Breaking News

வீட்டில் பழைய வங்கி பாஸ்புக் இருக்கா? ரிசர்வ் வங்கியில் தூங்கும் 67000 கோடி! எப்படி திரும்ப பெறுவது?


 2025 ஆம் ஆண்டின் ஜூன் கடைசிக் காலகட்டத்தில், வங்கிகளில் இருக்கும் உரிமை கோரப்படாத பணம் 67,003 கோடி ரூபாய் வரை உயர்ந்துள்ளதாக மத்திய நிதித்துறை வழங்கிய தரவுகளில் கூறப்பட்டுள்ளது. இதில் பொதுப் பிரிவு வங்கிகளில் சுமார் 58,330 கோடி ரூபாயும், தனியார் வங்கிகளில் 8,673.72 கோடி வரை உள்ளது என சொல்லப்படுகிறது. இந்நிலையில், உரிமை கோரப்படாத பணம் என்றால் என்ன? அது யாருக்குச் சொந்தம்? அதனை எப்படி எடுப்பது? என்பது குறித்து பார்க்கலாம்..

நாம் வங்கியில் சேமிப்பு கணக்கு, நிலையான வைப்பு (Fixed Deposit), மீளக்கூடிய வைப்பு (Recurring Deposit) போன்றவற்றில் பணத்தை சேமித்து வைத்தால், சில நேரங்களில் பல காரணங்களால் அந்த கணக்குகளை நீண்ட நாட்களுக்கு பயன்படுத்தாமல் விடுவோம்.
உதாரணமாக, கணக்கு வைத்த நபர் காலமானால், முகவரி மாற்றம் ஏற்பட்டால், குடும்பத்தினர் அந்த கணக்கு பற்றிய தகவலை அறியாததால், அல்லது வங்கி இணைப்பு மாற்றப்பட்டால், அந்த கணக்குகளில் உள்ள பணம் பயன்படுத்தப்படாமல் கிடக்கும். இதையே "உரிமை கோரப்படாத வங்கி பணம்" (Unclaimed Bank Deposits / Unclaimed Money) என்று அழைக்கப்படுகிறது.
உரிமை கோரப்படாத வங்கி தொகை ஒரு சேமிப்பு கணக்கு, நிலையான வைப்பு, அல்லது ஏதேனும் வங்கி வைப்பு 10 ஆண்டுகள் தொடர்ந்து எந்தப் பரிவர்த்தனையும் இல்லாமல் இருந்தால், அதனை வங்கி "உரிமை கோரப்படாத" பணமாக வகைப்படுத்தும். இதற்குள் வட்டியும் சேர்த்து அந்த தொகை நிலுவையில் இருக்கும். உதாரணமாக, ஒருவர் 2010-ல் 5 லட்சம் ரூபாய் நிலையான வைப்பு செய்துள்ளார் என்றால், 2020 வரை அதில் எவ்வித பரிவர்த்தனையும் நடக்கவில்லை என்றால், 2020க்கு பிறகு அது உரிமை கோரப்படாத தொகையாக கருதப்படும்

இந்திய ரிசர்வ் வங்கி இந்த உரிமை கோரப்படாத தொகைகள் அனைத்தும் இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) DEAF - Depositor Education and Awareness Fund என்ற நிதிக்கு மாற்றப்படுகின்றன. வங்கிகள் ஒவ்வொரு ஆண்டும் 10 ஆண்டுகள் கடந்த பணத்தை இதற்குள் மாற்ற வேண்டும். ஆனால் முக்கியமானது என்னவென்றால், அந்த பணம் கணக்குதாரருடைய சொந்த உரிமையாகவே இருக்கும். அவர் அல்லது அவரது வாரிசுகள் எப்போது வேண்டுமானாலும் அதை பெற்றுக் கொள்ள முடியும். வங்கி பணம் பெறுவது எனவே, கணக்கு வைத்த நபர் உயிருடன் இருந்தால் அவர் தானே கோரலாம். மேலும், கணக்கு வைத்த நபர் இறந்திருந்தால், அவரது சட்டபூர்வ வாரிசுகள் (legal heirs) கோர முடியும். இதற்காக பெரும்பாலான வங்கிகளின் இணையதளங்களில் "Unclaimed Deposits" எனும் பகுதி இருக்கும். அங்கு பெயர், பிறந்த தேதி அல்லது PAN எண்ணை கொண்டு தேடலாம். மேலும், 2023 முதல் RBI தொடங்கிய UDC (Unclaimed Deposits Portal) மூலமாக பல வங்கிகளின் தகவல்களை ஒரே இடத்தில் தேட முடியும்.

ஆன்லைனில் தொகை பெறுதல் பணம் கோரும்போது, அடையாள ஆவணங்கள் (Aadhaar, PAN), முகவரி சான்று, வங்கிக் கணக்கு விவரம், மற்றும் மரணச் சான்றிதழ் (வாரிசுகள் கோரும்போது) போன்ற ஆவணங்கள் தேவைப்படும். இந்த அனைத்து ஆவணங்களும் சரிபார்க்கப்பட்டதும், வங்கி அந்த பணத்தை வட்டி சேர்த்து வழங்கும். உரிமை கோரப்படாத பணம் எப்போதும் கணக்குதாரரின் சொத்தாகவே இருக்கும். அதற்கான உரிமை 10 வருடத்திற்கு பிறகும் அதனை எத்தனை ஆண்டுகள் கழித்து வேண்டுமானால் பெற்றுக் கொள்ளலாம், உண்மையில், பலர் தங்களிடம் இப்படியான கணக்குகள் இருப்பதை அறியாமலேயே இருக்கிறார்கள். எனவே குடும்பத்தினருடன் வங்கி விவரங்களைப் பகிர்ந்து வைத்திருப்பது மிகவும் முக்கியம்.

No comments