Breaking News

அதிக விலையில் தங்கம் வாங்குறீங்களா? புத்திசாலித்தனமாக முதலீடு செய்வது எப்படி? சூப்பர் டிப்ஸ் இதோ.!!

 

தீபாவளி மற்றும் தனத்திரயோதசி பண்டிகைகள் நெருங்கிவிட்ட நிலையில், தங்கம் வாங்குவது இந்திய குடும்பங்களின் பாரம்பரிய மற்றும் கலாச்சாரப் பழக்கங்களில் ஒன்றாகும். இருப்பினும், தற்போது 10 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.1.2 லட்சம் முதல் ரூ.1.3 லட்சம் என்ற சாதனை உச்சத்தில் இருப்பதால், வழக்கமான நேரத்தைவிட இந்த முறை முதலீட்டில் அதிக கவனமும், உத்தியும் தேவைப்படுகிறது.

தங்கத்தை வெறுமனே வாங்காமல், புத்திசாலித்தனமான முதலீட்டாளர் போல அணுகுவது அவசியம் ஆகும். பாரம்பரியம், வசதி மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றுடன் இந்தத் திருவிழாக் காலத்தில் தங்கத்தில் முதலீடு செய்வதற்கான 5 முக்கிய வழிகளை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
1. ஆபரணங்கள் மற்றும் நாணயங்கள் : தங்கத்தை நேரடியாக வாங்கி, கையில் வைத்துக் கொள்ள முடியும் என்பதே இதன் பெரிய நன்மை. பண்டிகை மற்றும் பரிசு வழங்குவதற்கு இது மிகவும் சிறந்தது. சவால்கள் : செய்கூலி (5% முதல் 20% வரை) மற்றும் சேதாரம் ஆகியவை விற்பனையின்போது இழப்பாக மாறும். அதேபோல், பாதுகாப்பான சேமிப்பு மற்றும் தூய்மைச் சான்றிதழ் (ஹால்மார்க்) இருப்பது அவசியம். முதலீடு : செய்கூலி குறைவான மற்றும் இலகுவான வடிவமைப்புகளை தேர்ந்தெடுக்க வேண்டும். நாணயங்கள் மற்றும் கட்டிகளை அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களிடம் மட்டுமே வாங்க வேண்டும்.
2. தங்கப் பத்திரங்கள் : மத்திய அரசு வெளியிடும் இந்தத் திட்டத்தில், தங்கத்தின் விலையேற்றத்துடன் கூடுதலாக ஆண்டுக்கு சுமார் 2.5% வட்டி கிடைக்கிறது.

நன்மைகள் : செய்கூலி, சேமிப்புக் கட்டணம் இதில் கிடையாது. முதிர்ச்சியின்போது கிடைக்கும் தங்கத்தின் மதிப்பிற்கு மூலதன ஆதாய வரி விலக்கும் உண்டு. முதலீடு : நடுத்தர அல்லது நீண்ட கால முதலீட்டுக்கு (8 ஆண்டுகள் லாக்-இன்) இது மிகவும் சிறந்த மற்றும் செலவு குறைந்த வழியாகும்.
3. தங்க இடிஎஃப் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் : பங்குகள் போல வர்த்தகம் செய்யப்படும் இவை 'காகிதத் தங்கம்' என்று அழைக்கப்படுகிறது. இவை நேரடியாகப் பௌதீகத் தங்கத்தின் விலையை அடிப்படையாகக் கொண்டவை. நன்மைகள் : தூய்மை, சேமிப்பு மற்றும் செய்கூலி போன்ற கவலைகள் இதில் இருக்காது. குறைந்த தொகையிலும் முதலீடு செய்யலாம். சவால்கள் : தங்கப் பத்திரங்கள் போல இதில் வட்டி வருமானம் கிடையாது. நிர்வகிப்புக் கட்டணம் உண்டு. முதலீடு : குறுகிய கால ஏற்ற இறக்கங்களைப் பற்றி கவலை இல்லாதவர்களுக்கு, தேவைப்படும்போது எளிதில் பணமாக்கக்கூடிய சிறந்த வழி இதுவாகும். 4. டிஜிட்டல் தங்கம் : ஃபின்டெக் தளங்கள் மூலம் ரூ.100 போன்ற மிகச் சிறிய தொகையில் தங்கம் வாங்கி, அதை Vault-இல் சேமித்து வைக்கலாம். நன்மைகள் : குறைந்த முதலீட்டில் உடனடியாக வாங்கலாம். பின்னர் நாணயமாகவோ அல்லது இடிஎஃப்-ஆகவோ மாற்றிக்கொள்ளும் வசதி சில தளங்களில் உண்டு. சவால்கள் : தளத்தின் நம்பகத்தன்மை மற்றும் காப்பீட்டு வசதியைச் சரிபார்க்க வேண்டும். மீட்டு எடுக்கும்போது சிறிய கட்டணங்கள் விதிக்கப்பட வாய்ப்புள்ளது. தங்கம் சார்ந்த பங்குகள் : தங்கச் சுரங்கம் அல்லது சுத்திகரிப்பு நிறுவனப் பங்குகள், தங்கம் ஃப்யூச்சர்கள் போன்ற கருவிகள் அதிக ரிஸ்க் எடுக்கத் தயாராக இருப்பவர்களுக்கானது. இவற்றில் அதிக வருமானம் அல்லது அதிக இழப்புகள் ஏற்படும் என்பதால், இதில் கவனம் தேவை. புத்திசாலித்தனமான முதலீடு : ஒரே நேரத்தில் மொத்தமாக வாங்காமல், சிஸ்டமேட்டிக் முதலீட்டுத் திட்டம் (SIP) போல சிறிது சிறிதாகப் பல கட்டணங்களில் முதலீடு செய்யலாம். செய்கூலி, தரகு கட்டணம் போன்ற பரிவர்த்தனை செலவுகள் உங்கள் லாபத்தை குறைக்கும். குறைவான செலவுள்ள வழிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதேபோல் மொத்த முதலீட்டையும் ஆபரணங்களில் மட்டும் வைக்காமல், பௌதீகத் தங்கம், தங்கப் பத்திரங்கள், இடிஎஃப் எனப் பிரித்து முதலீடு செய்யலாம். உங்கள் மொத்த முதலீட்டில் 5 முதல் 10% வரை மட்டுமே தங்கத்திற்கு ஒதுக்குங்கள். பெரும்பாலான பங்கைப் பத்திரங்கள் மற்றும் நிதிகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். பாரம்பரிய நோக்கத்திற்காக மட்டுமே ஆபரணங்களைத் தேர்வு செய்ய வேண்டும். பண்டிகை நாட்களில் தங்கம் வாங்குவது என்பது ஒரு பாரம்பரியமாக இருக்கலாம். ஆனால், ஒரு புத்திசாலி முதலீட்டாளர் தங்கத்தைப் பாரம்பரிய குறியீடாக மட்டும் பார்க்காமல், நிதிப் பாதுகாப்புக்கான ஒரு கருவியாகப் பயன்படுத்துவார் என்பதில் சந்தேகமில்லை.




No comments