Breaking News

நான் முதல்வன்’ திட்டத்தின்கீழ் பயிற்சி பெறுவதற்கான நுழைவுத் தேர்வு - ஏராளமானோர் பங்கேற்பு :

1279453

மத்திய அரசு பணிகளில் விண்ணப்பித்தவர்கள் பயிற்சி வகுப்பில் சேர நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இத்தேர்வு காலை 10 மணிக்கு துவங்கி 11 மணிக்கு நிறைவடைந்தது.

'நான் முதல்வன்’ திட்டத்தில் போட்டித்தேர்வுகளுக்கான தனி பிரிவை இளைஞர் நலத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த மார்ச் 7-ம் தேதி தொடங்கி வைத்தார். மத்திய அரசு வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளை தமிழக இளைஞர்கள் எளிதாக அணுகும் வகையில் பல பயிற்சி திட்டங்களை இந்த பிரிவு செயல்படுத்தி வருகிறது.

இந்நிலையில், ‘மத்திய பணியாளர் தேர்வாணையம், ரயில்வே, வங்கிப் பணி ஆகிய தேர்வுகளில் தமிழக இளைஞர்கள் அதிகம் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில், தேர்ந்தெடுக்கப்பட்ட 1,000 மாணவர்களுக்கு உண்டு, உறைவிட வசதியுடன் 6 மாத பயிற்சி வழங்கப்படும்’ என்று 2024-25-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

அந்த வகையில் இன்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் வங்கிப்பணிகள், ரயில்வே, மத்திய பணியாளர் பணிகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இத்தேர்வு காலை 10 மணிக்கு துவங்கி 11 மணிக்கு நிறைவடைந்தது.

அந்தவகையில் விழுப்புரத்தில் வங்கித்தேர்வுகளுக்கு விண்ணப்பித்தவர்கள் பீமநாயக்கன் தோப்பு அரசு மேல்நிலைப்பள்ளியில் தேர்வு எழுதினர். 158 விண்ணப்பதாரர்களுக்கு நுழைவு சீட்டு அனுப்பப்பட்டதில் 103 விண்ணப்பதார்கள் பங்கேற்றனர். இதேபோல விழுப்புரம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரயில்வே மற்றும் மத்திய பணியாளர் தேர்வாணையத்திற்கு விண்ணப்பித்த 344 பேருக்கு நுழைவு சீட்டு அனுப்பப்பட்டதில் 204 விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுதினர். இத்தேர்வு முடிவுகள் விரைவில் அறிவிக்கப்பட்டு ஆகஸ்ட்1ம் தேதி முதல் இப்பணிகளுக்கான பயிற்சி அளிக்கப்படும் என தெரிகிறது.

No comments