Breaking News

பள்ளி விழா / நிகழ்வு நடத்த உருவாக்கப்பட்டுள்ள வழிகாட்டுதலை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்! - பிரின்ஸ் கஜேந்திர பாபு

.com/

பள்ளிக் கல்வி முறையைச் சிதைக்கும் முயற்சியை தமிழ்நாடு அரசுப் பள்ளிக் கல்வித் துறை கைவிட வேண்டும்!

பள்ளி விழா / நிகழ்வு நடத்த உருவாக்கப்பட்டுள்ள வழிகாட்டுதலை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்!

பொதுப் பள்ளிக்கான மாநில மேடை 

அறிக்கை நாள் 05.12.2024

பள்ளியில் நடத்தப்படும் விழாக்கள் மற்றும் நிகழ்வுகளுக்காக, பள்ளிக் கல்வித் துறையால் உருவாக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்கள்,  பகுத்தறிவுத் தந்தை பெரியார் அவர்களின் சுயமரியாதை இயக்கத்தின் பெரும் போராட்டத்தின் விளைவாக, கர்மவீரர் காமராசர் ஆட்சிக் காலம் முதல் தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் பள்ளி முறைமையைச் சிதைக்கும் மிகப்பெரும் முயற்சியின் தொடக்கமாக  அமையும் என்பதைத் தமிழ்நாடு அரசு உணர வேண்டும்.

டிசம்பர் 6 அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 68வது நினைவு நாளை நாடு அனுசரிக்க உள்ளது.  அண்ணல் அம்பேத்கர் அவர்கள் டிசம்பர் 17, 1946 அன்று இந்திய அரசியல் சாசன நிர்ணய சபையில் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் நோக்கம் குறித்த விவாதத்தில் பங்கேற்றுப் பேசுகையில் "எது சட்டம், எது ஒழுக்கம் என்பதை அன்றைய தினம் ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்களே தீர்மானிப்பார்கள்.‌ இன்று ஒருவர் ஆட்சியில் இருக்கலாம். நாளை வேறொருவர் ஆட்சியில் இருக்கலாம். இன்று  இருப்பவருக்கு இருக்கும் பார்வை நாளை இருப்பவருக்கு மாறுபடலாம். அடிப்படை உரிமைகள் குறித்து தீர்மானிக்கும் உரிமையை அரசிடம் கொடுத்துவிட்டால் அன்றைய தேதியில் யார் ஆட்சியில் இருக்கிறார்களோ அவர்கள்தான் உரிமைகளைத் தீர்மானிப்பார்கள்" ("Obviously what is law, what is morality will be determined by the Executive of the-day and when the Executive may take, one view another Executive may take another view and we do not know what exactly would be the position with regard "to fundamental rights, if this matter is left to the Executive of the day.") என்ற மிகப் பெரும் எச்சரிக்கையை விடுத்தார்.

இந்த எச்சரிக்கையின் நோக்கம் என்ன? அரசுதான் நமது ஒவ்வொரு அசைவையும் தீர்மானிக்கும் என்றால், அன்றைய தினம் யார் ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறார்களோ அவர்களின் நோக்கத்தின் படிதான் எதையும் செய்ய எதிர்பார்ப்பார்கள். அன்றைய ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்களின் புரிதலின்படி எது நல்லதோ அதைத்தான் அனைவரும் நல்லது என்று சொல்லவேண்டிய சூழல் உருவாகும். இது மக்களாட்சி மாண்புகளுக்கு எதிரானது. சுதந்திர சிந்தனையை மழுங்கடித்துவிடும்.

அண்ணல் அம்பேத்கர் தந்துள்ள எச்சரிக்கை பள்ளிக் கல்வித் துறை உருவாக்கியுள்ள பள்ளி விழாக்கள் / நிகழ்வுகளுக்கான வழிகாட்டுதலுக்கு மிகவும் பொருத்தமாக அமைந்துள்ளது.

தனியார் பள்ளியில் நடந்த தேசிய மாணவர் படை (NCC) முகாம், முழுக்க முழுக்க பள்ளியின் சுயநலத்தின் விளைவாக, தனது விளம்பரத்திற்காக நடந்தது. அது சட்ட விரோதமானது.

பள்ளியின் முதல்வர் முறைப்படி தேசிய மாணவர் படை அலுவலகத்தில் விண்ணப்பித்து, தனது பள்ளி ஆசிரியர் ஒருவரை பயிற்சி மேற்கொள்ளச் செய்து, தேசிய மாணவர் படைப் பிரிவை முறைப்படி உருவாக்கி இருக்க வேண்டும். பள்ளியில் தேசிய மாணவர் படை உருவாக்கப்பட்டு செயல்படுவதற்கு முறைப்படி சான்றிதழைப் பள்ளி பெற்றிருக்க வேண்டும்.

அதற்குரிய அலுவலகங்களின் வழிகாட்டுதல் படியே எந்த முகாமும் நடத்திட வேண்டும். இவற்றைப் பின்பற்றாதது தனியார் பள்ளி நிர்வாகத்தின் தவறு.

தனியார் பள்ளி நிர்வாகங்கள் சட்டங்களை, விதிகளை, வழிகாட்டுதலை பல வகையிலும் மதிப்பதில்லை என்ற புகார் பல முறை எழுந்துள்ளது. தனியார் பள்ளிகள் சட்டத்தின் படி நடப்பதை அரசு கண்காணிக்க வேண்டும். சட்ட மீறல்கள் நடந்தால் பள்ளியை அரசு தனது நேரடி நிர்வாகத்தின் கீழ் நடத்த முன் வர வேண்டும்.

யாரோ ஒருவர் மிகவும் அபாயகரமாக அரசுப் பள்ளி வளாகத்தில் நடந்து கொண்டார் என்பதற்காக பள்ளி வளாகத்தின் சுதந்திரச் செயல்பாட்டையே முடக்குவது நியாயமற்றது. 

சென்னையின் இரண்டு பள்ளிகளில் நடந்த சம்பவத்தில் பேசியவர் ஆன்மீகமும் பேசவில்லை,  மத போதனையும் செய்யவில்லை. அறிவியலுக்குப் பொருந்தாத, மாணவர்கள் நலனுக்கு எதிரான வன்மத்தைக் கக்கிச் சென்றுள்ளார்.

ஆன்மீக அறிவுரைகள், மத போதனைகள் ஆகியவையும், வெறுப்புப் பேச்சும் வெவ்வேறானவை. இந்த வித்தியாசத்தை உணர வேண்டும்.

நடந்தது ஆன்மீகச் செயல்பாடுமன்று, மத போதனையுமன்று. வன்மத்துடன் நடந்த‌ வன்முறை என்று அந்தச் சம்பவத்தைக் கண்டிப்பதற்குப் பதிலாக பள்ளிகளின் கல்வியியல் சுதந்திரத்தையே (Academic Freedom)  பறிக்கின்ற வகையில் ஒரு வழிகாட்டுதலைத் தயாரிக்க அரசு முற்படுவது மிகவும் வேதனைக்குரியது.

வெறுப்புப் பேச்சு நிகழ்த்தப்பட்ட பள்ளியில், ஆசிரியர்கள் விழிப்புடன் இருந்திருந்தால், பேச்சின் போக்கை உணர்ந்தவுடன் அதைத் தடுத்திருக்க முடியும், அதே சம்பவம் அடுத்த பள்ளியில் நடந்திருக்காது.

அதிகாரிகள் சொல்வதற்குக் கட்டுப்பட்டவர்களாக  ஆசிரியர்களை முடக்கிய பின்னர், ஆசிரியர்கள் அமைதி காத்ததில் வியப்பேதும் இல்லை.

