்த வருடம் ஹாசனாம்பா தேவியை தரிசிக்க 24 மணி நேரமும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எந்தவித தடையும் இன்றி பக்தர்கள் எளிதில் தரிசனம் செய்யலாம். முதல் நாளான வியாழக்கிழமை பொதுமக்களுக்கு கோயிலுக்குள் நுழைய அனுமதி இல்லை. இருந்தபோதிலும், பக்தர்கள் ஹாசனாம்பா தேவியை தரிசிக்க குவிந்தனர். இன்றிலிருந்து பொதுமக்களுக்கு கோயிலுக்குள் நுழைய அனுமதி வழங்கப்படும்.
சனாதன தர்மத்தில் பல அற்புதங்கள் பழங்காலம் முதலிருந்தே காணப்படுகின்றன. இந்து மதத்தின் படி புகழ்பெற்ற அதிசய கோயில்கள் ஏராளமாக உள்ளன. அவற்றில் ஒன்று தான் கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் உள்ள ஹாசனாம்பா கோயில். இந்த கோயில் அதிசயங்களில் ஒன்று. ஏனென்றால், 365 நாட்களில் ஒரு முறை மட்டுமே இந்த கோயில் திறந்திருக்கும். அதன் பிறகு இந்த கோயிலின் நடை சாத்தப்பட்டிருக்கும்.
வருடத்திற்கு ஒரு முறை என்றால் அதுவும் தீபாவளி அன்று திறக்கப்பட்டு 7 நாட்களுக்கு பிறகு விளக்குகள் ஏற்றி, பூக்கள் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டு, கோயிலின் நடை சாத்தப்படும். அதன் பிறகு மீண்டும் 2025 ஆம் ஆண்டு தீபாவளியன்று தான் கோயில் மீண்டும் திறக்கப்படும். அப்போது வரையில் கோயிலில் ஏற்றி வைக்கப்படும் விளக்கு அணையாமல் எரிந்தபடியே இருக்குமாம். மேலும், பூக்களும், பிரசாதங்களும் அப்படியே இருக்குமாம். இது தான் கோயிலின் ஆச்சரியமும், அதிசயமுமாக பார்க்கப்படுகிறது.
பொதுவாக பூக்களாக இருந்தாலும் சரி, பிரசாதமாக இருந்தாலும் சரி மறுநாள் வாடிப்போகும். கெட்டுப் போகும். ஆனால், கோயில் ஒருவருட காலத்திற்கு பிறகு திறக்கப்பட்டாலும் பூக்களும், பிரசாதமும் அப்படியே இருப்பது தான் அதிசயம்.
பெங்களூருவிலிருந்து 180 கிமீ தொலைவில் இந்த கோயில் அமைந்துள்ளது. 12ஆவது நூற்றாண்டு காலத்தில் கட்டப்பட்ட கோயில் என்று சொல்லப்படுகிறது. இந்த இடம் முன்பு சிம்ஹாசனபுரி என்று அழைக்கப்பட்டது. பல சிறப்புகளையும், புராணங்களையும் இந்த கோயில் கொண்டுள்ளது.
பழங்காலத்தில் அந்தகாசுரன் என்ற ஒரு அரக்கன் வாழ்ந்து வந்ததாகவும், கடுமையான தவத்தின் பலனாக பிரம்மாவிடமிருந்து கண்ணுக்கு தெரியாத வரத்தைப் பெற்றதாகவும் கதைகள் கூறுகின்றன.
வரத்தை பெற்றதன் மூலமாக முனிவர்கள், ரிஷிகள், மகான்களையும், மக்களையும் துன்புறுத்தி வந்துள்ளான். இதையடுத்து தங்களை காத்தருளும்படி முனிவர்கள், ரிஷிகள், மகான்கள் சிவபெருமானிடம் முறையிட்டுள்ளனர். அந்த அரக்கனின் ஒவ்வொரு துளி ரத்தமும் பேயாக மாறிடும். ஆதலால், சிவபெருமான் தவம் மூலமாக யோகேஸ்வரி தேவியை உருவாக்கி அந்த அரக்கனை அழித்தார். இதுவே கோயிலின் வரலாறு.
ஒருவருடம் கழித்து திறக்கப்படும் கோயில்:
ஒரு வருடம் கழித்தும் பூக்கள் புதியதாக இருக்கும். விளக்கு எரிந்து கொண்டே இருக்கும். தீபாவளியன்று 7 நாட்கள் திறக்கப்படும் கோயிலொல் பலிபாட்யமி கொண்டாடப்பட்ட 3 நாட்களுக்குப் பிறகு திரும்பவும் மூடப்படும். கோயில் திறக்கப்படும் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மா ஜகதம்பாவை தரிசனம் செய்து வழிபாடு செய்வார்கள்.
கோயில் கதவுகள் மூடப்பட்ட நாளன்று கருவறையில் நெய் தீபம் ஏற்றப்படும். மேலும், கருவறையானது வண்ண மலர்களால் அலங்கரிக்கப்படும். அரிசியால் செய்யப்பட்ட உணவுகள் பிரசாதமாக படைக்கப்படும். ஒரு வருடத்திற்கு பிறகு மீண்டும் கோயில் திறக்கும் போது தீபம் எரிந்து கொண்டே இருப்பதாகவும், பூக்கள் அப்படியே இருப்பதாகவும் பிரசாதமும் புதியதாக இருப்பதாகவும் உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.
No comments