டிஎன்பிஎஸ்சி குரூப் 2 சம்பளம் எவ்வளவு தெரியுமா.. மொத்தம் உள்ள 18ல், 17 பதவிகளுக்கு பண மழை:
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் வெற்றி பெறுவோருக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா.. மொத்தம் உள்ள 18 பணியிடங்களில் 17 பதவிகளுக்கு சம்பளம் அதிகம் தரப்படுகிறது.
ஒரு பதவிக்கு மட்டுமே சம்பளம் குறைவாக இருக்கும். இதில் சில பதவிகளில் அதிகாரம் அதிகமாகும் சம்பளம் குறைவாகவும் இருக்கும். சில பதவிகளில் அதிகாரம் குறைவாகவும் சம்பளம் அதிகமாக இருக்கும் என்கிறார்கள்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த ஜூன் 20ம் தேதி, டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வுகள் குறித்து அறிவிப்பாணை வெளியிட்டது. அதில் "தமிழ்நாட்டின் அரசு துறைகளில் உள்ள உதவி ஆய்வாளர், துணை வணிகவரி அலுவலர், துணைப் பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், தனிப்பிரிவு அலுவலர், உதவிப்பிரிவு அலுவலர், வனவர் என 507 குரூப் 2 பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.
இதேபோல் மேலாண்மை இயக்குநரின் நேர்முக உதவியாளர், முதுநிலை ஆய்வாளர், தணிக்கை ஆய்வாளர், உதவி ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், மேற்பார்வையாளர், இளநிலைக் கண்காணிப்பாளர், உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 1,820 குரூப் 2ஏ பணியிடங்களுக்கும் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். ஒட்டு மொத்தமாக குரூப் 2, குரூப் 2 ஏவில் 2,327 பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு 14.9.2024 அன்று நடைபெறும். இதற்கு விண்ணப்பிக்க ஜூலை 19ம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டது. நேற்றுடன் நிறைவு பெற்ற நிலையில், லட்சக்கணக்கனோர் விண்ணப்பித்துள்ளனர்.
இந்த பணியிடங்களுக்கு முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் வனவர் பதவிகளுக்கு முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் உடற்திறன் சோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.
தேர்வுகள் எப்படி: குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வு முதல்நிலை மற்றும் முதன்மை என இரண்டு கட்டமாக டிஎன்பிஎஸ்சி நடத்த உள்ளது. முதல்நிலை தேர்வினை கொள்குறி வகையில் (Objective Type) நடத்தப்படும். அதனைத்தொடர்ந்து, தேர்ச்சி அடைப்பவர்களுக்கு முதன்மை தேர்வு குரூப் 2 மற்றும் 2ஏ-விற்கு தனிதனியாக நடத்தப்படும்.
குரூப் 2 தேர்வு என்பது 2024ம் ஆண்டினை பொறுத்தவரை தமிழ்மொழி தகுதி தாள் மற்றும் பொது அறிவு தாள் என இரண்டு தாள்களுடன் முதன்மை தேர்வு நடைபெற உள்ளது. தமிழ் மொழி தாள் பத்தாம் வகுப்பு தரத்திலும், பொது அறிவு தாள் பட்டப்படிப்பு தரத்திலும் நடத்தப்படும்.
குரூப் 2ஏ தேர்வு என்பது முதன்மை தேர்வு தமிழ் மொழி தகுதி தாள் மற்றும் பொது அறிவு, பொது நுண்ணறிவும் பகுத்தறிதலும், மொழிப்பாடம் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு நடத்தப்படும். தமிழ் மொழி தகுதி தாள் பத்தாம் வகுப்பு தரத்தில் நடத்தப்படும். இரண்டாம் தாள், பொது அறிவு தாள் 50 % டிகிரி தரத்திலும், 20% பத்தாம் வகுப்பு தரத்திலும், மொழி பிரிவு 30% பத்தாம் வகுப்பு தரத்திலும் (Objective)முறையில் நடத்தப்படும்.
குரூப் 2 மற்றும் 2ஏ ஆகிய இரண்டு தேர்வர்களுமே முதன்மை தேர்வுகளில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இப்பணியிடங்களுக்கு நேர்காணல் கிடையாது. எனவே நேர்மையாக படித்தாலே கண்டிப்பாக ஜெயித்து அதிகாரியாகிவிட முடியும்.
டிஎஸ்பிஎஸ் குரூப் 2 தேர்வர்கள் தேர்வில் வென்றால், தமிழ்நாட்டின் தொழிலாளர் உதவி ஆய்வாளர், வனவர், உதவிப் பிரிவு அலுவலர், இந்த முறை உதவி ஆய்வாளர்,துணை வணிக வரி அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சிறைச்சாலைகள் மற்றும் சீர்திருத்த சேவைகள் துறையில் நன்னடத்தை அலுவலர், பத்திரப்பதிவு துறையில் சார் பதிவாளர், புலனாய்வுப் பிரிவு & காவல் ஆணையர் அலுவலகம் மற்றும் குற்றப் புலனாய்வுத் துறையின் சிறப்புப் பிரிவு ஆகியவற்றில் சிறப்பு கிளை உதவியாளர், விஜிலென்ஸ் மற்றும் லஞ்ச ஒழிப்பு துறையில் சிறப்பு உதவியாளர் போன்ற பணியிடங்களில் சேரலாம்.
