Breaking News

பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் ஜாக்பாட் பரிசு.! தலைமை ஆசிரியர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு

 


மிழக அரசு சார்பாக பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்தநிலையில் தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு நன்னெறிக் கல்வியை விரிவுபடுத்தும் விதமாகப் புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி மாணவர்களுக்கு பரிசு தொகை வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்களுக்கான திட்டங்கள்

தமிழக அரசு சார்பாக கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக ஏழை, எளிய மாணவர்கள் பள்ளிக்கு வருவதை ஊக்குவிக்கும் வகையில் காலை மற்றும் மதியம் உணவு வழங்கப்படுகிறது. இலவச சீருடை, புத்தகப்பை, காலணி, இலவச சைக்கிள் போன்றவை வழங்கப்படுகிறது. மேலும் மாணவர்களுக்காக ஸ்காலர்ஷிப்பும் வழங்கப்பட்டு வருகிறது. அடுத்ததாக அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு உதவிடும் வகையில் உயர்கல்வியில் சேரும் மாணவ, மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு

மேலும் தனியார் பள்ளிகளுக்கு போட்டியாக அரசு பள்ளிகளிலும் மாணவர்கள் போட்டி போட்டு தேர்ச்சி அடைந்து வருகின்றனர். மாணவர்களுக்கு வாழ்க்கையில் முன்னேற்றத்திற்காக நன்னெறி கல்வியும் வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கையை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், பள்ளிகளில் மாணவர்களுக்கு நன்னெறிக் கல்வி விரிவாக வழங்கப்படும் விதமாக புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளில் திருக்குறள் போட்டி

அதன்படி திருக்குறளின் அறத்துப்பால், பொருட்பால் அதிகாரங்களை அடிப்படையாகக் கொண்டு, 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நன்னெறிக் கல்வி அனைத்து பள்ளிகளிலும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தினமும் பள்ளிகள் தொடங்கியதும் நடைபெறும் காலை வணக்கக் கூட்டங்களில் திருக்குறளையும் அதன் பொருளையும் மாணவர்கள் கூற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் வாழ்வியல் நெறிகளை பின்பற்ற திருக்குறளின் பொன்மொழிகள் உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு பரிசு தொகை

மேலும், பள்ளிகளில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகளில் திருக்குறளை அடிப்படையாகக் கொண்ட நாடகம், கவிதை, கட்டுரை, கதைப்போட்டி மற்றும் வினாடி-வினா போன்ற போட்டிகளை நடத்திட வேண்டும். இதன் காரணமாக மாணவர்களிடையே திருக்குறளின் முக்கியத்துவத்தை தெரிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 100 திருக்குறளை மனப்பாடம் செய்த மாணவர்களுக்கு 200 ரூபாய் பரிசுத்தொகையை பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் நிதியில் இருந்து வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் பள்ளி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு திருக்குறளை வாழ்வியல் நெறியாக பின்பற்றுவதற்கான வழிகாட்டுதல்களை தொடர்ந்து வழங்க வேண்டும் என அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments