Breaking News

பென்ஷன் வாங்குபவர்களுக்கு குட் நியூஸ்... வீடு தேடி வருகிறது டிஜிட்டல் லைஃப் சர்டிபிகேட்... அஞ்சல்துறை சிறப்பு ஏற்பாடு!

 


ய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு டிஜிட்டல் உயிர் வாழ் சான்றிதழ் தபால்துறை மூலம் வீடு தேடி வந்து வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து தூத்துக்குடி கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள், ஊழியர் வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியதாரர்கள், மாநில அரசு ஓய்வூதியதாரர்கள், ராணுவ ஓய்வூதியதாரர்கள், மற்றும் இதர ஓய்வூதியதாரர்கள், நவம்பர் 1ம் தேதி முதல் தங்கள் உயிர்வாழ் சான்றிதழைச் சமர்ப்பிக்கும் படி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், ஓய்வூதியதாரர்கள் வீட்டிலிருந்தபடியே, டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை, தபால்காரர்கள் மூலம் சமர்ப்பிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

நேரில் சென்று உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க ஓய்வூதியதாரர்கள் படும் சிரமங்களை தவிர்க்கும் விதமாக, அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் "இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி", ஓய்வூதியதாரர்கள் வீட்டிலிருந்தபடியே, தபால்காரர்கள் மூலம் பயோமெட்ரிக் அல்லது FACE RD ஆப் முறையை பயன்படுத்தி, டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் (ஜீவன் பிரமான்) சமர்ப்பிக்க ஏற்பாடு செய்துள்ளது. இதற்கு சேவை கட்டணமாக ரூ.70/- தபால்காரரிடம் செலுத்த வேண்டும்.

ஓய்வூதியதாரர்கள் தங்கள் பகுதி தபால்காரரிடம் ஆதார், மொபைல் எண், பி.பி.ஓ. எண் மற்றும் ஓய்வூதிய கணக்கு விவரங்களை தெரிவித்து கைவிரல் ரேகை பதிவு செய்தால் ஒருசில நிமிடங்களில் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க முடியும். இந்த சேவையை பெறுவதற்கு ccc.cept.gov.in/covid/request, aspx என்ற இணையதளம் அல்லது Postinfo என்ற செயலி மூலமாகவோ கோரிக்கை கொடுத்தால் உங்கள் பகுதி தபால்காரர் உங்களை தேடி வந்து தேவையை பூர்த்தி செய்து தருவார். எனவே ஓய்வூதியதாரர்கள் இந்த வசதியை பயன்படுத்தி வீட்டில் இருந்தபடியே தங்கள் பகுதி தபால்காரரிடம் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பித்து பயன்பெறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments