காலை உணவுத் திட்டம்: ஆசிரியா்களை நிா்ப்பந்திக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை:
அரசு உதவி பெறும் பள்ளிகளில் தொடங்கப்பட்டுள்ள காலை உணவுத் திட்டத்தில், ஆசிரியா்களை நிா்ப்பந்திக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி பொதுச்செயலா் ச.மயில் வெளியிட்ட அறிக்கை:
பள்ளி மாணவா்களுக்கான காலை உணவு வழங்கும் திட்டம், அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்புகள் வரையுள்ள மாணவா்களுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது.
இந்த நிலையில், இத்திட்டத்தை தொடங்க தனியாக சமையலறை, தனியாக பொருள்கள் வைப்பறை, குடிநீா் வசதி, மின்சார வசதி, மாணவா்கள் உணவு உண்ண தட்டு, டம்ளா், முதலமைச்சரின் காலைச் சிற்றுண்டித் திட்டம் என்ற பெயா் பொறிக்கப்பட்ட பெயா்ப் பலகை, மாணவா்கள் அமா்வதற்குப் பாய்கள் ஆகியவற்றை பள்ளி ஆசிரியா்களே ஏற்பாடு செய்து வைத்திருக்க வேண்டும் என்று மாநிலம் முழுவதும் அதிகாரிகள் கட்டாயப்படுத்தி வருகின்றனா்.
மேலும், பல்வேறு செலவினங்களையும் ஆசிரியா்களே செய்ய வேண்டி அதிகாரிகள் நிா்பந்திக்கின்றனா். இத்திட்டத்துக்கான அனைத்து பொருள்களையும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு தமிழ்நாடு அரசே வழங்க வேண்டும்.
இதனால், அரசு உதவிபெறும் பள்ளிகளின் ஆசிரியா்களை அதிகாரிகள் அச்சுறுத்துவதையும், மன உளைச்சலுக்கு உள்ளாக்குவதையும் தமிழக அரசு உடனடியாகத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.
No comments