ஆடி அமாவாசை நாளில் உப்பு பரிகாரம்: இதில் என்ன பயன்?
இந்துக்கள் ஒவ்வொரு மாதமும் வரும் அமாவாசை நாளில் மூதாதையருக்கு படையலிட்டு வழிபடுவது வழக்கமாக இருக்கிறது.
அதிலும், குறிப்பாக, வருடத்திற்கு 3 அமாவாசைகள் மிக முக்கியமான நாளாக இந்துக்களால் நம்பப்படுகிறது. ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை, தை அமாவாசை ஆகிய நாட்களில் தர்ப்பணம் கொடுத்து, முன்னோர்களை வழிபட வேண்டும் என என இந்து சாஸ்திரங்கள் கூறுகின்றன.
அதன்படி, இந்த ஆண்டு ஆடி அமாவாசை நாள் ஆக்ஸ்ட் மாதம் 4-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. இந்த ஆண்டின் சிறப்பு மிகு ஆடி மாத அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கலாம். ஆடி அமாவாசை நாளில் பித்ரு தர்ப்பணம் கொடுப்பது என்பது சூரிய உதயத்தின்போது அமாவாசை திதி இருக்கும் நேரத்தில் கொடுக்க வேண்டும். அதோடு, அமாவாசை என்றாலே முன்னோர்களுக்கு படையலிட்டு வழிபடுவதோடு சில பரிகாரங்களையும் செய்கிறார்கள். உதாரணத்துக்கு அமாவாசை நாளில் பசுமாட்டுக்கு அகத்திக் கீரை தானமாக அளிப்பார்கள், அந்த வகையில் ஆடி அமாவாசை நாளில் செய்யப்படும் உப்பு பரிகாரம் உங்கள் வாழ்க்கையை வளமாக்கும்.
ஆடி அமாவாசை நாளில் செய்யப்படும் உப்பு பரிகாரம் என்றால் என்ன? இந்த உப்பு பரிகாரம் செய்வதால் என்ன பயன், உப்பு பரிகாரம் எப்படி செய்வது என்பதை இங்கே பார்க்கலாம்.
வாழ்க்கையில் ஜான் ஏறினால் முழம் சறுக்கிறதா, உங்கள் வேலை, வணிகம் என எல்லாவற்றிலும் தோல்வி மேல் தோல்வி காண்கிறீர்களா? இதற்கு முன்னோர்களின் ஆசி இல்லாதது ஒரு காரணமாக இந்துக்களால் நம்பப்படுகிறது. அதனால், முன்னோர்களின் ஆசி பெற இந்த உப்பு பரிகாரம் செய்யப்படுகிறது.
இந்த ஆண்டு ஆடி அமாவாசை ஆகஸ்ட் மாதம் சனி ஞாயிறு என இரண்டு நாட்களில்பட்டு வருகிறது. இந்த அமாவாசையானது ஆகஸ்ட் 4-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4.42 மணி வரை இருக்கிறது. அதனால், சூரிய உதயத்தின்போது திதி தர்ப்பணம் கொடுப்பது, முன்னோர் வழிபாடுகளை எல்லாம் செய்துவிடுங்கள். அதே நேரத்தில் உங்கள் வீடுகளில் யாராவது குடும்ப உறுப்பினர் கர்ப்பமாக இருந்தால் தர்ப்பணம், திதி எதையும் கொடுக்காதீர்கள்.
இந்த உப்பு பரிகாரத்தை ஆகஸ்ட் 3-ம் தேதி சனிக்கிழமை இரவு செய்ய வேண்டும். சனிக்கிழமை மாலை 6 மணிக்கு பிறகு இரவு 10 மணிக்குள்ளாக நீங்கள் இந்த பரிகாரத்தைச் செய்யலாம்.
வீட்டில் பணக் கஷ்டம் வரக்கூடாது, வீட்டில் கடன் சுமை இருக்கக் கூடாது, வீடு செழிப்பாக இருக்க வேண்டும் என்று அனைவரின் விருப்பமாக இருக்க வேண்டும். ஆடி அமாவாசை நாளில் கல் உப்பு வைத்து பரிகாரம் செய்தால் அதற்கு பலன் பல மடங்காக கிடைக்கும்.
அமாவாசை நாளில் நீங்கள் புதிதாக வாங்கிய கல் உப்பை வைத்து இந்த உப்பு பரிகாரத்தை செய்ய வேண்டும். ஒரு வெள்ளைக் காகிதத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த காகிதத்தில் 4 மூலைகளிலும் மஞ்சள் பொட்டு வைத்துக்கொள்ளுங்கள்.
இதையடுத்து, ரூபாய் நோட்டுகளை இரண்டு இரண்டாக எடுத்துக்கொள்ளுங்கள். உதாரணத்துக்கு 10 ரூபாய் நோட்டு என்றால் இரண்டு 10 ரூபாய் நோட்டு வைக்க வேண்டும். 20 ரூபாய் நோட்டு என்றால் இரண்டு 20 ரூபாய் நோட்டு வைக்க வேண்டும். உங்கள் வசதிக்கு ஏற்ப ரூபாய் நோட்டுகளை வைக்கலாம்.
அந்த வெள்ளைக் காகிதத்தில் ரூபாய் நோட்டுகளை வைத்து அதன் மீது, கிராம்பு, ஏலக்காய், பட்டை, வசம்பு ஆகியவற்றை வைத்து பொட்டலமாக மடித்து வைத்துக்கொள்ளுங்கள். பிறகு, அந்த பொட்டலத்தை அன்று புதியதாக வாங்கிய கல் உப்பு மீது வைத்து இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்.
புதியதாக வாங்கிய கல் உப்பை ஒரு கண்ணாடி கின்னத்திலோ அல்லது பீங்கான் கின்னத்திலோ கொட்டி வைத்துக்கொள்ளுங்கள். அந்த உப்பின் மீது இந்த பொட்டலத்தை வைக்க வேன்டும்.
இந்த பொட்டலத்தை பூஜை அறையில்தான் வைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. மகாலட்சுமி தாயை வேண்டிக்கொண்டு உங்களுக்கு இருக்கும் பணக் கஷ்டம் எல்லாம் தீர வேண்டும் என்று இதை நீங்கள் வைத்துக்கொள்ளலாம். சனிக்கிழமை முழுவதும் உப்புக் கின்னத்தின் மீது வைக்கப்பட்ட இந்த பொட்டலம் அப்படியே இருக்கட்டும்.
மறுநாளும் அமாவாசை திதி இருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை காலை குளித்து முடித்துவிட்டு மகாலட்சுமி தாயாருக்கு ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்துவிடுங்கள். பிறகு, மடித்து வைத்திருக்கும் பொட்டலத்தில் இருந்து ரூபாய் நோட்டு ஒன்றை மட்டும் உங்களுடைய பீரோவில் வைத்துவிடுங்கள். அந்த பொட்டலத்தில் மீதம் இருக்கக் கூடிய மற்றொரு ரூபாய் நோட்டுக்களில் ஒன்றை எடுத்து ஏதாவது ஒரு ஏழைகளுக்கு சாப்பாடு வாங்கிக் கொடுங்கள்.
அதுமட்டுமில்லாமல், உங்களால் வாராவாரம் வெள்ளிக்கிழமைகளில் இந்த பரிகாரத்தை செய்ய முடியும் என்றால் செய்யுங்கள். அப்படி செய்ய முடியவில்லை என்றால், மாதத்திற்கு ஒருமுறை வரக்கூடிய அமாவாசை தினத்தில் செய்தாலும் ரொம்ப நல்லது. அப்படி இல்லை என்றால், மாதத்தில் ஏதாவது ஒரு வெள்ளிக்கிழமையில் செய்யலாம். இப்படி செய்து பாருங்கள் நிச்சயமாக உங்களுக்கு இருக்கக்கூடிய பணக் கஷ்டம் எப்படி சரியாகி போனது என்றே தெரியாது என்று ஷோபனா தினேஷ் என்பவர் தனது யூடியூப் சேனலில் தெரிவித்துள்ளார்.
No comments