இப்போ போறேன்.. ஆனா திரும்ப.. சென்னையில் எப்போது மழை பெய்யும்? சென்னை மெட் இயக்குநர் சொன்ன அப்டேட்
சென்னையில் மழை சற்று ஓய்ந்திருக்கும் நிலையில், மீண்டும் எப்போது மழை தொடங்கும் என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.
குறிப்பாக இரவிலும் காலையிலும் பரவலாக மழை பெய்வதை வடகிழக்கு பருவமழையின் இயல்பு என்றும், 16ஆம் தேதி அதிகாலை முதல் மழை பெய்யும் என கூறியுள்ளார்.
தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இது சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கே சுமார் 490 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம்- தெற்கு ஆந்திர கடற்கரை பகுதியில் புதுச்சேரிக்கும் நெல்லூருக்கும் இடையே சென்னைக்கு அருகில் 17ஆம் தேதி அதிகாலை கரையை கடக்க கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
இது கரையை கடக்கும்போது தரைக் காற்றின் வேகம் சுமார் 35 கிலோமீட்டர் முதல் 55 கிலோமீட்டர் வேகம் வரை இருக்கும் எனவும், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கன மழை முதல் அதிக கன மழை பெய்யக்கூடும் எனவும், வட தமிழகத்தில் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே சென்னையில் காலையில் இருந்து பல இடங்களில் மழை பெய்தது. ஆனால் மாலைக்கு மேல் மழை இல்லாமல் இருந்தது. அதே நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் லேசான இடி மின்னலுடனும் சாரல் மழையோடும் இருந்தது.
சென்னையில் மழை சற்று ஓய்ந்திருக்கும் நிலையில், மீண்டும் எப்போது மழை தொடங்கும் என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,"தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டது. அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வட தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளுக்கு நகரும்.
காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு வட திசை நோக்கி நகர்வதால் கனமழை நீடிக்கும். இதன்படி அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கன முதல் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை, புறநகர் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளது. நாளை கள்ளக்குறிச்சி, டெல்டா மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது. அக்., 1-ம் தேதி முதல் தற்போது வரை 12 செ.மீ மழை பதிவாகி உள்ளது. இது இயல்பை விட 84 சதவீதம் அதிகமாகும்.
சென்னைக்கு இன்றும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு சில பகுதிகளில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 42 இடங்களில் கனமழை பெய்துள்ளது. அடுத்த 4 தினங்களுக்கு தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பரவலாக மழை பெய்யும். இரவிலும் காலையிலும் பரவலாக மழை பெய்வதை வடகிழக்கு பருவமழையின் இயல்பு. எனவே காலையில் இருந்து சென்னையில் மழை இருக்கும்" என்றார்.
No comments