Breaking News

வங்கிக் கணக்குகளைக் குறி வைக்கும் புதிய சைபர் மோசடிகள் - சிக்கிக் கொள்ளாமல் தப்பிப்பது எப்படி?

திருப்பத்தூரை சேர்ந்த 32 வயது முபினாவின் செல்போனுக்கு கடந்த இரு வாரங்கள் முன் குறுஞ்செய்தி ஒன்று வந்தது.

வீட்டு வேலைகளை செய்து முடித்து விட்டு செல்போனை பார்த்த அவருக்கு குறுஞ்செய்தியின் தகவல்கள் புரியாததால், தனது கணவரை அழைத்துள்ளார். முபினா ஃபாசிலுர்ஹ்மானின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக அந்த குறுஞ்செய்தி கூறியது. அவர் 4.5 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வரி செலுத்தாததால், கணக்கு முடக்கப்பட்டுள்ளதாகவும், அதை திருப்பி செலுத்தும் வரை கணக்கை உபயோகப்படுத்த முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

"வங்கிக் கணக்கில் சிலிண்டர் மானியம் ரூ.31, மகளிர் உரிமைத் தொகை ரூ.1000, மற்றும் மகளிர் சுய உதவிக் குழு நிதி ஆகியவை மட்டுமே பரிவர்த்தனை செய்யப்படும். எங்கள் பணம் ரூ.2,300 ஐ தற்போது இழந்துள்ளோம்" என்கிறார் முபினாவின் கணவர் கே நியாஸ் அஹ்மத்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் தோல் தொழிற்சாலையில் மாதம் ரூ.15,000 சம்பளத்துக்கு வேலை பார்த்து வருகிறார் நியாஸ் அஹ்மத். மாதம் ரூ.4,500 வாடகைக்கு அவரும், முபினாவும் அவர்களின் மூன்று பிள்ளைகளுடன் வசித்து வருகின்றனர். மூன்று பிள்ளைகளும் அருகில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயின்று வருகின்றனர்.

"2012-ஆம் ஆண்டு என் மனைவிக்கு வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டது. அவரது தந்தை சில ஆண்டுகள் முன்பு அவருக்கு பான் அட்டை எடுத்துக் கொடுத்துள்ளார். ''

''இந்த வங்கிக் கணக்கைப் பயன்படுத்தி கடந்த ஐந்து ஆறு ஆண்டுகளாக எம்.ஆர்.கே எண்டர்பிரைசஸ் என்ற பெயரில் தொழில் நடத்தப்பட்டு வந்துள்ளது. ஜி.எஸ்.டி வரி பாக்கி குறித்து வங்கியிடம் புகார் தெரிவித்த போதுதான் இந்த தகவல் எங்களுக்கு தெரிந்தது," என்கிறார் நியாஸ் அஹ்மத்.

வங்கியிலும் காவல் துறையிலும் புகார் அளித்த பின், விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

"எங்கள் கணக்கில் பாக்கி உள்ள வரியை செலுத்த வேண்டும் என்று யாரும் சொல்லவில்லை. அதே நேரம், கட்ட வேண்டாம் என்று இதுவரை எழுத்துபூர்வமாக கூறவில்லை. வங்கிக் கணக்கு இன்னமும் முடங்கி உள்ளது," என்றார்.

இதே போன்ற மற்றொரு சம்பவத்தில் சில மாதங்களுக்கு முன்பு, ஆம்பூரில் ஒரு தனியார் காவலாளியின் மனைவிக்கு 6.65 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக தகவல் கிடைத்தது. ஒருவரிடம் கடன் பெறும் போது அவரிடம் ஆதார் அட்டையை அடமானம் வைத்துள்ளார்.

ஒரு முறை இலவசமாக பான் அட்டை வாங்கி தருவதாக கூறியவரிடம் ஒரு விண்ணப்பத்தில் தகவல்களை வழங்கியுள்ளார். ஆனால் அவருக்கு பான் அட்டை கிடைக்கவில்லை. பின்னரே, அவருக்கு தெரியாமல் பான் அட்டை வாங்கியதும், அவரது பெயரில் தொழில் நடத்தி வந்ததும் தெரியவந்தது.

முபினாவின் வழக்கிலும் அவரது ஆதார் மற்றும் பான் அட்டை விவரங்களை பயன்படுத்தி இந்த மோசடி நடந்துள்ளதாக திருப்பத்தூர் மாவட்ட காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

'மோசடிகளுக்கு பின்னால் இயங்கும் நெட்வர்க்'

இந்த வழக்குகளுக்கு பின்னால் இருப்பவை பெரிய நெட்வர்க் என்கின்றனர் இது போன்ற வழக்குகளை கையாண்டு வரும் சைபர் குற்ற வழக்கறிஞர்கள்.

இது ஒரு தனிநபரை குறி வைத்து செய்யப்படுவதில்லை, பல கோடி ரூபாய் மோசடியின் ஒரு சிறு பகுதியே இது என்கின்றனர்.

நூற்றுக்கணக்கான சைபர் குற்ற வழக்குகளை வாதாடியுள்ள வழக்கறிஞர் கார்த்திகேயன் இது போன்ற மோசடி கும்பல் எப்படி இயங்குகிறது என்று விளக்கினார்.

"சாதாரண நபர்களின் ஆதார் அட்டை விவரங்களைப் பெற்று தருவதற்கு 'ரன்னர்' (runner) எனப்படுபவர்கள் களத்தில் இருப்பார்கள். ஆதார் அட்டை விவரங்களை பகிர்ந்து கொள்வதற்கு ரூ.5,000 முதல் ரூ.10,000 வரை ஒருவருக்கு வழங்குவார்கள். நம்மிடம் என்ன இருக்கிறது இழப்பதற்கு என்று நினைத்து சிலர் தங்கள் ஆதார் விவரங்களை அளிப்பார்கள்.''

''பின் அவர்களையே 'ரன்னர்'ஆக மாற்றி, அவர்களுக்கு தெரிந்தவர்களிடம் இருந்து ஆதார் அட்டை விவரங்களை பெறுவார்கள். பெறப்படும் ஒவ்வொரு ஆதார் அட்டை விவரங்களுக்கும் ஒரு கமிஷன் வழங்கப்படும். இந்த விவரங்களை வைத்து பான் அட்டைக்கு விண்ணப்பித்துக் கொள்வார்கள்," என்கிறார்.

"சிம் கார்டுகளை பெறுவதற்கு தனியாக ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பார். இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) விதிமுறைகள் படி, சிம் கார்டை பெறுபவர், லைவ் ஆக நின்று புகைப்படம் எடுத்து பதிவேற்றம் செய்ய வேண்டும். சிம் கார்டு ஆக்டிவேட் ஆகி மூன்று நாட்கள் வரை அதற்கு அவகாசம் உண்டு. லைவ் புகைப்படம் பதிவேற்றம் செய்யாவிட்டால், சிம் கார்ட்டு செயலிழந்து விடும். இந்த மூன்று நாட்களுக்குள் வாங்கப்பட்ட சிம் கார்டுகளை கொண்டு வங்கிக் கணக்குகள் தொடங்கப்படும்," என்கிறார் வழக்கறிஞர் கார்த்திகேயன்.

ஒரு மோசடி கும்பலால் பல அடுக்குகளில் ஆட்களைக் கொண்டு இது திட்டமிட்டு நடைபெறுகிறது என்கிறார் மற்றொரு சைபர் வழக்கறிஞரான ராஜேந்திரன். "இதில் அரசு நடைமுறைகளை தெரிந்த ஒருவர், வங்கி பரிவர்த்தனைகளை நன்கு அறிந்தவர் கண்டிப்பாக இருப்பார்கள். வங்கியில் வேலை செய்பவரும் இதில் சில நேரங்களில் உடந்தையாக இருக்கலாம்," என்கிறார் அவர்.

