Breaking News

வேனை ஓட்டி சென்றபோது நெஞ்சுவலி 20 பள்ளி குழந்தைகளின் உயிரை காப்பாற்றி உயிர் விட்ட டிரைவர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

 


வெள்ளகோவில்: பள்ளி வேனை ஓட்டி சென்ற டிரைவர் திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு இறந்தார். முன்னதாக வேனை சாலையின் ஓரமாக நிறுத்தியதால் 20 குழந்தைகள் உயிர் தப்பினர்.

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் கேபிசி நகரை சேர்ந்தவர் சேமலையப்பன் (49). இவர் வெள்ளகோவிலில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் கடந்த 8 மாதங்களாக வேன் டிரைவராக வேலை செய்து வருகிறார். அதே வேனில் இவரது மனைவி லலிதா, குழந்தைகளின் உதவியாளராக உள்ளார். நேற்று மாலை பள்ளி முடிந்த பிறகு சேமலையப்பன், வேனில் 20 குழந்தைகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டார்.

கரூர் ரோட்டில் பழைய போலீஸ் குடியிருப்பு அருகே வந்தபோது திடீரென சேமலையப்பனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. அவர் வலியையும் பொருட்படுத்தாமல் வேனை சாலையின் ஓரமாக நிறுத்தினார். உடனே மனைவி லலிதா தண்ணீர் கொடுத்துள்ளார். அதை வாங்கி குடித்த சேமலையப்பன் மயங்கி சாய்ந்தார். உடனடியாக தனியார் ஆம்புலன்சில் சேமலையப்பனை காங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். உயிரிழக்கப்போகும் தருவாயிலும் வேனை சாதுர்யமாக சாலையோரம் நிறுத்தியதால் 20 குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், 'இறக்கும் தருவாயிலும் இளம் பிஞ்சுகளின் உயிர்காத்த சேமலையப்பன் அவர்களது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது மனிதநேயமிக்க செயலால் புகழுருவில் அவர் வாழ்வார்!' என்று கூறி உள்ளார்.

No comments