தங்கம் வாங்க பிளான் இருக்கா? விலை குறையுமா? ஐசிஐசிஐ குளோபல் மார்க்கெட்ஸ் கணிப்பு :
தங்கம் விலை தினம் தினம் புதிய உச்சம் தொடும் நிலையில் இப்படியே தொடர்ந்து உயருமா அல்லது விலை குறைவதற்கு வாய்ப்பு உள்ளதா என ஐசிஐசிஐ குளோபல் மார்க்கெட்ஸ் கணித்துள்ளது. அதாவது இனி தங்கம் விலை எப்படி இருக்கும் என்பதை கணித்து அறிக்கையாக வெளியிட்டுள்ளது.
தங்கம் விலை கற்பனை செய்து பார்க்காத அளவிற்கு உச்சத்தை தொட்டுள்ளது.
இந்த ஆண்டில் மட்டும் இதுவரை சுமார் ரூ.40 ஆயிரம் சவரனுக்கு விலை தங்கம்
உயர்ந்துள்ளது. ஒரு சவரன் ரூ.1 லட்சம் இன்னும் சில ஆண்டுகளில் தொட்டு
விடும் நினைத்தவர்களை மாற்றி இந்த மாதமே தொட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு
இல்லை என கருதும் அளவிற்கு தங்கம் விலையானது கட்டுக்கடங்காமல் சென்று
கொண்டிருக்கிறது.
கிடுகிடுவென உயரும் தங்கம் விலை
தங்கம் விலை உயர்வுக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. உலகளாவிய
நெருக்கடி, தங்கம் மீதான அதிக முதலீடு, அமெரிக்க அதிபர் டிரம்பின் வரி
விதிப்பு கொள்கைகள் போன்றவற்றால் தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து
வருகிறது. கடந்த 2 மாதங்களில் மிகவும் வேகமாக அதிகரித்தது.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு சவரன் விலை ரூ.90 ஆயிரத்தை தாண்டியது.
அதன் பிறகும் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. தற்போதைய நிலவரப்படி,
ஒரு சவரன் ரூ.97,600-க்கு விற்கப்பட்டது. தீபாவளி பண்டிகை நெருங்கும்
நிலையில் தங்கம் விலையில் நேற்று சரிவு காணப்பட்டது. தங்கம் விலை நேற்று
சவரனுக்கு ரூ.2 ஆயிரம் குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.95,600-க்கு
விற்கப்படுகிறது.
குளோபல் மார்க்கெட்ஸ் அறிக்கை
ஒரு கிராம் ரூ.11,950-க்கு விற்கப்படுகிறது. தங்கம் விலை சட்டென
விழுந்ததால், வாங்க நினைத்தவர்கள் மத்தியில் குழப்பமே ஏற்பட்டுள்ளது. விலை
தொடர்ந்து குறையுமா இல்லையா? மீண்டும் அதிகரித்து விடுமா? என்று
நகைபிரியர்கள் கலக்கத்துடன் இருக்கும் நிலையில், ஐசிஐசிஐ வங்கியின் குளோபல்
மார்க்கெட்ஸ் அறிக்கை மேலும் அதிர வைப்பதாக அமைந்துள்ளது. இது பற்றிய
விவரங்கள் வருமாறு:
இந்தியாவில் தங்கத்தின் விலை 2025 ஆம் ஆண்டின் பிற்பகுதியிலும், 2026 ஆம்
ஆண்டின் முற்பகுதியிலும் அதிகரிக்கும். ரூபாய் மதிப்பு குறைவு, பண்டிகைக்
கால தேவை மற்றும் உலகளாவிய சந்தை போக்குகள் இதற்கு முக்கிய காரணங்களாக
உள்ளன. ஐசிஐசிஐ வங்கி குளோபல் மார்க்கெட்ஸ் வழங்கிய அறிக்கையின்படி, 2025
ஆம் ஆண்டு முழுவதும் இந்திய தங்கத்தின் விலை உயர்ந்து காணப்படும்.
விலை உயர்ந்தே இருக்கும்
ரூபாய் மதிப்பின் சரிவு மற்றும் உலகளாவிய சந்தைகளின் வலுவான போக்குகளால்
விலை உயர்ந்தே இருக்கும். உள்நாட்டு தங்க விலைகள், பண்டிகைக் கால தேவை
மற்றும் முதலீட்டாளர்களின் தொடர்ச்சியான ஆர்வத்தால் உயரும்.
2025 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டிலும், 2026 ஆம் ஆண்டின் முதல்
பாதியிலும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 87.00 முதல்
89.00 வரை வர்த்தகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகளாவிய தங்க
விலைகளின் தொடர்ச்சியான அதிகரிப்புக்கு மத்தியில், இது இந்திய தங்க விலைகளை
உயர்ந்த அளவில் தக்கவைக்கும்.
இதை விட அதிகமாக இருக்கும்
இந்த ஆண்டின் எஞ்சிய காலப்பகுதியில், 10 கிராம் தங்கத்தின் உள்நாட்டு விலை
ரூ.1,20,000 முதல் ரூ.1,35,000 வரை வர்த்தகம் செய்யப்படலாம். 2026 ஆம்
ஆண்டின் தொடக்கத்தில் இது ரூ.1,30,000 முதல் ரூ.1,45,000 வரை உயரலாம் என
எதிர்பார்க்கப்படுகிறது.
"ரூபாய் மதிப்பு வேகமாக சரிந்தாலோ அல்லது சர்வதேச விலைகள் தற்போதைய
கணிப்புகளை மீறினாலோ, அபாயங்கள் இதை விட அதிகமாக இருக்கும்" என்று ஐசிஐசிஐ
குளோபல் அறிக்கை கூறுகிறது. மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் (MCX) தற்போது
10 கிராம் தங்கம் ₹1.31 லட்சம் அளவில் வர்த்தகமாகிறது.
விலை குறையவே குறையாது?
அனைத்திந்திய நகை மற்றும் ஆபரண உள்நாட்டு கவுன்சில் (GJC) நிறுவனர் மற்றும்
முன்னாள் தலைவர் அனந்த பத்மநாபன் கூறுகையில், "வரும் மாதங்களில் 10 கிராம்
தங்கத்தின் விலை ₹1.50 லட்சத்தை எட்டலாம். இந்த விலை உயர்வு என்பது
முன்னெப்போதும் இல்லாத அளவிற்கான ஒரு போக்காக உள்ளது.
மத்திய வங்கிகள் அதிக அளவில் தங்கத்தை வாங்குவது, சீனா மற்றும் ஜப்பான்
ஆகிய நாடுகளிடம் பொதுமக்களிடையே தேவை வலுவாக உயர்ந்து இருப்பது உள்ளிட்டவை
காரணம்" என்று கூறுகிறார். இந்த அறிக்கைகளை எல்லாம் வைத்து பார்க்கும்
போது, தங்கம் விலை இன்னும் சில மாதங்களுக்கு புதிய உச்சத்தை தொட்டபடியே
தான் செல்லும் போல் தெரிகிறது என்கிறார்கள் நகைபிரியர்கள்.

No comments