தங்கம் விலை குறைய வாய்ப்புகள் இருக்கிறதா? பொருளாதார நிபுணர் விளக்கம்:
தங்கம் விலை இந்த அளவுக்கு உயரும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. இப்படியாக செல்லும் தங்கத்தின் விலை குறைய வாய்ப்புகள் இருக்கிறதா? என்பது தொடர்பாக, பொருளாதார நிபுணர் சோம.வள்ளியப்பனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
ஒரு பொருளின் விலை உயர்வுக்கு தேவை, வினியோகம் ஆகிய இந்த இரண்டும் முக்கிய காரணியாக இருக்கிறது. ஆபரணமாக தங்கம் இருந்த வரை ஒரு மதிப்பு இருந்தது. தங்கம் முதலீட்டு பொருளாக மாறியதோடு மட்டுமல்லாமல், உலக நாடுகளுக்கு இடையே வர்த்தகத்துக்கும் முக்கிய பொருளாக மாறிய பிறகு அதன் மதிப்பு அப்படியே பல மடங்கு உயர்ந்துவிட்டது.
கடந்த 3 ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் எல்லா நாட்டின் அரசாங்கங்களும் சேர்ந்து 1,000 டன் தங்கத்தை வாங்கியிருப்பதாக உலக தங்க கவுன்சில் சொல்கிறது. அந்தவகையில் கடந்த 3 ஆண்டுகளில் 3 ஆயிரம் டன் தங்கத்தை வாங்கியுள்ளனர். ரிசர்வ் வங்கிகள் வாங்கும் தங்கம் நேரடியாக 'கஜானா'வுக்கு சென்றுவிடும். ஏற்கனவே தங்க வினியோகம் பாதிப்பு இருக்கும் இந்த நேரத்தில், இப்படி கஜானாவில் தங்கத்தை வாங்கிவைப்பதால் மேலும் வினியோகம் பாதிக்கிறது. குறுகியகாலத்தில் இப்படி தங்கத்தை மொத்தமாக இவர்கள் வாங்கிவைத்ததன் விளைவால் தங்கம் ஏறிவிட்டது.
எந்த ஒரு பொருள் விலை ஏறி, இறங்கினாலும் அதன் மீது வர்த்தகம் செய்ய விரும்புவார்கள். பங்குகளை மட்டுமே வர்த்தகம் செய்தவர்கள், தங்கம், வெள்ளி போன்றவற்றை வாங்கி வைக்கும் (இ.டி.எப்.) வர்த்தகத்தையும் மேற்கொள்ள தொடங்கிவிட்டனர். உலக சந்தையில் பெரும் முதலீட்டாளர்களின் பார்வை தங்கத்தின் மீது படுவதாலும் அதன் விலை உயர்ந்து கொண்டே போகிறது.
தங்கம் விலை குறையுமா? என்ற கேள்வி பலருக்கும் இருக்கிறது. விலை குறைந்தால் சாதாரண மக்களும் வாங்க தயாராக இருக்கிறார்கள். ஜி.எஸ்.டி. குறைந்ததும் அதுசார்ந்த பொருட்களை வாங்க மக்கள் எப்படி சென்றார்களோ? அதேபோல் தங்கத்தையும் வாங்குவார்கள். அப்படியாக தங்கத்துக்கான ஆதரவு முழுவதுமாக இல்லாமல் போகும் என்ற நிலை உருவாகுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்றார்.
No comments