Breaking News

பானி பூரியில் மறைந்து இருக்கும் அபாயம்.. உணவுத்துறை நடத்திய சோதனையில் கிடைத்த ஷாக் தகவல்

 

கர்நாடகாவில் சாலை ஓரம் விற்கப்படும் பானி பூரியின் தரம் குறித்து புகார்கள் அளிக்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில் அங்குள்ள சாலை ஓர கடைகள் முதல் உயர் தர உணவக கடைகளில் பானி பூரி மாதிரிகளை கைப்பற்றி சோதனை செய்யப்பட்டது. இதில், புற்றுநோயை ஏற்படுத்தும் ரசாயனங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது பானி பூரி பிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சாலை ஓரங்களில் முன்பெல்லாம் குச்சி ஐஸ், கடலைகள், மிட்டாய் கடைகள் கண்ணில் படும். ஆனால் இப்போது சாலைகளில் செல்லும் போது சாலை ஓரங்களில் பெரும்பாலும் நம் கண்களுக்கு முதலில் படுவது பானி பூரி கடைகள் தான். பானி பூரிக்கென தனி பிரியர்கள் இருக்கிறார்கள். சாலைகளில் செல்லும் போது பானி பூரி கடையை பார்த்துவிட்டால் போதும் உடனே வாகனத்தை நிறுத்தி அதனை சுவைத்து விட்டு தான் செல்வர்.

ஒரு பூரியை கையில் எடுத்து அதில் ஒரு விரலால் அழுத்தி அதில் வரும் குழியில், வெங்காயம், உருளைக்கிழங்கு, பானியை ஊற்றி வாயில் அப்படியே போட்டு சாப்பிடுவது பலருக்கும் அலாதி பிரியமாக இருக்கும். இப்படி பானி பூரியை விரும்பி சாப்பிடும் பலருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது புற்றுநோயை ஏற்படுத்தும் ரசாயனங்கள் கர்நாடகாவில் விற்பனை செய்யப்பட்ட பானி பூரியில் கலக்கப்பட்டது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

கர்நாடகாவில் சாலை ஓரம் பானி பூரி கடைகளில் விற்கப்படும் பானி பூரிகளில் அண்மையில் தரம் குறித்து புகார் எழுந்தது. இதையடுத்து அதிகாரிகள் அங்கு சோதனை நடத்தினர். இதில், சாலையோர கடைகள் முதல் உயர் ரக உணவகங்கள் வரை பானி பூரி விற்பனை செய்த கடைகளில் இருந்து மாதிரிகளை ஆய்வுக்கு அதிகாரிகள் எடுத்து சென்றனர். இதில் 276 மாதிரிகளில் 41 மாதிரிகளில் செயற்கை நிறமிகள், புற்றுநோயை ஏற்படுத்தும் காரணிகள் கண்டறியப்பட்டன.

மேலும் 18 பானி பூரி மாதிரிகள் மனிதர்கள் சாப்பிட தகுதியே இல்லாதது என்று சோதனை முடிவு வந்தது. அதாவது அதிகாரிகள் எடுத்து வந்த மாதிரிகளில் 22 சதவீத பானி பூரி மாதிரிகள் தரமற்றவை என நிரூபணமானது. உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய ரசாயனங்கள் பானி பூரிகளில் கலக்கப்பட்டது தெரியவந்தது.

கர்நாடகாவில் கபா, கோபி மஞ்சூரியன், பஞ்சு மிட்டாய்களில் செயற்கை வண்ணம் சேர்க்க தடை விதித்த சில நாட்களிலேயே தற்போது பானிபூரியும் சர்ச்சையில் சிக்கி உள்ளது. பஞ்சுமிட்டாயில் தீமை உண்டாக்கும் புரோட்டைமைன் பி, செயற்கை சாயம் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அதற்கு தமிழக அரசு தடை விதித்தது. வயிற்று வலி தொடங்கி இதய பிரச்சினை வரை செயற்கை நிறமிகள் ஏற்படுத்தும்.

பார்த்த உடன் கவர்ந்திழுக்கும் வண்ணங்களை தவிர அதில் வேறு ஒன்றும் இல்லாததால், இது போன்ற ரசாயனங்கள் தவிர்க்கப்பட வேண்டியவை தான். தற்போது பானி பூரியிலும் இந்த செயற்கை நிறமிகள் சேர்க்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு இருப்பது பானி பூரி பிரியர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

No comments