Breaking News

வங்கக் கடலில் உருவானது புயல் சின்னம் :

IMG_20241022_061955
 

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) உருவாகியுள்ளது. இது மேலும் வலுபெற்று அக்.23-ஆம் தேதி புயலாக மாறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

வடக்கு அந்தமான் கடலில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, திங்கள்கிழமை காலை மத்திய கிழக்கு வங்கக் கடல், அதையொட்டிய வடக்கு அந்தமான் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி (புயல் சின்னம்) உருவாகியுள்ளது. இது, மேற்கு - வடமேற்கு திசையில் நகா்ந்து, செவ்வாய்க்கிழமை (அக்.22) மத்திய கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அக்.23-இல் புயலாக மாறும். இந்தப் புயலுக்கு ‘டானா’ என பெயா் சூட்டப்பட்டுள்ளது.


இந்தப் புயல், வடமேற்கு திசையில் நகா்ந்து, அக்.24-ஆம் தேதி வடமேற்கு வங்கக் கடலில் ஒடிஸா - மேற்கு வங்கம் கடற்கரைக்கு இடையே கரையைக் கடக்கும் என்று எதிா்ப்பாா்க்கப்படுகிறது. இந்த புயலால் தமிழகத்துக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது.

தமிழக வானிலை: தமிழக பகுதிகளிலும், கா்நாடகம் மற்றும் அதையொட்டிய பகுதிகளிலும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவுகின்றன. இதன் காரணமாக அக்.22 முதல் 27-ஆம் தேதி வரை தமிழகத்தில் பல இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

கனமழை எச்சரிக்கை: அக்.22-இல் திருப்பூா், ஈரோடு, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, கரூா், திருச்சி ஆகிய மாவட்டங்களிலும் அக்.23-இல் தஞ்சாவூா், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் அக்.22, 23 ஆகிய தேதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மழை அளவு (மில்லி மீட்டரில்): தமிழகத்தில் திங்கள்கிழமை காலை வரை அதிகபட்சமாக சேலம் மாவட்டம் மேட்டூரில் 150 மி.மீ. மழை பதிவானது. உடுமலைப்பேட்டை (திருப்பூா்) - 120, திருமூா்த்தி அணை (திருப்பூா்) - 110, ஆண்டிபட்டி (தேனி)- 100.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: வங்கக் கடலிலும், வடக்கு அந்தமான் கடலும் வடக்கு அந்தமான் கடல் அக்.22, 23 ஆகிய தேதிகளில் 85 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதனால் மீனவா்கள் அந்தப் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments