Fact Check: பல வங்கிக் கணக்குகள் வைத்திருந்தால் அபராதம் விதிக்கப்படுமா? ஆர்.பி.ஐ. விதி என்ன?
ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று சமூக ஊடங்களில் ஒரு செய்தி பரவுகிறது.
இந்தச் செய்தி உண்மையா இல்லையா என்று தெரிந்துகொள்ளலாம்.
இன்றைய காலகட்டத்தில், மக்கள் பெரும்பாலும் ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிகளில் கணக்கு வைத்திருக்கிறார்கள். மத்திய மற்றும் மாநில அரசின் பல்வேறு திட்டங்களின் சேவைகளைப் பெறுவதற்கு வங்கிக் கணக்கு வைத்திருப்பது மிகவும் முக்கியமானதாக உள்ளது. பல்வேறு தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளில் லட்சக்கணக்கான மக்கள் ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகளை வைத்திருக்கிறார்கள்.
இந்நிலையில், சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி வைரலாக பரவி மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதல்களின்படி, ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று சமூக ஊடங்களில் ஒரு செய்தி பரவுகிறது. இந்தச் செய்தி உண்மையா இல்லையா என்று தெரிந்துகொள்ளலாம்.
இந்திய அரசின் பத்திரிகை நிறுவனமான, பிரஸ் இன்பர்மேஷன் பீரோ (PIB) இந்த செய்தியின் பின்னணியில் உள்ள உண்மையை வெளிப்படுத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் குறித்த உண்மையைச் சரிபார்த்து, இந்த அறிக்கையை வெளியிட்டிருக்கிறது.
"சில கட்டுரைகளில், இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய வழிகாட்டுதல்களின்படி, ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிகளில் கணக்கு வைத்திருந்தால் அபராதம் விதிக்கப்படும் என்று தவறான செய்தி பரப்பப்படுகிறது. இந்திய ரிசர்வ் வங்கி அத்தகைய வழிகாட்டுதல்களை வெளியிடவில்லை. இதுபோன்ற பொய்யான செய்திகள் குறித்து கவனமாக இருங்கள்!'' என்று அதில் கூறப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளச் செய்தியில் கூறப்படுவது போன்ற வழிகாட்டுதல்கள் ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படவில்லை என்று திட்டவட்டமாகக் கூறப்பட்டுள்ளது. மக்கள் மத்தியில் அநாவசியமான குழப்பத்தை ஏற்படுத்தும் இதுபோன்ற வைரல் பதிவுகளை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இணையத்தில் வெளியாகியுள்ள எந்தவொரு செய்தியின் உண்மைத்தன்மையை அறியவும் யார் வேண்டுமானாலும் பி.ஐ.பி.யைத் தொடர்புகொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்துடன் தொடர்புடைய செய்திகளைச் உறுதிப்படுத்த, சரிபார்க்க விரும்பும் பதிவின் ஸ்கிரீன் ஷாட் அல்லது இணைப்பை (URL) 8799711259 என்ற PIB Fact Check வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்பலாம் அல்லது factcheck@pib.gov.in என்ற அதிகாரபூர்வ மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பி வைக்கலாம்.
No comments