Breaking News

3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை! தென்னகத்தை சுத்துப் போட்ட மேகங்கள்.. வெளுத்து வாங்கும் கனமழை!

 


தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை தீவிரமடைந்திருக்கும் நிலையில், மதுரை, திண்டுக்கல், தேனி, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.

இந்நிலையில் கனமழை எச்சரிக்கை காரணமாக நெல்லை, தேனி மற்றும் மதுரை கிழக்கு மற்றும் மதுரை வடக்கு ஆகிய இரண்டு வருவாய் வட்டங்களுக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

நேற்று வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைகொண்டிருந்த தீவிர புயல் (டானா), வடக்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (25.10.2024) அதிகாலை மணிக்கு இடையே வடக்கு ஒரிசா கடற்கரையில், பிதர்கனிகா மற்றும் தாமரா (ஒரிசா) பகுதிகளுக்கு அருகே தீவிர புயலாகவே கரையை கடந்தது.

இதன் காரணமாக பல இடங்களில் சுமார் 110 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியதால், பலத்த சேதமேற்பட்டது. இந்நிலையில் டானா புயலால் தமிழகத்திற்கு பாதிப்பு இல்லையெனினும், வளிமண்டல சுழற்சி காரணமாக மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்தே மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மதுரை மாவட்டத்தை பொருத்தவரை கடந்த ஆறு நாட்களாக காலை மாலை என இரண்டு நேரங்களிலும் அதிகப்படியான மழை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக மதுரை மற்றும் புறநகர் பகுதிகளில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இதற்கிடையே இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருப்பூர், கரூர், திருச்சிராப்பள்ளி, நாமக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.

சொன்னது போலவே இந்த மாவட்டங்களில் மாலை தொடங்கி இரவிலும் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தில் 3 தென் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தேனி மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், சுயநிதி தனியார் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார்.

இதேபோல கனமழை எச்சரிக்கை காரணமாக நெல்லை மாவட்டத்தில் பள்ளிகளுக்கும், மதுரை கிழக்கு மற்றும் மதுரை வடக்கு ஆகிய இரண்டு வருவாய் வட்டங்களுக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். குழந்தைகள், மாணவர்களின் பாதுகாப்பு கருதி விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கும் நிலையில் அறிவிப்பை மீறி பள்ளிகள் செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் சிறப்பு வகுப்புகள் என்ற பெயரில் மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்தால் பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

No comments