பெருமாளுக்கு கடன் கொடுத்தவர் குபேரன்! அவரை செல்வந்தர் ஆக்கியது யார் தெரியுமா? சுவாரஸ்யமான கதை:
குபேரனை லட்சுமி குபேரன் என அழைத்தது ஏன்? பெருமாளுக்கே கடன் கொடுத்த குபேரனை செல்வந்தர் ஆக்கியது யார் தெரியுமா?
வாழ பிறந்தவனுக்கு வடக்கு என்ற பழமொழி உருவானது எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
இதுகுறித்து குவோராவில் ரத்தினம் வடிவேல் சேகர் கூறியிருப்பதாவது: திருப்பதி ஏழுமலையான் திருமணத்துக்கு கடன் கொடுத்தவர் குபேரன் என்று புராணங்கள் கூறுகின்றன. சிவபெருமான், குபேரன் மீது கருணை கொண்டு, வடக்கு திசைக்கு அதிபதியாக்கி, சங்கநிதி, பத்ம நிதியை காக்கும் பொறுப்பை இவரிடம் ஒப்படைத்தார். இதனால் 'வாழப் பிறந்தவனுக்கு வடக்கு' என்ற பழமொழி உருவானது.
குபேரன் நீங்காத செல்வத்தை அள்ளித் தருபவர். ஆனால் செல்வத்துக்கு கடவுள் மகாலட்சுமி. செல்வத்தை பக்தர்களுக்கு முறையாக பகிர்ந்து அளிக்க அவர் பணித்தார். எனவே தான் குபேரன் 'லட்சுமி குபேரன்'என்று அழைக்கப்படுகிறார்.
குபேரனுக்கு ஏற்பட்ட சாபத்தினால் நாடு, நகரம், பொன், பொருள் அனைத்தையும் இழந்து நின்ற போது, லட்சுமி தேவியை வணங்கினார்.
அவரிடம் இருந்து எந்திரத்தை பெற்றார். அந்த எந்திரத்தை பயன்படுத்தி எளிய பூஜையை செய்தால் நல்லது கிடைக்கும். பொன், பொருள், செல்வம் நிறையும். வியாபாரம், தொழிலில் அபிவிருத்தி ஏற்படும். படைப்புக் கடவுளான பிரம்மாவின் மகன் புலஸ்தியருக்கு பிறந்தவர் விஸ்வரஸ். இவருக்கு இரண்டு மனைவிகள். விஸ்வரசனின் 2-வது மனைவி, கமாலி என்ற அரக்கனின் மகள் கேகசி. இவருக்கு பிறந்த குழந்தைகள் ராவணன், கும்ப கர்ணன், விபீஷணன், சூர்ப்பணகை.
குபேரன் இலங்கைக்கு அதிபராக இருந்து ஆட்சி செலுத்தி வந்தான். இது ராவணனுக்கு பிடிக்கவில்லை. குபேரனை போருக்கு அழைத்தான். அதில் தோல்வி அடைந்த அவன் சிவபெருமானை வேண்டி தவம் இருந்து வரம் பெற்றான். பின்னர் குபேரனை வீழ்த்தி இலங்கைக்கு மன்னர் ஆனான். குபேரன் தன் செல்வத்தை இழந்தான். மன அமைதி வேண்டி சிவபெருமானை நினைத்து தவம் இருந்தான். சிவபெருமான் அன்னை பார்வதி தேவியுடன் அவனுக்கு காட்சி அளித்தார்.
தேவியின் பேரழகில் மதி மயங்கி அவரையே பார்த்துக் கொண்டு இருந்தான். அகிலாண்ட நாயகியின் பேரொளியால் அவனது இடது கண் வெடித்து தெறித்தது. குபேரன் மனம் வருந்தி பார்வதி தேவியிடமும், சிவபெருமானிடமும் மன்னிப்பு கேட்டான். அறியாமல் செய்த பிழைக்காக சிவனும், பார்வதியும் குபேரனை மன்னித்தார்கள்.
'உனக்கு என்ன வரம் வேண்டும்?' என்று கேட்டார் இறைவன். 'ராவணனால் செல்வம் அனைத்தையும் இழந்து காட்டில் வசிக்கிறேன். என் செல்வத்தையாவது மீட்டு தாருங்கள்' என்று குபேரன், சிவபெருமானிடம் வேண்டினான். சிவபெருமான் உலகத்து செல்வம் முழுவதையும் அவனிடம் ஒப்படைத்து, உழைக்கின்ற மக்களுக்கு அவரவர் விதிப்பயனுக்கு ஏற்ப கொடுத்து வர கட்டளையிட்டார்.
மகாவிஷ்ணுவின் மனைவியான மகாலட்சுமி எட்டு விதமான சக்திகளை பெற்றாள். தனம், தானியம், சந்தானம் உள்ளிட்ட எட்டு வித சக்தி பெற்ற இவரது சக்திகள் அனைத்தையும் சங்க நிதி, பதும நிதி என்பவர்களிடம் ஒப்படைத்தாள். இவர்களை தன் கணக்குப் பிள்ளையாக நியமித்துக் கொண்டார் குபேரன். அவர்கள் குபேரனின் இருபுறமும் அமர்ந்தனர்.
குபேரன் அருளாட்சி நடத்த, அழகாபுரி என்ற பட்டினத்தை விசுவகர்மா உருவாக்கி கொடுத்தார். அங்கு அரண்மனையில் ஒரு ஆசனத்தில் தாமரை மலர் ஏந்தி, மீன் ஆசனத்தில் போடப்பட்ட, பட்டு மெத்தை மீது அமர்ந்து குபேரன் ஆட்சி செலுத்தி வந்தான். இவரது வலதுபுறத்தில் சங்க நிதியும், இடது புறத்தில் பத்ம நிதியும் அமர்ந்து இருப்பார்கள். சங்க நிதி கையில் சங்கு வைத்திருப்பார். இவர் தான் குபேரனிடம் செல்வம் பெற அனுமதி கொடுப்பார். இவரது கை வரத முத்திரை தாங்கி இருக்கும். தாமரையும், சங்கும் செல்வத்தின் அடையாளங்கள் ஆகும்.
தீபாவளி அன்று இரவில் குபேரனை விசேஷமாக, தங்க, வெள்ளி நாணயங்களை வைத்து வழிபடும் பழக்கம் உள்ளது.
'ஓம் ய க்ஷாய குபேராய
வைஸ்ரவணாய
தந தா ந்யாதி பதயே
தந்தாந்ய ஸம்ருத்திம்மே
தேஹி தேஹி தாபய ஸ்வாஹா' ஹா
என்ற குபேரனின் மந்திரத்தை தியானித்து அவனை வழிபட வேண்டும்.
சிவபெருமானின் உற்ற தோழரான குபேரனுக்கு என்று ஒரு மந்திர சதுக்கம் உண்டு. எந்தப் பக்கம் கூட்டினாலும் 72 வரும். இந்த சதுரம் குபேரனுக்கு உரியதாக நெடுங்காலமாக வழிபட்டு வருகிறது.
வியாழக்கிழமை மற்றும் பூரம் நட்சத்திரம் கூடிய நாளில் இந்த குபேர சக்கரத்தை அல்லது எந்திரத்தை பிரதிஷ்டை செய்வது நல்லது.
விரதம் இருப்பது எப்படி?: வாரத்தில் வெள்ளிக்கிழமை அமிர்தயோகம் அல்லது சித்தயோகம் உள்ள தினத்தில், இந்த விரதத்தை தொடங்கலாம். விரதம் இருப்பவர்கள் விரதம் கடைப்பிடிக்கும் தினத்துக்கு முதல் நாளே, பூஜை பொருட்களை தயார் செய்து கொள்ள வேண்டும். லட்சுமி படம், குபேரன் படம், குபேர எந்திரம் ஆகியவற்றை எடுத்து சுத்தம் செய்து கொள்ள வேண்டும். வெள்ளிக்கிழமைகளில் குளித்து விட்டு, நெற்றியில் பொட்டு வைத்து கொள்ள வேண்டும்.
