Breaking News

செல்போன் சார்ஜ் போடுறீங்களா? இந்த தவறை மட்டும் செய்யாதீங்க.. பெங்களூரில் இளைஞரின் உயிரே போச்சு:

 

நாம் அனைவரும் செல்போனை அடிக்கடி சார்ஜ் செய்யும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

இல்லாவிட்டால் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம். ஏனென்றால் பெங்களூரில் 24 வயது இளைஞர் செல்போனை சார்ஜ் செய்தபோது பலியாகி உள்ளார்.

கர்நாடகாவின் பீதரை மாவட்டத்தை சேர்ந்தவர் சீனிவாஸ் (வயது 24). இவருக்கு ஐடி நிறுவனத்தில் பணியாற்ற வேண்டும் என்பது தான் கனவாக உள்ளது. இதனால் சீனிவாஸ் சொந்த ஊரை விட்டு பெங்களூர் வந்தார்.

பெங்களூரில் உள்ள கோச்சிங் மையத்தில் ஐடி பணிக்கான திறமையை வளர்த்து கொள்ளும் வகையில் புதிய கோர்ஸ்களை படித்தார். சீனிவாஸ் பெங்களூர் ராஜாஜி நகர் அருகே மஞ்சுநாத் நகரில் உள்ள பிஜியில் தங்கி படித்து வந்தார்.

இந்நிலையில் தான் நேற்று இரவு 8 மணிக்கு சீனிவாஸ் தனது செல்போனை எடுத்து சார்ஜ் போட சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனால் அவர் மயங்கினார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அதோடு அவர் மின்சாரம் தாக்கி இறந்ததாக தெரிவித்தனர்.

இருப்பினும் சீனிவாஸ் மீது எப்படி மின்சாரம் பாய்ந்தது? என்பது தெரியவில்லை. ஸ்விட்ச்சில் இருந்து மின்சாரம் பாய்ந்ததா? இல்லாவிட்டால் அவரது சார்ஜரில் இருந்து மின்சாரம் பாய்ந்ததா? என்பது தெரியவில்லை. இருப்பினும் ஸ்விட்சை அவர் 'ஆன்' செய்து சார்ஜ் செய்தது தான் அவரது உயிரிழப்புக்கு காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதுபற்றிய புகாரின் பேரில் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

இதனால் வீட்டில் செல்போன், லேப்டாப்களை சார்ஜ் செய்யும்போதும் சரி, பிற மின்சாதன உபகரணங்களை பயன்படுத்தும்போதும் சரி மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும். ஏனென்றால் சிறு தவறும் கூட உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம். ஏனென்றால் இப்படியான சம்பவம் நடப்பது இது முதல் முறையல்ல. தமிழகத்திலும் இதற்கு முன்பு பல சம்பவங்கள் நடந்துள்ளது.

அதாவது கடந்த மே மாதம் இறுதியில் சென்னையில் லேப்டாப் சார்ஜ் செய்தபோது பெண் டாக்டர் பலியானார். அதாவது கோவையில் இருந்து சென்னைக்கு பயிற்சிக்கு வந்த பெண் மருத்துவர் சரணிதா தனது லேப்டாப்பில் சார்ஜ் போடும்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அதன்பிறகு கடந்த மாதம் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சொக்கநாதன் புத்தூர் கிராமத்தில் செந்திமயில் என்ற பெண் தனது லேப்டாப்பை சார்ஜ் செய்தார். அப்போது மின்சாரம் தாக்கி அவரும் பலியானார். இதனால் தான் செல்போன், லேப்டாப் சார்ஜ் செய்யும்போது அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் என்பது முக்கியமானதாகும்.

No comments