Breaking News

எம்.பி.பி.எஸ்., படிப்பில் காலியிடம் அதிகம்; 127 நீட் மதிப்பெண்ணுக்கு சீட்

 

சென்னை: நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் பலர், அகில இந்திய ஒதுக்கீட்டில் சேர்ந்ததால், 127 'கட் ஆப்' மதிப்பெண் பெற்றவர்கள் மருத்துவமும், 129 மதிப்பெண் பெற்றவர்கள், பல் மருத்துவமும் படிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லுாரிகளில் உள்ள, எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை, மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனரகம் மேற்கொண்டு வருகிறது.

இதில், முதல் இரண்டு கட்ட கவுன்சிலிங்கில் இடம் பெற்ற மாணவர்கள், அகில இந்திய ஒதுக்கீட்டில், எய்ம்ஸ், மத்திய பல்கலை உள்ளிட்டவற்றில் இடம் கிடைத்ததால், மாநில ஒதுக்கீடு இடங்களை வேண்டாம் என, திரும்ப ஒப்படைத்தனர்.

தமிழக சுயநிதி மருத்துவ கல்லுாரிகளை விட, மற்ற மாநில கல்லுாரிகளில் கட்டணம் குறைவாக இருப்பதாலும், சிலர் சேர மறுத்து விட்டனர். அதன்படி, 1,143 இடங்கள் காலியாக உள்ளன. இவை மூன்றாம் கட்ட கவுன்சிலிங்கில் நிரப்பப்பட்டுள்ளன.

அதன்படி, மூன்றாம் கட்ட கவுன்சிலிங்கிற்கான முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. அதில், எம்.பி.பி.எஸ்., படிப்பில், நீட் தேர்வு கட் ஆப் மதிப்பெண், 379 வரை வைத்திருந்த மாணவருக்கு இடம் கிடைத்துள்ளது.

அதேபோல, பல் மருத்துவமான பி.டி.எஸ்., படிப்பில் சேர, 129 தகுதி மதிப்பெண் பெற்றிருந்த மாணவிக்கு இடம் கிடைத்துள்ளது. மேலும், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வாரிசுகள் என்ற என்.ஆர்.ஐ., ஒதுக்கீட்டில், 127 கட் ஆப் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும் எம்.பி.பி.எஸ்., இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன.

இதனால், மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு நடந்த, நீட் தேர்வில், குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கும், மருத்துவம் படிப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, மருத்துவ கல்வி இயக்கக அதிகாரிகள் கூறியதாவது:
மூன்றாம் கட்ட கவுன்சிலிங்கிற்கு பின், இடங்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்றால், 10 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த நேரிடும். இதனால், மாணவர்கள் பெரும்பாலும் இடங்களை திரும்ப ஒப்படைக்க மாட்டார்கள். ஒருவேளை காலியிடம் ஏற்பட்டால், பி.டி.எஸ்., படிப்புக்கு மேலும் கட் ஆப் மதிப்பெண் குறையும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments