Breaking News

PG TRB ANNOUNCEMENT SOON-அரசு பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலி இடங்கள் பட்டியல் தயாரிப்பு: டிஆர்பி தேர்வுக்கு விரைவில் அறிவிப்பு

1243878
 

அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் 50 சதவீத இடங்கள் பதவி உயர்வு மூலமாகவும், 50 சதவீத இடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் (டிஆர்பி) போட்டித் தேர்வு மூலம் நேரடி நியமன முறையிலும் நிரப்பப்படுகின்றன.

அந்த வகையில், முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியில் 200 காலி இடங்கள் இந்த ஆண்டு நிரப்பப்படும். அதற்கான அறிவிப்பு மே மாதம் வெளியிடப்பட்டு, ஆகஸ்டில் போட்டித் தேர்வு நடத்தப்படும் என்று 2024-ம் ஆண்டுக்கான டிஆர்பி வருடாந்திர தேர்வு அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அரசு மேல்நிலைப் பள்ளிகளில் வரும் ஜூன் 1-ம் தேதி நிலவரப்படி, காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களின் விவரங்களை பள்ளிக்கல்வித் துறை கோரியுள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (மேல்நிலைக் கல்வி) அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது: அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் வரும் ஜூன் 1-ம் தேதி நிலவரப்படி, முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-1), கணினி பயிற்றுநர் (கிரேடு-1) பணிகளில் நிரப்பத்தகுந்த காலி இடங்களின் விவரங்களை பாடவாரியாக தயார்செய்து மே 10-ம் தேதிக்குள் மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

அவ்வாறு அனுப்பும்போது, கடந்த 2023 ஆகஸ்ட் 1-ம் தேதி நிலவரப்படி, ஆசிரியர் இல்லாமல் உபரி என கண்டறிந்து பொது தொகுப்புக்கு ஒப்படைக்கப்பட்ட காலி இடங்களையும், கூடுதல் தேவை உள்ள காலி பணியிடங் களையும் காலி இடமாக கருதக் கூடாது. அது நிரப்பத்தகுந்த காலி பணியிடம் தானா என்பதை உறுதிசெய்துகொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஏற்கெனவே 200 காலி இடங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது புதிய காலி இடங்களின் விவரங்கள் சேகரிக்கப்படுவதால், டிஆர்பி மூலம் நிரப்பப்படும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments