Breaking News

வெண்டைக்காய் வாங்குனா.. ஒருமுறை இப்படி பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க

 


உங்கள் வீட்டில் இருப்பவர்கள் வெண்டைக்காய் சாப்பிடமாட்டார்களா? அதற்கு வெண்டைக்காயின் வழுவழுப்புத்தன்மை தான் காரணமா?

அப்படியானால் அந்த வழுவழுப்புத்தன்மை இல்லாதவாறு சுவையாக வெண்டைக்காயை செய்யுங்கள். அதுவும் வெண்டைக்காயைக் கொண்டு பொரியல் செய்தால், இன்னும் அற்புதமாக இருக்கும்.

வெண்டைக்காயின் வழுவழுப்பு நீங்க வேண்டுமானால், அத்துடன் ஒரு பொருளை சேர்த்து பிரட்டி ஊற வைத்தால் போதும். அது என்ன வென்பதை இந்த ரெசிபியை படித்து தெரிந்து கொள்ளுங்கள். முக்கியமாக இப்படி வெண்டைக்காய் பொரியலை செய்யும் போது, பிடிக்காதவர்கள் கூட கேட்டு வாங்கி சாப்பிட்டு காலி செய்துவிடுவார்கள்.

உங்களுக்கு வழுவழுப்பில்லாத வெண்டைக்காய் பொரியலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெண்டைக்காய் பொரியல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* வெண்டைக்காய் - 1/2 கிலோ (பொடியாக நறுக்கியது)

* உப்பு - சுவைக்கேற்ப

* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

* புளிப்பில்லாத தயிர் - 2 டேபிள் ஸ்பூன்

* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

* கடுகு - 1 டீஸ்பூன்

* உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்

* வரமிளகாய் - 4

* கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை:

* முதலில் வெண்டைக்காயை நீரில் கழுவிவிட்டு, அதன் முனைகளை நீக்கிவிட்டு, பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

* பின்பு நறுக்கிய வெண்டைக்காயை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு, அத்துடன் சுவைக்கேற்ப உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், புளிப்பு இல்லாத தயிரை சேர்த்து கைகளால் நன்கு பிசைந்து, மூடி வைத்து 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.

* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்து, உளுத்தம் பருப்பு பொன்னிறமானதும், கறிவேப்பிலை மற்றும் வரமிளகாயை சேர்த்து வதக்க வேண்டும்.

* அதன் பின் ஊற வைத்துள்ள வெண்டைக்காயை சேர்த்து நன்கு 5 நிமிடம் மிதமான தீயில் வைத்து கிளறி விட வேண்டும்.

* பின் 5 நிமிடம் குறைவான தீயில் வைத்து ஈரப்பதம் போக வேக வைக்க வேண்டும்.

* ஒருவேளை உங்களுக்கு மொறுமொறுப்பாக வேண்டுமானால், இன்னும் ஒரு 10 நிமிடம் குறைவான தீயில் வைத்து, வேக வைத்து இறக்கினால், சுவையான வெண்டைக்காய் பொரியல் தயார்.

No comments