Breaking News

எப்படி யோசிக்கிறாங்க.. இனி ஸ்கூலுக்கு பேக் கொண்டு வர வேண்டாம்.. கேரள அரசாங்கத்தின் அடுத்த அதிரடி:

 


மாணவர்களின் சுமைகளை குறைக்கும் விதமாக கேரள அரசாங்கம், மாதம் குறைந்தது 4 நாட்கள் பேக் எடுத்து வரவேண்டாம் (Bag free days) என்கிற முறையை அமல்படுத்தவுள்ளது.

பள்ளிக் கல்வித் துறையில் இன்றைக்கு நிலவும் முக்கிய பிரச்னைகளில் புத்தக சுமையும் ஒன்று. ஒன்றாம் வகுப்பு படிக்கும் குழந்தைகள் கிட்டத்தட்ட அவர்களின் எடையில் பாதி அளவுக்கு நோட், புத்தகங்களை சுமந்து செல்கிறார்கள். அடுத்தடுத்து மேல் வகுப்புகளுக்கு செல்ல செல்ல மாணவர்களுக்கான புத்தக சுமைகளும் கூடிக்கொண்டே செல்கிறது. மாணவர்களும், பெற்றோரும் தினம் தினம் எதிர்கொள்ளும் இந்தப் பிரச்னை தொடர்பாக புகார்கள் வராத பள்ளிகளே இல்லை என்றும் சொல்லலாம். இப்படிப்பட்ட புகார்களை புறந்தள்ளாமல், கணிவுடன் அணுகி அதற்கான தீர்வை நோக்கியும் நகர்கிறது கேரள அரசாங்கம்.

ஏற்கனவே கேரளா பள்ளிகளில் மாணவ, மாணவி இருபாலருக்கும் ஒரே சீருடை என்ற சமத்துவத்தை கொண்டுவந்து நாடு முழுவதும் பாராட்டை பெற்றது. இந்நிலையில் கல்வித்துறையில் நிலவி வரும் முக்கிய பிரச்னைக்கும் நாட்டுக்கே முன்மாதிரியான தீர்வுடன் உற்றுநோக்க வைத்துள்ளனர்.

இதுகுறித்து கேரள கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி கூறுகையில்,

"1-12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களின் ஸ்கூல் பேக் சுமையை குறைக்கும் வகையில் மாநில அரசு மிக விரைவில் முடிவு எடுக்க உள்ளது. இதுதொடர்பாக பெற்றோர், கல்வியாளர்களிடம் இருந்து புகார்களும், பரிந்துரைகளும் வந்து கொண்டிருக்கின்றன. மாணவர்களிடம் புத்தக சுமையை குறைக்கும் விதமாக, ஏற்கனவே மாநிலத்தில் பாட புத்தகங்கள் 2 கட்டங்களாக அச்சிடப்பட்டு விநியோகம் செய்யப்படுகின்றன. இருந்தபோதும் பல இடங்களில் புத்தக சுமை குறையவில்லை என்ற புகார்கள் வந்து கொண்டே இருக்கின்றன.

மாணவர்களுக்கு வகுப்பு வாரியாக எவ்வளவு எடையிலான ஸ்கூல் பேகை கொண்டு வரவேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்க உள்ளோம். அதன்படி ஒன்றாம் வகுப்புக்கு 1.6 கிலோ - 2.2 கிலோ என்பதில் தொடங்கி பத்தாம் வகுப்பு 2.5 கிலோ - 4.5 கிலோ என்ற எடையில், ஒவ்வொரு வகுப்புக்கும் கடைப்பிடிக்க வேண்டிய எடை குறித்து உத்தரவு கொடுக்கப்படும். அரசு வழங்கியுள்ள உத்தரவின்படி ஸ்கூல் பேக் இருப்பதை பள்ளிகள் உறுதி செய்ய வேண்டும்.

இதுதவிர குறிப்பிட்ட நாள்களுக்கு ஸ்கூல் பேகே இல்லாமல் பள்ளிக்கு வரும் நடைமுறையும் அமல்படுத்த உள்ளோம். அதாவது ஒவ்வொரு மாதமும் சராசரியாக 4 நாட்களாவது மாணவர்கள் பள்ளிக்கு ஸ்கூல் பேக் இல்லாமல் வருவதற்கு (Bag free days) நடவடிக்கை எடுக்க உள்ளோம். இந்தமுறை விரைவில் அமலுக்கு வரும்." என்றார்.

No comments