Breaking News

"தங்கம் விலை குறைஞ்சு இருக்கு.. ஆனா 6 மாசத்துல மொத்தமா மாற போகுது.." ஆனந்த் சீனிவாசன் சொன்ன மேட்டர்

 



மத்திய பட்ஜெட்டில் வரி குறைப்பிற்குப் பிறகு தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், மக்கள் ஆர்வமாகச் சென்று தங்கத்தை வாங்கி வருகிறார்கள்.

இதற்கிடையே தங்கம் விலை இனி எப்போதும் குறையுமா இல்லை மீண்டும் சீக்கிரம் அதிகரிக்குமா.. இப்போதே தங்கத்தை வாங்கலாமா இல்லை இன்னும் கொஞ்சம் காத்திருக்கலாமா எனப் பலருக்கும் பல வித கேள்விகள் வரும். இது குறித்து ஆனந்த் சீனிவாசன் பதிலளித்துள்ளார்.

தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து சரிந்து வருகிறது. மத்திய பட்ஜெட்டில் இறக்குமதி வரி குறைக்கப்பட்டது முதலே தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது.

கடந்த 10 நாட்களில் மட்டும் 22 கேரட் தங்கம் ஒரு கிராம் சுமார் ரூ.490 வரை குறைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் தங்கம் வாங்குவது அதிகரித்துள்ளது.

ஆனந்த் சீனிவாசன்: இதற்கிடையே தங்கம் விலை தொடர்பாகப் பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது யூடியூப் சேனலில், "22 கேரட் தங்கம் நேற்றைய தினம் ரூ.15 குறைந்த ரூ.6415ஆக இருந்தது. 24 கேரட் தங்கம் ரூ.7000ஆக இருக்கிறது. தங்கத்திற்கான இறக்குமதி வரி குறைக்கப்பட்ட உடனேயே விலை சரசரவென குறைந்துவிட்டது.

இதனால் அனைத்து நகைக் கடைகளிலும் விற்பனை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர். வாடிக்கையாளர்கள் வருகை 75% அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர்

மீண்டும் அதிகரிக்கும்: தங்கம் இப்போது குறைந்திருந்தாலும், அடுத்த ஆறு மாதங்களில் அது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கும். அமெரிக்காவில் நடப்பதைப் பார்த்தால் தங்கம் விரைவில் அதிகரிக்கத் தொடங்கும் என்பது மிகத் தெளிவாகவே தெரிகிறது. அமெரிக்காவில் தங்கம் விலை பெரியளவில் குறையவில்லை. நமது நாட்டிலே மட்டுமே வரி குறைப்பால் தங்கம் விலை குறைந்துள்ளது.

இன்னுமே கொஞ்சம் இறக்குமதி வரி இருக்கிறது. நினைத்தால் அதையும் கூட குறைக்கலாம். ஆனால், அடுத்த பட்ஜெட் வரை குறைக்க மாட்டார்கள். அதற்குள் தங்கம் விலை மீண்டும் 15% அதிகரித்துவிடும்.

இந்த இறக்குமதி வரி குறைப்பால் தங்கப் பத்திரங்கள் வாங்கியவர்களுக்குக் கொஞ்சம் நஷ்டம் தான். இதன் காரணமாகவே நான் தங்கப் பத்திரங்களைத் தவிர்க்க வேண்டும் எனச் சொன்னேன். தங்கப் பத்திரங்களில் இன்னும் சில ரிஸ்க்கள் இருக்கிறது. எனவே, பார்த்து முடிவெடுத்துக் கொள்ளங்கள். தங்கத்தைப் பொறுத்தவரை எப்போதும் அதை நகைகள் அல்லது காயின்களாக வாங்கி வைப்பதே சிறந்தது. அவசரம் என்றால் தங்கம் இதுபோல இருந்ததால் தான் உதவும்.

நிரந்தரம் இல்லை: இன்னும் சிலர் இனி நிரந்தரமாகவே தங்கம் விலை இப்படி தான் இருக்கும் என்கிறார்கள். ஆனால், அதை நம்பாதீர்கள். இது தற்காலிகமாகக் குறைந்துள்ளது தான்.

வெள்ளி விலை: வெள்ளி விலையும் கூட ஒரு கிலோ ரூ. 7000 வரை குறைந்துள்ளது. இதற்கு இரண்டு காரணம் இருக்கிறது. இறக்குமதி வரியைக் குறைத்தது ஒரு காரணம். ஆனால், அதை விட முக்கிய காரணம் சர்வதேச சந்தையில் வெள்ளி விலை கவிழ்ந்துவிட்டது. ஒரே வாரத்தில் மிகப் பெரியளவில் சரிந்துள்ளது. இதன் காரணமாகவே தங்கமும் வெள்ளியும் ஒன்று இல்லை. முதலீடாக வெள்ளியை வாங்க முடியாது என நான் திரும்பத் திரும்பச் சொல்லி வந்து இருக்கிறேன்.

உலகிலேயே அதிகபட்ச வெள்ளியை இறக்குமதி செய்யும் நாடாகச் சீனா இருந்தது. அந்த சீனாவே வெள்ளி வாங்குவதை நிறுத்திவிட்டார்கள். இதுவே முக்கிய காரணம். இதன் காரணமாகவே தங்கத்தைப் போல வெள்ளியை வாங்கி சேமிக்க முடியாது எனச் சொல்லி வந்தேன்.

இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீடு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.

No comments