Breaking News

சொத்து பத்திரங்கள்.. இனிமே சார் பதிவாளர் ஆபீசுக்கு போக தேவையில்லை.. தமிழக பதிவுத்துறை புது சர்ப்ரைஸ்:

 

சொத்து பத்திரங்கள் தொடர்பாக புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. பொதுமக்களின் வசதியை கருத்தில் கொண்டு, பதிவுத்துறை இந்த வசதியை செய்திருக்கிறது.

தமிழகத்தில் சொத்து விற்பனை தொடர்பான பத்திரங்கள் அனைத்துமே, சார் பதிவாளர் அலுவலகம் வாயிலாக பதிவு செய்யப்படுகின்றன. பத்திரப்பதிவு பணிகள் படிப்படியாக ஆன்லைன் முறைக்கு மாற்றப்பட்டு வருகின்றன.

கணினிமயம்: அந்தவகையில், சொத்து, பத்திரங்களை முறைப்படுத்துவதற்காக, பத்திரப்பதிவு பணிகளை கணினிமயமாக்க, "ஸ்டார்" என்ற சாப்ட்வேர் கடந்த 2000ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. பிறகு 2018-ல் 2ம் கட்டமாக, "ஸ்டார் 2.0" என்ற சாப்ட்வேர் உருவாக்கப்பட்டதையடுத்து, பத்திரப்பதிவில் பெரும்பாலான பணிகள் அனைத்துமே ஆன்லைன் முறைக்கு மாற்றப்பட்டன.

சொத்து பரிமாற்றம் தொடர்பான விபரங்களை, ஆன்லைன் முறையில் சரிபார்த்து, பதிவுக்கு நேரம் ஒதுக்கப்படுகிறது. பத்திரப்பதிவு முடித்து, சில மணி நேரத்திலேயே பத்திர பிரதிகளும் வழங்கப்படுகின்றன... வில்லங்க சான்றிதழ்களையும் எளிதாக பெற முடிகிறது. எனினும், இந்த திட்டத்தில் சர்வர் மேம்பாட்டு பணிகளுக்கு அவசியம் எழுந்ததையடுத்து, "ஸ்டார் 3.0" என்ற புதிய சாப்ட்வேர் தேவை தயாரிப்பது என்றும் முடிவாகி உள்ளது.

ஸ்டார் 3.0: அந்தவகையில், "ஸ்டார் 3.0" சாப்ட்வேர் தயாரிக்க, 323.45 கோடி ரூபாய் நிதியை பயன்படுத்த அரசு ஒப்புதல் அளித்திருப்பதாகவும், சாப்ட்வேர் தயாரிப்பதற்கான ஒப்பந்ததாரரை தேர்ந்தெடுப்பதற்கான, டெண்டர் கோரும் நடவடிக்கைகள் துவங்கியுள்ளதாகவும் 4 நாட்களுக்கு முன்பு சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியாகியிருந்தது.

இந்த புதிய சாப்ட்வேர் பயன்பாட்டுக்கு வந்தால், சார் - பதிவாளர் அலுவலகத்தில் தான் சொத்துக்களை பதிவு செய்ய வேண்டும் என்றில்லாமல், எங்கிருந்தும், எந்த அலுவலகத்திலும் பதிவு செய்து கொள்ளும் வசதி கிடைத்துவிடும்.

டிஜிட்டல்மயம்: இப்படிப்பட்ட சூழலில், 159 வருட காலத்தில் அதாவது பதிவுத்துறை துவங்கிய காலம் முதல் தற்போதுவரை பதிவான அனைத்து பத்திரங்கள், டிஜிட்டல் முறைக்கு மாற்றப்பட்டிருப்பதாகவும், இதுகுறித்த சான்றிட்ட நகல்களை பெற்றுக்கொள்ளலாம் என்றும் தகவல் வெளியாகியிருக்கிறது.

ஆன்லைன் மயமாக்கப்பட்டதிலிருந்து பதிவான பத்திரங்கள் மட்டுமே ஸ்கேன் செய்யப்பட்டதால், அதற்கு முந்தைய ஆவணங்கள் மேனுவல் முறையிலேயே பராமரிக்கப்பட்டன... எனினும், கணினிமயமாக்கலுக்கு முந்தைய காலத்து பத்திரங்களின் பிரதிகளை, மேனுவல் முறையில் பெறுவதில் சிரமம் ஏற்பட்டதால், சார் - பதிவாளர் அலுவலகங்களில் பதிவான அனைத்து பத்திரங்களும் ஸ்கேன் செய்யப்பட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

பதிவுத்துறை: அதன்படி, பதிவுத்துறை துவங்கப்பட்ட 1865 முதல், 2009 வரையிலான காலத்தில் பதிவான பத்திரங்கள் முழுமையாக டிஜிட்டல் முறைக்கு மாற்றப்பட்டிருக்கின்றன.

அதனால், இனிமேல் சொத்து வாங்குவோர், சார் - பதிவாளர் அலுவலகம் தேடி அலையாமல், 159 வருடங்கள் வரையிலான முந்தைய ஆவணங்களின் பிரதிகளை, ஆன்லைனிலேயே எளிதாக பெற்றுக்கொள்ளலாம்.. அத்துடன், முந்தைய பரிமாற்றங்களை, சார் - பதிவாளர்கள் எளிதில் கணினி தகவல் தொகுப்பு வாயிலாக, உடனுக்குடன் பார்த்துக் கொள்ளவும் முடியும்.

No comments