இடைநிலை ஆசிரியர்களுக்கு இனிப்பான செய்தி.. புதிதாக ஆசிரியர் தேர்வு வாரியம் லட்டு மாதிரி அறிவிப்பு
2023-2024-ம் கல்வி ஆண்டில் 1,768 இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், இப்போது1000 பணியிடங்கள் கூடுதலாக தேர்வு செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்வை 26 ஆயிரத்து 510 பேர் எழுத உள்ள நிலையில் 9 பேரில் ஒருவருக்கு வேலை உறுதியாகி உள்ளது.
2023-2024-ம் கல்வி ஆண்டுக்காக 1,768 இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு கடந்த பிப்ரவரி 9-ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து, இடைநிலை ஆசிரியர் பதவியில் கூடுதலாக 1,000 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான சேர்க்கை அறிவிக்கையை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
இடைநிலை ஆசிரியர் பணிக்கான போட்டித்தேர்வு வரும் ஜூலை 21ம் தேதி நடைபெற போகிறது. இந்த தேர்வு தமிழ் , உருது, தெலுங்கு, கன்னடா, மலையாளம் ஆகிய மொழிப் பாடங்களுக்கும் நடைபெற உள்ளது. தமிழ் தகுதித் தேர்வில் 40 சதவீதம் மதிப்பெண் பெற்றால் மட்டுமே அவர்களின் அடுத்தத்தாள் திருத்தப்படும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
போட்டி எழுத்துத் தேர்வில் தகுதி ஒன்றில், தமிழ் மொழி தாள் தேர்வில் 30 கேள்விகள் 50 மதிப்பெண்களுக்குக் கேட்கப்பட உள்ளது. அதில் தேர்வர்கள் 40 சதவீதம் மதிப்பெண் பெற வேண்டியது கட்டாயம் ஆகும். பகுதி 2 ல் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடா, உருது, ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் ஐந்து பாடங்களிலிருந்து 150 மதிப்பெண்களுக்கு 3 மணி நேரம் தேர்வு நடைபெறும் வகையில் 150 கேள்விகள் இடம் பெறும்.
மொழிப் பாடங்களில் தமிழ் அல்லது சிறுபான்மை மொழியில் ஏதாவது ஒன்றினை அவர்கள் பகுதி இரண்டு தேர்வு செய்யலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது.. வினாத்தாளில் மொழிப் பாடத்திற்கான தேர்வுகள் அந்தந்த மொழிகளிலும், ஆங்கிலம் பாடத்திற்கான வினாக்கள் ஆங்கிலத்திலும், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் பாடத்திற்கான வினாக்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும் இடம் பெற உள்ளது.
போட்டி தேர்வில் பெறும் மதிப்பெண்ணுடன் ஏற்கனவே ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுக் காத்திருக்கும் ஆண்டுகளுக்கு ஏற்ப அரசால் வழங்கப்பட்டுள்ள வெயிட்டேஜ் மதிப்பெண்களும் சேர்த்துத் தர வரிசை பட்டியல் வெளியிடப்பட உள்ளது. அதன் பின்னர் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு, தொடக்க கல்வித்துறை மற்றும் பிற துறைகளின் மூலம் பணி நியமனம் செய்யப்படும்.
26 ஆயிரத்து 510 பேர் விண்ணப்பித்துள்ள இந்த இடைநிலை ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வு வருகிற 21-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இந்த நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இடைநிலை ஆசிரியர் பணிக்கு ஏற்கனவே 1,768 ஆசிரியர்கள் தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டது. மேலும், இந்த அறிவிப்பில் திருத்தம் செய்யப்பட்டு கூடுதலாக ஆயிரம் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இவர்களுக்கான போட்டி எழுத்து தேர்வு ஜூலை 21 ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
No comments