Breaking News

பள்ளிகள் தோறும் தேடிவரும் உங்களுடையது எப்போது எங்களுடையது ஆகும்?

 

பள்ளிகள் தோறும் மாதத்திற்கு இருமுறை மாணவர்களுக்கான ஊஞ்சல், தேன்சிட்டு பருவ இதழ்களும் கூடவே ஆசிரியர்களுக்கான மாத இதழாக கனவு ஆசிரியர் இதழ்கள் வருவது பாராட்டுக்குரியது. தற்போது மூன்றாம் ஆண்டில் வெற்றிகரமாக அடியெடுத்து வைப்பது என்பது மிக்க மகிழ்ச்சி. திராவிட மாதிரி அரசின் வாசிப்பை நேசிக்கும் நூலக அறிவுடன் கூடிய பகுத்தறிவை, சமூக நீதியை, பெண் கல்வி ஊக்குவிப்பை, அறிவின் பரவலாக்கத்தை, தனித்திறன் மேம்பாட்டை முன்னெடுக்கும் பள்ளிக்கல்வித் துறையின் பரந்து பட்ட கனவை நனவாக்கிட நாளும் உழைத்துவரும் அனைவரின் பணியும் போற்றத்தக்கதாகும். 

இந்த இதழ்கள் உருவாக்கும் பணி என்பது நாட்டிற்கே முன்னோடியான, முன்மாதிரியான, செம்மையான பணி எனலாம். விதை நெல்லுக்குக் கணக்குப் பார்க்கக் கூடாது என்பார்கள். அதுபோன்று, படிக்காத, பாமர, பொதுமக்களின் வரிப்பணம் பள்ளிகளில் நல்ல பயனுள்ள அறிவு முதலீடாக ஆக்கி வருவது என்பது வரவேற்கத்தக்கது. இன்றைய நவீன இதழ்களுக்கு உண்டான அனைத்து வித புதிய இலக்கணங்களையும் தாண்டி அளவிலும் வடிவிலும் அழகிலும் நேர்த்தியிலும் இந்த இதழ்கள் அனைத்தும் விஞ்சி நிற்பது என்பது குறிப்பிடத்தக்கது. பள்ளி விடுமுறை காலங்களிலும் சில அசாதாரண சூழ்நிலைகளிலும் கூட காலம் தவறாமல் இவை பள்ளிகள் தோறும் பயணித்து வருவதை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. அதற்கு பின் அத்தனை மெனக்கெடல்கள் உள்ளன.இந்த இதழ்கள் உருவாக்கும் முயற்சியில் எத்தனைத் தேடல்கள்! எவ்வளவு சேகரிப்புகள்! 
 
எண்ணற்ற தேர்ந்தெடுத்தல்கள்! அந்த கடின உழைப்பு வணக்கத்திற்குரியது. அதேவேளையில், தமிழகக் கல்விச் சூழலுக்கு முற்றிலும் ஒத்துவராத, பொருந்தாத, ஏற்கத்தக்க இயலாத கருத்துத் திணிப்புகள் சார்ந்த கட்டுரைகள், பேட்டிகள், அறிவுரைகள், அனுபவங்கள் இடம்பெறுவது என்பது கனவு ஆசிரியர் இதழின் பக்கங்களை வேண்டுமானால் நிரப்பக்கூடும். ஆசிரியர்களின் இதயங்களில் அவை சிம்மாசனமிட்டு அமர்ந்தனவா என்பது கேள்விக்குறிஅதுபோலவ, சிறார் கலையும் இலக்கியமும் சிறார்களுக்கே என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. தற்கால சூழலில் சிறார் தின்பண்டங்கள் எவ்வாறு சந்தை முழுவதும் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது போன்று சிறார் இலக்கியங்கள் கடைச்சரக்காகி வருவது வேதனைக்குரியது. ிறார் குறித்து எதை யார் எழுதினாலும் அதை அச்சில் ஏற்றி சந்தைப்படுத்தல் என்பது மலிந்து வருவது அறியத்தக்க ஒன்று. பின் நவீனத்துவ காலக்கட்டத்தில் உருவான தலித்தியம், பெண்ணியம், விளிம்பு நிலை இலக்கியம் முதலான வெகுமக்கள் இலக்கிய வகைமைகள் அனைத்தையும் பின்னுக்குத் தள்ளி அண்மைக்காலமாக சிறார் இலக்கியம் முந்திக்கொண்டு வியாபாரம் ஆகி வருவது நல்லதல்ல. 
 
இந்த நோக்கும் போக்கும் மட்டுமல்லாமல் நோயும் ஊஞ்சல் மற்றும் தேன்சிட்டு இதழ்களைப் பீடிக்கக் கூடாது என்பதில் தெளிவு தேவை.நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான ஊஞ்சலும் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு முடிய உள்ள மாணவர்களுக்கான தேன்சிட்டும் உண்மையான தற்போதைய நிகழ்கால சிறார்களின் படைப்புகளையே முழுவதும் இடம் பெறச் செய்ய வேண்டும். பொய்யான, போலியான, பாவனை செய்யும் வளர்ந்துவிட்ட சிறார் நிலையைக் கடந்து வாலிபம் மற்றும் வயோதிகம் ஆகிவிட்ட கடந்தகால சிறார் பாவனையாளர்களுக்கு அவர்கள் ஏரியாவிற்குள் இவர்களுக்கென்ன வேலை வேண்டியிருக்கிறது என்று கேட்கத் தோன்றுகிறது. குழந்தைகள் குழந்தைகள் மாதிரி தத்தக்கா புத்தக்கா என்று நடப்பது இயல்பு. அழகும் கூட. பெரியவர்கள் தம்மை அவ்வாறு பாவித்துக் கொண்டு சரிசமமாக நடக்க முயற்சிப்பது என்பது சரியல்ல. இதற்கு தூபம் போடுவது போல் இவ்விரு இதழ்களும் அமைந்துவிடக் கூடாது. அது சிறார் வாசகர்களிடமிருந்து அந்நியப்பட்டு போகும் என்பது குறிப்பிடத்தக்கது.யாரோ ஒரு சிலரின் மேதைமையையும் குறுகிய அரசியல் பார்வையையும் முன்னிறுத்தி வாசகர்கள் அனைவரும் ஒன்றுமே தெரியாத கடைநிலையில் இருப்பவர்கள் என்று முன்முடிவுகளுடன் ஒருவித அந்நியத்தன்மையுடன் வெளிவரும் இதழ்கள் காலப் போக்கில் காணாமல் போகுமே ஒழிய நீடித்து நிலைத்து நிற்காது. வாசகரிடையே அணுக்கமும் வாசிப்பின் மீது இணக்கமும் இதழ்களின் வளர்ச்சிக்கு மிக அவசியம். காத்திருந்து ஒருவித எதிர்பார்ப்புடன் தேடிப் படிக்க ஒவ்வொரு வாசக ஆசிரியரையும் மாணவரையும் தூண்டச் செய்வதில் மேலும் இவை பயணிக்க வேண்டியிருக்கிறது என்றே சொல்ல தோன்றுகிறது.
 
 உண்மையில் ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர்கள் மத்தியிலும் ஆசிரியர்கள் மத்தியிலும் இப்பருவ இதழ்களைக் கட்டாயப்படுத்திப் பார்க்க வைக்க வேண்டியிருக்கிறது! ுடிவாக, ஒரு பெரும் நெடுங்கனவு நனவாவதில் மனித ஆக்கப் பேரிடரை இந்த இதழ்களின் வளர்ச்சியில் ஒருபோதும் அனுமதிக்க இயலாது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டியது அவசர அவசியமாகும். இல்லையெனில் விழலுக்கு இரைத்த நீர் போலாகி விடும். இதுநாள்வரை இருந்து வரும் பள்ளிகள் தோறும் தேடிவரும் உங்கள் இதழ்கள் எப்போது எங்கள் இதழ்கள் ஆகும் என இலவு காத்த கிளி போல் காத்திருக்கும் நிலையும் அதனைத் தொடர்ந்த பாராமுகமும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே தொடரவே செய்யும்! எழுத்தாளர் மணி கணேசன் 

No comments