தேங்காய், வெற்றிலை பாக்கு, சந்தனம், பழம், பூ, சாம்பிராணி, கற்பூரம், நவதானியம், தலைவாழை இலை ஆகியவற்றை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். நல்ல நேரத்தில் லட்சுமி, குபேரன், குபேர எந்திரத்துக்கு மஞ்சள், குங்குமம் வைத்து பூஜையில் வடக்கு திசையில் வைக்க வேண்டும்.
தலைவாழை இலையில் நவதானியத்தை ஒன்றாக கலக்காமல் சுற்றி வர பரப்பி வைக்க வேண்டும். அதன் நடுவில் ஒரு செம்பை வைத்து அதில் சுத்தமான தண்ணீரால் நிரப்பி அதில் கொஞ்சம் மஞ்சள் தூளைப்போட்டு வைக்க வேண்டும். செம்பின் மேலே மஞ்சள் பூசின தேங்காயை வைத்து சுற்றிலும் மாவிலையை சொருகி கலசம் மாதிரி அமைக்க வேண்டும். வெற்றிலை, பாக்கு, பழம், தட்சணை வைக்க வேண்டும். மஞ்சள் தூள் எடுத்து சிறிது தண்ணீர் விட்டு பிள்ளையார் பிடித்து, வாழை இலையின் வலது பக்கம் வைத்து குங்குமப் பொட்டு வைக்க வேண்டும்.
படம், எந்திரம், கலசம், மஞ்சள் பிள்ளையார் ஆகியவற்றுக்கு பூக்களை போட்டு ஊதுவத்தி ஏற்றி வைக்க வேண்டும். கிழக்கு திசையில் அமர்ந்து விநாயகர் மந்திரம், சுலோகங்களை கூறி, லட்சுமி சுலோகம், குபேரன் சுலோகம், துதி ஆகியவற்றை கூற வேண்டும். மனதில் கணபதி, லட்சுமி, குபேரனின் திருநாமங்களுடன் போற்றி குபேரனின் மூல மந்திரங்களை சேர்த்து கூற வேண்டும். பின்பு தூப தீபம் காட்டி வாழைப்பழம், பசும்பால், பாயசம் போன்றவற்றை நிவேதனம் செய்ய வேண்டும். வெற்றிலை, பாக்கு, பழத்தை சுமங்கலிகளுக்கும், தட்சணையை ஏழைகளுக்கும் கொடுக்க வேண்டும்.
கோரிக்கைகளை நிறைவேற்றவும், செல்வம், சந்தோஷம் ஆரோக்கியத்தைத் தரும்படி குபேரனை வேண்டி கொள்ள வேண்டும். இந்த விரதத்தை எப்போது வேண்டுமானாலும் ஆண், பெண், குழந்தைகள் யார் வேண்டுமானாலும் கடைப்பிடிக்கலாம். அட்சய திதியன்று லட்சுமி குபேரரை வழிபட்டால் நீங்காத செல்வம் நிலைத்து இருக்கும். ஐஸ்வரிய கோலம் போட்டு பூஜை செய்வது நல்லது.
இந்த கோ பூஜை மூலம் அனைத்து செல்வங்களும் உள்ள உன்னதமான வாழ்வு அம பூஜை செய்ய ஏற்ற நாள். லட்சுமி குபேர பூஜை செய்ய தீபாவளி திருநாள் உகந்தது. மேலும் சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, கார்த்திகை மாதங் களில் பூராட்டாதி நட்சத்திரம் வரும் நாளில் பூஜை செய்வது மிகுந்த பலன்களை தரும். ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை குபேர காலமாகும். இந்த நேரத்தில் கடன் தொல்லை, வியாபாரத்தில் நஷ்டமடைந்தோர் 5 வியாழன் மாலை, குபேர தீபம் ஏற்றி லட்சுமி குபேர நாமம் செய்தால் பலன் கிடைக்கும்.
