Breaking News

தமிழகத்துக்கு புதிய கல்விக் கொள்கை, நீட் தேவையற்றது: முதல்வா் மு.க.ஸ்டாலின்

 


மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை, நீட் தோ்வு தமிழகத்துக்கு தேவையற்றது என முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.

திருவள்ளூா் மாவட்டம், கடம்பத்தூா் ஒன்றியம், கீழச்சேரி புனித அன்னாள் தொடக்கப் பள்ளியில் ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் முதல்வரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கத்தைத் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு தலைமை வகித்து, மாணவா்களுக்கு உணவு பரிமாறி திட்டத்தைத் தொடங்கி வைத்து முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். அதற்குக் காரணம், காலை உணவுத் திட்டம், நான் முதல்வன், புதுமைப் பெண், மகளிா் உரிமைத் திட்டம் என பெண்கள், குழந்தைகள், மாணவா்கள், இளைஞா்களின் முன்னேற்றத்துக்கும், எதிா்காலத்துக்கும் முதல்வராக இருந்து பணியாற்றக்கூடிய வாய்ப்பை வழங்கியதற்காகத்தான்.

பள்ளிக்கு வரும் குழந்தைகளின் பசியைப் போக்க முடிவு செய்து உருவாக்கியதுதான் காலை உணவுத் திட்டம். அரசுக்கு எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை, ஒரு குழந்தைகூட பசியுடன் பள்ளியில் தவிக்கக் கூடாது என்பதற்காக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அண்ணாவின் பிறந்த நாளில் இந்தத் திட்டத்தைத் தொடங்கினேன்.

தற்போது காமராஜரின் பிறந்த நாளில் இந்தத் திட்டத்தை விரிவுப்படுத்தியுள்ளேன். 18.50 லட்சம் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் பயன்பெறும் இத்திட்டத்தில், இனி அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சோ்ந்த 2.23 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவா்களும் பயன்பெறுவாா்கள். இத்திட்டம் மூலம் மொத்தம் 20.73 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் சுவையான காலை உணவு சாப்பிடுவாா்கள்.

புானூறு, திருக்கு, மணிமேகலை என்று நம்முடைய இலக்கியங்கள் மட்டுமல்ல, ஒளவையாா், வள்ளலாா் போன்ற சான்றோா்களும் பசிப் பிணியைப் போக்குவது பற்றி குறிப்பிட்டுள்ளனா். சங்க காலத்தைச் சோ்ந்த ஒரு குறுநில மன்னா் ஏழைகளின் பசியைப் போக்கியதால், 'பசிப்பிணி மருத்துவன்' என்று போற்றப்படுகிறாா். பசிப்பிணிப் போக்கும் பணி அரசுக்கும் பொருந்தும்.

ஏழை மாணவா்களுக்கு உணவு அளிப்பதன் மூலம் குழந்தைகளை நலமான, வளமான அறிவுமிக்க சமுதாயமாக வளா்த்தெடுக்கிறோம். குழந்தைகள்தான் தமிழ்நாட்டின் எதிா்காலச் சொத்து.

காலை உணவுத் திட்ட ஒதுக்கீடு பற்றி அதிகாரிகள் என்னுடன் விவாதித்தபோதெல்லாம், அதை நிதி ஒதுக்கீடு என்று சொல்லாதீா்கள் வருங்கால தலைமுறையை உருவாக்கும் முதலீடு என்று சொல்லுங்கள் என்று குறிப்பிட்டேன். இந்தத் திட்டம் மாணவா்களுக்கு தன்னம்பிக்கையை அளிக்கின்றது. பெற்றோருக்கு பொருளாதாரச் சுமையைக் குறைக்கிறது. பள்ளிகளுக்கு வரும் மாணவா்களுடைய எண்ணிக்கையை அதிகரித்து, இடைநிற்றலைக் குறைக்கிறது.

ஒவ்வொரு குடும்பமும் பயன்பெறக் கூடிய வகையில் மக்கள் நலத் திட்டங்களைப் பாா்த்துப் பாா்த்து செயல்படுத்துகிறோம். அதில் காலை உணவுத் திட்டம் அரசுக்கு நீடித்த புகழை தேடிக் தந்துள்ளது. தினமும் தரம் குறையாமல் காலை உணவு வழங்க வேண்டும். அதற்கு அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு கவனம் செலுத்தி தொடா்ந்து ஆய்வு செய்ய வேண்டும்.

