Breaking News

காலாண்டு விடுமுறையில் ஆன்லைன் வகுப்புகள்: தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை எச்சரிக்கை :

1320333

காலாண்டு விடுமுறையில் ஆன்லைன் சிறப்பு வகுப்புகள் நடத்துவதாக புகார் எழுந்துள்ள நிலையில், இது தொடர்பாக தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளி மாணவர்களுக்கு கடந்த செப்.28-ம் தேதி முதல் அக்.6-ம் தேதி வரை காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக விடுமுறை நாள்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது; அவ்வாறு நடத்தினால் பள்ளிகள் மீது துறை ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்தநிலையில், சென்னை தாம்பரம், மேடவாக்கம், நாமக்கல் ராசிபுரம், கோவை உள்ளிட்ட சில இடங்களில் உள்ள சில தனியார் பள்ளிகள் தங்களது மாணவர்களுக்கு இணைய வழியில் வகுப்புகள் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. பள்ளிகளின் இந்த நடவடிக்கை பெற்றோரின் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், விடுமுறை நாள்களில் வகுப்புகள் வாரியாக எடுக்கப்படும் வகுப்புகள் குறித்த அட்டவணை சமூக வலைதளங்களில் பகிரப்பட்டிருந்தது.

இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், “கல்வித் துறையின் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் சில தனியார் பள்ளிகள் தங்களது மாணவர்களுக்கு இணையவழியில் வகுப்புகள் நடத்துவதாக பெற்றோர்களிடமிருந்து புகார்கள் பெறப்படுகின்றன. விதிமுறையை மீறி வகுப்புகள் நடத்தும் பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

No comments