குபேர எந்திர பூஜை: இந்த பூஜை சிறப்பு மிக்கது. குபேரன் தனது செல்வம் அனைத்தையும் இழந்து நின்ற போது லட்சுமி தேவியை வணங்கி எந்திரத்தைப் பெற்றான். அந்த எளிய குபேர பூஜையை விரதம் இருந்து செய்ய நலம் விளையும். இதை செய்வதால் கடன்கள் தீரும். செல்வம் பெருகும். ஆண்டுக்கு 2 முறை செய்தால் பணத்தட்டுப்பாடு இருக்காது. குபேர எந்திரபூஜையை மேற்கொள்ளும் போது ஒரே மாதிரியான நாணயங்களை எடுத்து வைத்து கொள்ள வேண்டும். பூஜை அறையில் கோலம் போட வேண்டும். எண்களை வெள்ளை அரிசி மாவினாலும், கட்டங்களை சிவப்பு குங்குமத்தினாலும், வார்த்தைகளை மஞ்சள் பொடியினாலும் போட வேண்டும்.
ஒவ்வொரு கட்டத்துக்கும் நாம் ஏற்கனவே சேர்த்து வைத்துள்ள நாணயத்தை வைத்து தொடர்ந்து 9 வெள்ளிக்கிழமைகள் அல்லது 9 பவுர்ணமி என பூஜிக்க வேண்டும். அதே தினங்களில் 9 நாட்கள் தொடர்ந்து பூஜை செய்ய வேண்டும். அந்த எண்களின் பக்கத்தில் எழுத்துகள் அழியாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அந்த நாணயங்களை கட்டத்துக்குள் வைக்க வேண்டும்.
குபேர எந்திர கோலம் போட்டு நாணயங்களை அதில் வைத்து முடித்ததும், எந்திரத்தின் முன் சிறிய விளக்கு ஏற்றி வைத்து பூஜையை தொடங்க வேண்டும். 'மகாலட்சுமி தாயே! என் கடன்கள் விரைவில் தீர வேண்டும். எனக்கு லாபம் கிடைக்க வேண்டும்' என கூறிவிட்டு ஒவ்வொரு கட்டத்திலும் உள்ள நாணயத்தின் மீதும், பூக்களை போட வேண்டும்.
அப்படி பூக்களை போடும் போது எழுத்துக்கள் அழிந்து விடாமல் இருக்குமாறு கட்டத்தில் வைத்துள்ள நாணயம் மீதே பூக்களை போட வேண்டும். அப்படி 9 முறை வேண்டிக் கொண்டு ஒவ்வொரு கட்டத்திலும் பூவை வைத்து பின் எந்திரத்துக்கு கற்பூரம் காட்டிய பின் அந்த கோலத்தை வணங்கி விட்டு பூஜையை முடிக்க வேண்டும். பூஜை முடிந்த பின்னர் உடனே கோலத்தை அழித்து விடக்கூடாது. மறுநாள் துணியால் துடைத்து எடுக்க வேண்டும். மறுநாள் வரை அந்த கோலம் நாணயத்துடன் அப்படியே இருக்க வேண்டும். எந்திரத்தின் மீது நேரடியாக விளக்கு மாற்றால் பெருக்கக்கூடாது.
கோலத்தை துடைக்கும் முன்னே 9 நாணயங்களையும் எடுத்து தனியாக வைத்து விட வேண்டும். ஒன்பது நாட்களும் உபயோகிக்கும் 81 நாணயங்களையும் பத்திரமாக எடுத்து வைத்து கொள்ள வேண்டும். அது லட்சுமி தேவிக்கு பூஜிக்கப்பட்ட நாணயம் ஆகும். அன்று மாலைக்குள் ஒன்பது சுமங்கலி பெண்களுக்கு வெற்றிலை, பாக்கு, பழம் தர வேண்டும். 9 நாட்களும் பூஜித்த நாணயங்களை லட்சுமி தேவியின் உண்டியலில் போட வேண்டும். அதை போடும் முன்பு தான் அவளுக்கு செலுத்தும் அந்த காணிக்கைகளை போல் தனக்கும் பல மடங்கு செல்வம் தரவேண்டும் என லட்சுமி தேவியை மனமார வேண்டிக் கொள்ள வேண்டும்.
இந்த பூஜையை செய்பவரால் தொடர்ந்து செய்ய முடியாத நிலை ஏற்பட்டால் வீட்டில் உள்ள வாரிசுகள் செய்யலாம். இதை செய்தால் வீட்டில் அமைதி நிலவும். செல்வம் நிலைக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
No comments