"சமீப நாட்களில் உத்தர பிரதேச மாநிலம் மதுராவிலிருந்து சுமார் 20 கி.மீ தூரத்தில் உள்ள சிறு நகரத்திலிருந்து இயங்கும் கும்பலால் ஏமாற்றப்படும் புகார்கள் வருகின்றன. ஏதாவது பிரச்னை ஏற்பட்டால், ஒரு மாநிலத்திலிருந்து உடனே வேறு மாநிலத்துக்கு தப்பி விடுவதற்கு வசதியாக இவர்கள், ராஜஸ்தான், அரியாணா, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களின் எல்லையில் உள்ள நகரத்திலிருந்து இயங்குகின்றனர். மூன்று மாதங்களில் ஆயிரம் ஆதார் அட்டைகளின் பி.டி.எஃப் நகலை கொடுக்க ஒருவருக்கு பெரிய தொகை கமிஷனாக வழங்கப்படும்," என்றார்.

வங்கிக் கணக்குகளை தொடங்க ஒருவர் நேரில் செல்ல வேண்டும் என்பது சில வங்கிகளில் குறிப்பாக புதிதாக தொடங்கப்படும் தனியார் வங்கிகளில் கட்டாயம் இல்லை என்பதால், எளிதாக வங்கிக் கணக்குகள் தொடங்கப்படுகின்றன என்கிறார் ராஜேந்திரன்.

வங்கிக் கணக்குகளைக் கொண்டு, உடனடி கடன் பெற்று அந்த பணம் வேறு கணக்குக்கு மாற்றப்படும். அல்லது, போலி நிறுவனங்கள் நடத்தவும், பிறரை ஏமாற்றி பணம் முதலீடு செய்ய வைக்கவும் இந்த கணக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. பின் கடனை திருப்பி செலுத்துவதும், ஜி.எஸ்.டி வரி செலுத்துவதும் ஆதார் அட்டைக்கு சொந்தக்காரரின் பொறுப்பாகிவிடும்.

பட்டதாரிகளை ஏமாற்ற மற்றொரு உத்தி

பொதுவாக வங்கிக் கணக்குகளை அதிகம் பயன்படுத்தாதவர்கள், பணத்தின் உடனடி தேவை அதிகம் உள்ளவர்களே இந்த வகையான மோசடிகளில் குறிவைக்கப்படுகின்றனர். பட்டதாரிகள், நடுத்தர வர்க்கத்தினரை குறி வைக்க வேறு சில வழிகள் கையாளப்படுகின்றன.

"சென்னை அண்ணா நகரில் சமீபத்தில், ஐந்து லட்சம் ரூபாயில் ஒரு அலுவலகத்தை அமைத்தார் ஒருவர். அந்த நிறுவனத்தில் பணிபுரிவதற்காக ஆட்களை வேலைக்கு எடுக்க விளம்பரம் வழங்கபட்டது. அதைப் பார்த்து, விண்ணப்பித்தவர்களின் தனிப்பட்ட விவரங்கள் சேகரிக்கப்பட்டன. சிலரை நேரில் அலுவலகத்துக்கு அழைத்து தங்கள் ஆதார் அட்டை விவரங்களையும் அதிலுள்ள தொலைபேசி எண்ணுக்கு கிடைக்கும் ஒ.டி.பி-யும் அலுவலக காரணங்களுக்காக தேவை என்று கூறி அதை பெற்றுவிட்டனர். பிறகு அந்த விவரங்களைக் கொண்டு வங்கிக் கணக்குகளை தொடங்கி, அதிலிருந்து பண பரிவர்த்தனைகள் மேற்கொண்டனர்," என்று விவரிக்கிறார் வழக்கறிஞர் கார்த்திகேயன்.

இது போன்ற மோசடிகள் வெளிநாடுகளிலிருந்தும் இயக்கப்படுகின்றன என்கிறார் அவர்.