அதேபோல் டிஎஸ்பிஎஸ் குரூப் 2ஏ தேர்வர்கள் தமிழ்நாட்டில் நகராட்சி நிர்வாகத் துறையில் நகராட்சி ஆணையர் தரம்-II, தலைமை செயலகத்தில் பல்வேறு பிரிவுகளில் உதவி பிரிவு அலுவலர், வருவாய் துறையில் வருவாய் உதவியாளர், டவுன் பஞ்சாயத்து துறை நிர்வாக அதிகாரி, தலைமை செயலகத்தில் ஸ்டெனோ-டைப்பிஸ்ட் , தலைமை செயலகத்தில் எழுத்தர், கூட்டுறவு சங்கங்கள் துறை துறையில் கூட்டுறவு சங்கங்களின் மூத்த ஆய்வாளர், உள்ளூர் நிதி தணிக்கை துறையில் தணிக்கை ஆய்வாளர், வேளாண் சந்தைப்படுத்தல் மற்றும் வேளாண் வணிகத் துறையில் மேற்பார்வையாளர் / இளநிலை கண்காணிப்பாளர், சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் வார்டன், இந்து சமய மற்றும் அறநிலையத்துறை நிர்வாகத் துறையின் தணிக்கை பிரிவில் தணிக்கை ஆய்வாளர், தமிழ்நாடு மாநில திட்டக்குழு கீழ் பிரிவில் திட்டமிடல் இளைய உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களில் அமருவார்கள்.
குரூப் 2 தேர்வர்களுக்கு சம்பளம் எவ்வளவு: இதில் நகராட்சி கமிஷனர் பணிக்கு 44000 ரூபாய் (லெவல் 16ல்) வேலையில் சேரும் போது கிடைக்கும். இதற்கு அடுத்தபடியாக சார்பதிவாளருக்கு 46000 சம்பளம் ஆரம்பத்திலேயே கிடைக்கும். இதனில் நகராட்சி கமிஷனரைவிட சார் பதிவாளருக்கு சம்பளம் அதிகம் என்றாலும், அதிகார ரீதியாக பார்க்கும் போது, நகராட்சி கமிஷனர் பணிக்கு தான் பவர் அதிகம். எனவே பணியிடத்தில் நிறைய மதிப்பெண் எடுத்தவர்கள் நகராட்சி கமிஷனர் பதவியைத்தான் தேர்வு செய்வார்கள். நகராட்சி கமிஷனருக்கு வேலையில் சேரும் போதே தனி கார் கொடுப்பார்கள்..
தமிழ்நாட்டின் பல்வேறு அரசு துறைகளில் உதவிப் பிரிவு அலுவலர் பணியிடங்களில் வேலைக்கு சேருவோருக்கு 44000 சம்பளம் கிடைக்கும். அடுத்தாக கூட்டுறவு சங்கங்கள் துறை , வேளாண் துறை உள்பட பல்வேறு துறைகளில் அதிகாரிகளாக சேருவோருக்கு சேரும் போதே 40000 சம்பளமாக கிடைக்கும். அடுத்ததாக வருவாய் துறையில் வருவாய் உதவியாளர் பணிக்கு 24000 ரூபாய் தான் ஆரம்ப சம்பளம் கிடைக்கும்.
இந்த வேலை மாவட்ட நிர்வாகம் தொடர்பான வேலை, சம்பளம் குறைவாக இருந்தாலும் அதிகாரம் அதிகம் உள்ள துறையாகும். இதில் பதவி உயர்வு பெற்றால் வட்டாட்சியர் ஆகலாம். அதற்கு பிறகு கோட்டாட்சியர் ஆகி, கடைசியில் ஐஏஏஸ் கேடர் வரை கூட அடைய முடியும். இந்த பதவியையும் பலர் விரும்புகிறார்கள். குரூப் 2 தேர்வில் மொத்தம் உள்ள 18 வேலைகளில் 17 வேலைகளில 40000க்கு மேல் தாள் சம்பளம் கிடைக்கும். அதாவது சம்பளம் மட்டுமே 40000 உங்களுக்கு அப்படியே கிடைக்கும். குரூப் 4ல் 20000 என்ற அளவிலும், அதேநேரம் குரூப் 1 தேர்வில் வெல்பவர்களுக்கு 80000 என்கிற அளவிலும் சம்பளம் கிடைக்கும். அதேநேரம் குரூப் 2 ஏ தேர்வில் உள்ள பணியிடங்களுக்கு 25000 முதல் 28000 வரை கைக்கு சம்பளமாக கிடைக்கும்.
No comments