ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் போலி நீட் சான்றிதழ்: வடமாநில மாணவர் கைது
ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் இயங்கி வரும் மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லுரியில் மாணவர் சேர்க்கைக்கு போலி நீட் சான்றிதழை அளித்த வட மாநில மாணவரை போலீஸார் கைது செய்தனர்.
ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் மதுரை எய்ம்ஸ் கல்லூரி தற்காலிகமாக இயங்கி வருகிறது. நீட் கவுன்சிலிங் மூலம் மாணவர் சேர்க்கை நிறைவடைந்த நிலையில், இமாச்சல பிரதேசம் மாநிலம் மாண்டி மாவட்டத்தைச் சேர்ந்த மகேந்திர சிங் என்பவரின் மகன் அபிஷேக் (22) என்ற மாணவர் தனது தந்தையுடன் முதலாம் ஆண்டு மருத்துவ படிப்பில் சேருவதற்காக வந்துள்ளார்.
மாணவர் அபிஷேக்கின் சான்றிதழ்களை சரிபார்த்த எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி நிர்வாகத்தினர் சான்றிதழ் மீது சந்தேகம் ஏற்பட்டு கேணிக்கரை போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். போலீஸார் விசாரணையில், அபிஷேக் இரண்டு முறை நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால், மூன்றாவது முறையாக நீட் தேர்வில் 720 மதிப்பெண்ணிற்கு வெறும் 60 மார்க் எடுத்ததால் தனது தந்தைக்கு தெரியாமல் போலியான நீட் தேர்வு சான்றிதழ் தயாரிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.
தொடர்ந்து ராமநாதபுரம் கேணிக்கரை போலீஸார் அபிஷேக் மீது ஆறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். அரசு மருத்துவக்கல்லுரியில் மாணவர் சேர்க்கையில் போலி சான்றிதழுடன் வந்து வட மாநில மாணவர் ஒருவர் கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments