Breaking News

வெறும் 9 மாணவர்களுக்கு 8 அரசு ஆசிரியர்கள் - எங்கு தெரியுமா?

 

புதிய கல்வியாண்டு தொடங்கப்பட்டு, மாணவ, மாணவிகள் தீவிரமாக படித்து வருகின்றனர். தனியார் பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள் நீண்ட நேரம் உழைத்து பாடங்களை நடத்தி வரும் நிலையில், அரசுப் பள்ளிகளில் நிலைமை தலைகீழாக உள்ளது.
பெரும்பாலான பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள் இல்லை. அப்படியே இருந்தாலும், அவர்கள் சரிவர பாடம் நடத்துவதில்லை என பெற்றோர் குற்றஞ்சாட்டுவது வாடிக்கையாக இருக்கிறது.

இந்த நிலைமை தமிழ்நாட்டில் மட்டுமே இல்லை. இந்தியா முழுவதும் இருக்கும் ஒரு காட்சிதான். மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள சாகர் மாவட்டத்தில் சுமார் 45 பள்ளிகளில் ஒரு ஆசிரியர் கூட இல்லை. சாகர் நகரத்தில் இருந்து சுமார் 4 கி.மீ., தொலைவில் அமைந்துள்ள ஜிந்தா கிராமத்தில் உள்ள ஒரு பள்ளியில் 9 மாணவர்களுக்கு 8 ஆசிரியர்கள் இருக்கின்றனர்.

ஜிண்டா கிராமத்தில் 2 அரசுப் பள்ளிகள் இருக்கின்றன. இந்த பள்ளிகளில் 5 ஆண்டுகளுக்கு முன்பே மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்ததால், மூடுவதற்கான பரிந்துகள் வழங்கப்பட்டன. ஆனாலும், அவை தொடர்ந்து இயங்கி வருகின்றன. இங்குள்ள தொடக்கப்பள்ளியில் 6 மாணவர்களுக்கு 3 ஆசிரியர்களும், அருகில் உள்ள நடுநிலைப் பள்ளியில் வெறும் 3 மாணவர்களுக்கு 5 ஆசிரியர்களும் உள்ளனர்.

மத்தியப் பிரதேசத்தில் தற்போதைய விதிகளின்படி, 20க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பள்ளிகளை மூடுவதைக் கட்டாயமாக்குகிறது. இருப்பினும், பள்ளி வளாகங்களை ஒருங்கிணைப்பதற்கு பதிலாக, நான்கு புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு ஆண்டு சம்பளம் ரூ.60-70 லட்சம் வரை வழங்கப்படுகிறது.

இது ஒருபுறம் இருக்க சாகர் மாவட்டத்தில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள் இல்லை. எனவே, 2,870 தற்காலிக ஆசிரியர்கள் மூலமே பாடம் நடத்தப்படுகிறது. இருப்பினும், 1,446 மேநிலை ஆசிரியர்கள் தேவையில்லாமல் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தகவல் வெளிவந்த நிலையில், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என சாகர் மாவட்ட கல்வி அதிகாரி அரவிந்த் ஜெயின் தெரிவித்துள்ளார். அத்துடன் சேர்க்கை வரம்புக்கு கீழே உள்ள பள்ளிகள் மூடப்படும் என்றும், கல்வி வழங்கலை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

No comments