'வங்கிகளுக்கு பொறுப்பு உண்டு'

"ஒரு பரிவர்த்தனை சட்டவிரோதமாக இருக்கலாம் என்று வங்கி கருதுவதற்கான காரணங்கள் இருந்தால், அதை கண்காணித்து, சந்தேகிக்கும் வகையிலான பரிவர்த்தனை அறிக்கை (Suspicious Transaction Report) வழங்க வேண்டும். இது ரிசர்வ் வங்கியின் விதி. ஆனால் சில வங்கிகள் கண்காணிப்பதில்லை. ஒருவரின் வங்கிக் கணக்கை பயன்படுத்தி, பல ஆண்டுகளாக ஒருவர் தொழில் நடத்தி வந்திருந்தால், அதை கண்காணிக்காதது கண்டிப்பாக வங்கியின் தவறுதான்," என்கிறார் ராஜேந்திரன்.

முபினாவின் வழக்கு தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், "தங்கள் ஆதார் மற்றும் பான் அட்டை விவரங்களை பல ஆண்டுகள் முன்பாக சிலரிடம் பகிர்ந்துள்ளனர். அவர்கள் யார், அவர்களுக்கும் இதற்கும் தொடர்பிருக்கிறதா என்று விசாரித்து வருகிறோம். கடந்த ஆண்டு இதே போன்ற இரண்டு வழக்குகள் பதிவாகின. ஏமாற்றப்பட்டவர்கள் ஒருவருக்கு ஒருவர் சம்பந்தம் இல்லாத நபர்கள் என்பது தெரிகிறது. அவர்களிடம் விவரங்களைப் பெற்றவர்கள் தனி நபர்களா, அல்லது ஒரே கும்பலை சேர்ந்தவர்களா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது," என்றார்.

சிக்காமல் இருக்க என்ன செய்யலாம்?

இது போன்ற மோசடிகளில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க, துறை சார்ந்த நிபுணர்கள் பொதுமக்களுக்கு வழங்கும் சில அறிவுரைகள் :

  1. உங்கள் பெயரில் எத்தனை செல்போன் இணைப்புகள் பெறப்பட்டுள்ளன என்பதை https://tafcop.sancharsaathi.gov.in/ என்ற மத்திய அரசின் தொலை தொடர்பு துறையின் இணையதளத்தில் சரிபார்த்துக் கொள்ளலாம். உங்களுக்கு தெரியாமல் செல்போன் எண் பெறப்பட்டிருந்தால் அந்த இணையதளத்திலேயே புகார் அளிக்கலாம்.
  2. வங்கிக் கணக்குகளில் என்ன பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதை வாடிக்கையாளர் அவ்வபோது சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
  3. உங்களை ஏமாற்றி உங்கள் கணக்கிலிருந்து வேறு கணக்குக்கு பணம் மாற்றப்பட்டிருந்தால், உடனே அந்த வங்கிக் கணக்கை முடக்க வங்கிக்கு தெரிவிக்கலாம். அப்படி முடக்கப்பட்டால், அந்த கணக்கிலிருந்து பணத்தை மீண்டும் பெறுவது சட்ட ரீதியாக சாத்தியம்.
  4. ஆதார், பான் அட்டை விவரங்களை தேவை இல்லாமல் யாரிடமும் வழங்குவதை தவிர்க்கலாம்.
  5. ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டிருக்கும் செல்போன் எண்ணுக்கு வரும் ஓ.டி.பியை கவனம் இல்லாமல் யாரிடமும் கூறுவதை தவிர்க்க வேண்டும். பொதுவாக வங்கிகள் இந்த ஒ டி பிக்களை கேட்க மாட்டார்கள் என்பதையும் அறிந்திருக்க வேண்டும்.
  6. வீட்டில் முதியவர்கள் பெயரில் ஆதார் அட்டை, பான் அட்டை இருந்தால், அவர்களது வங்கிக் கணக்குகளை அவ்வபோது கண்காணித்துக் கொள்ள வேண்டும்.
  7. வங்கிக் கணக்கு முடக்கப்பட்டால், உடனடியாக வங்கியை அணுக வேண்டும்.

No comments