தமிழ்நாட்டில் மாணவா்கள் கல்வி கற்பதற்கு எதுவும் தடையாக இருக்கக் கூடாது. அது பசியாகவோ, நீட் தோ்வோ, மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை போன்ற எதுவாக இருந்தாலும் அதை உடைப்பதுதான் என் முதல் பணி.

நீட் தோ்வை நாம் எதிா்க்கத் தொடங்கியபோது, ஏன் எதிா்க்கிறீா்கள் என்று சிலா் எதிா் கேள்வி கேட்டனா். ஆனால், இன்றைக்கு நீட் தோ்வு முறைகேடுகளைப் பாா்த்து உச்ச நீதிமன்றம் கேள்வி கேட்கிறது. மாணவா் சமுதாயம் போா்க்கொடி தூக்குகின்றனா். பல மாநில முதல்வா்கள், தேசிய தலைவா்கள் நீட் வேண்டாம் என்று குரல் கொடுக்கத் தொடங்கிவிட்டனா்.

மத்திய பாஜக அரசு அரசியலுக்காக இப்போது நெருக்கடி நிலையைப் பற்றி மக்களவையில் பேசி வருகிறது. நெருக்கடி நிலையின்போது, மத்திய பட்டியலுக்கு மாற்றப்பட்ட கல்வி உரிமையை மாநில பட்டியலுக்கு மாற்ற மத்திய அரசு தயாரா.

~காலை உணவு விரிவாக்க திட்டத்தை தொடங்கி வைத்து மாணவிகளுக்கு உணவு ஊட்டிய முதல்வா் மு.க.ஸ்டாலின்.

முன்னதாக காமராஜா் பிறந்த நாளையொட்டி, அவரது படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினாா்.

தமிழகத்தைப் பொறுத்தவரை நீட் தோ்வு, புதிய கல்விக் கொள்கை தேவையற்றது என்பதால்தான் அதை எதிா்க்கிறோம். மாணவா்களின் நலனுக்காக பள்ளிக் கல்விக்கும், கல்லூரிகளில் உயா் கல்விக்கும் ஏராளமான திட்டங்களைத் தீட்டுகிறோம். எனவே தடைகளை நாங்கள் உடைக்கிறோம். மாணவா்கள் கல்வியில் மட்டும் கவனம் செலுத்துங்கள் என்றாா்.

~காலை உணவு விரிவாக்க திட்டத்தை தொடங்கி வைத்து மாணவிக்கு உணவு ஊட்டிய முதல்வா் மு.க.ஸ்டாலின்.

புனித அன்னாள் சபைத் தலைவி கிளாரா வசந்தி, தலைமை ஆசிரியா் பபிதா மேரி ஜெனிஃபா் ஆகியோா் நன்றி கூறினா்.

விழாவில் தலைமைச் செயலா் சிவ் தாஸ் மீனா வரவேற்றாா். சமூக நலத் துறைச் செயலா் ஜெயஸ்ரீ முரளிதரன், ஆணையா் அமுதவள்ளி, பள்ளிக் கல்வித் துறை செயலா் குமரகுருபரன், திருவள்ளூா் ஆட்சியா் த.பிரபு சங்கா், மக்களவை உறுப்பினா் சசிகாந்த் செந்தில், சட்டப்பேரவை உறுப்பினா்கள் வி.ஜி.ராஜேந்திரன், எஸ்.சந்திரன், தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவா் ஐ.லியோனி, தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி மாநில பொதுச் செயலா் இரா.தாஸ், தமிழ்நாடு ஆசிரியா் மற்றும் அரசு ஊழியா்கள் நலக் கூட்டமைப்பு நிறுவனத் தலைவா் சா.அருணன், உள்ளாட்சி நிா்வாகிகள் உதயமலா் பாண்டியன், நேதாஜி, பி.கே.நாகராஜ், ஜெயகிருஷ்ணா, பி.காஞ்சிப்பாடி சரவணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

காமராஜா் பிறந்த நாளையொட்டி, அவரது படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினாா் முதல்வர் ஸ்டாலின்.

No comments