தவறு நடக்காமல் பார்த்துக் கொள்வது, தவறு நடந்தால் அத்தகைய சூழலை எவ்வாறு கையாள்வது ஆகியன குறித்து ஆசிரியர்களுடன் விவாதித்து, பொறுப்பை உணர்ந்து  சுயமான முடிவுகள் எடுக்க ஆசிரியர்களுக்குச் சுதந்திரத்தை வழங்குவதற்குப் பதிலாக, நிர்வாக ரீதியிலான அணுகுமுறையில் பள்ளிக் கல்வித் துறை உருவாக்கியுள்ள‌ வழிமுறைகள் உடனடியாகக் கைவிடப்பட வேண்டும்.

பள்ளி வளாகத்தில் எந்த அமைப்பை அனுமதிக்கலாம், எந்தெந்தத் தனி நபரை அனுமதிக்கலாம் என்பதை மாநில அளவில் அரசுச் செயலாளர்களை உள்ளடக்கிய குழுவும், மாவட்ட அளவில் அதிகாரிகளைக் கொண்ட குழுவும் முடிவு செய்யும் என்ற நிலை உருவானால், அதிகாரத்தில் இருப்பவர்களின் சிந்தனைக்கு, கருத்துக்கு ஒத்துப் போகும் அமைப்புகள், தனிநபர்கள் தவிர,  வேறு யாருக்கும் அனுமதி இருக்காது.

காவல் துறை, அதன் நுண்ணறிவுப் பிரிவு ஆய்விற்குப் பின்னர்தான் யாரொருவரும் 

பள்ளியில் நடக்கும் எந்த நிகழ்விற்கும் அழைக்க முடியும் என்பது கல்வியியல் செயல்பாட்டை, கல்வி வளாக ஜனநாயகத்தை முடக்கும் செயலாகும்.

ஆரோக்கியமான விவாதம் நடக்க வேண்டிய கல்வி வளாகங்களில் அரசு அனுமதிப்பவர்கள் தவிர வேறு யாரும் நுழையக்கூடாது, மாணவர்களுடன் விவாதிக்கக்கூடாது என்பது சுதந்திரமான கல்வியியல் (academic freedom) செயல்பாட்டிற்கு எதிரானது‌.

இன்றைய நாளிதழில் வெளியான செய்தியில் உள்ளதுபோல் தமிழ்நாடு அரசுப் பள்ளிக் கல்வித் துறை ஏதேனும் அரசாணை அல்லது வழிகாட்டுதல்கள் வெளியிட முடிவு செய்திருந்தால் அத்தகைய முடிவுகளைக் கைவிட வேண்டும்.

மாணவர்கள் நலன் கருதி பள்ளி வளாகச் செயல்பாட்டில் யாரை ஈடுபடுத்துவது என்று முடிவெடுக்கும் பொறுப்பை பள்ளியின் தலைமை ஆசிரியருக்கே வழங்க வேண்டும்.

அதிகாரிகள், அதிலும் காவல் துறை பள்ளி வளாகச் செயல்பாடுகளைத் தீர்மானிக்க அனுமதிப்பது குழந்தைகளின் பாதுகாப்பு என்ற போர்வையில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் சுதந்திரமான கல்வியியல் செயல்பாட்டை முடக்கும் நடவடிக்கை, 21ம் நூற்றாண்டின் மெக்கார்திசம் (McCarthyism).

தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம் உருவாக்கித் தந்த திராவிடத் தத்துவத்திற்கு இத்தகைய நடவடிக்கைகள் ஏற்புடையன அல்ல என்பதைத் தமிழ்நாடு அரசு உணர வேண்டும்.

தமிழ்நாடு அரசுப் பள்ளிக் கல்வித் துறை உருவாக்கியுள்ள பள்ளி விழா / நிகழ்வு நடத்துவதற்கான வழிமுறைகளை (Guidelines) உடனடியாக அரசு திரும்பப் பெற வேண்டும் என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோருகிறது.

செய்தி :

திரு பு. பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு

பொதுச் செயலாளர்

பொதுப் பள்ளிக்கான மாநில மேடை

14-A, சோலையப்பன் தெரு,

தியாகராயர் நகர், சென்னை -  600 017

மின்னஞ்சல்: spcsstn@gmail.com

தொடர்பு எண்: 94456 83660

No comments