Breaking News

கோவையில் இன்று அரை நாள் பள்ளிகளுக்கு விடுமுறை.. மாணவர்களே நோட் பண்னுங்க.. மற்ற மாவட்டங்களில் எப்படி?

 


கோவையில் இன்று அரை நாள் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

இன்று மதியம் வரை மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் விழுப்புரத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னை உள்பட 5 மாவட்டங்களில் மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி வருகிறது. குறிப்பாக கோவை, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழை கொட்டி தீர்த்தது. வங்கக்கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சி, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக வாய்ப்பு இருப்பதால் தமிழகத்தில் பல இடங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியது..

கோவையிலும் பரவலாக மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடப்பட்டது. அந்த வகையில் கோவையில் நேற்று மாலை கனமழை பெய்தது. காலை வேளையில் பெரிதாக மழை இல்லை என்றாலும் மாலையில் வெளுத்து வாங்கியது. கோவையில் ஏற்கனவே பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து இருப்பதால் பல இடங்களிலும் தண்ணீர் தேங்கியுள்ளது.

இந்த நிலையில் மீண்டும் மழை பெய்ததால், சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக மேட்டுப்பாளையம் சாலை, சத்தி சாலை, திருச்சி சாலை உள்பட பல்வேறு சாலைகளில் மழைநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. இந்த நிலையில், மழை காரணமாக கோவையில் இன்று அரைநாள் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் கூறுகையில், "மழையின் காரணமாக அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் மதியம் வரை மட்டும் செயல்படும்" என்று தெரிவித்துள்ளார். ஏற்கனவே மழையின் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments