தன்னுடைய வீட்டில் ஒருவர் எவ்வளவு பணத்தை வைத்திருக்கலாம்...? சட்டம் என்ன சொல்கிறது...?
ஒருவர் வீட்டில் எவ்வளவு பணம் வைத்திருக்கலாம் என்பதற்கு உச்சவரம்பு எதுவும் விதிக்கப்படாமல் இருந்தாலும் கூட, கணக்கில் வராத பணத்திற்கான விதிகள் வருமான வரி சட்டத்தில் மிகவும் கண்டிப்பாக அமைக்கப்பட்டுள்ளது.
பெரிய அளவிலான கேஷ் டீலிங்ஸ் ஏற்படுவதைக் குறைப்பதன் மூலமாகவும், டிஜிட்டல் பேமெண்ட்களை ஊக்குவிப்பதன் மூலமாகவும் மத்திய அரசு லஞ்சத்தை ஒழிப்பதற்கான பல்வேறு முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. பெரிய அளவில் பணப்பரிமாற்றங்கள் செய்வதற்கு ஏற்கனவே கட்டுப்பாடுகள் நிலவி வருகின்றன. ஒரு வங்கியில் பெரிய அளவிலான ஒரு தொகையை டெபாசிட் செய்வது, சொத்து வாங்குவது அல்லது அதிக மதிப்பு கொண்ட மியூச்சுவல் பேமெண்ட்கள் செலுத்துவது போன்றவை இதில் அடங்கும்.
இந்தக் கட்டுப்பாடுகள் காரணமாக பலருடைய மனதில் இருக்கக்கூடிய ஒரு பொதுவான கேள்வி என்பது ‘ஒருவர் வீட்டில் சட்டத்திற்கு உட்பட்டு எவ்வளவு பணத்தை வைத்து இருக்கலாம்?’ என்பதுதான். இதற்கான பதில் என்பது எண்களைவிட டாக்குமெண்ட்களை அதிக அளவில் சார்ந்து இருக்கிறது. வருமான வரிச் சட்டத்தில் உள்ள விதிகளின்படி, ஒருவர் தன்னுடைய வீட்டில் எவ்வளவு பணம் வைத்திருக்கலாம் என்பதற்கு குறிப்பிட்ட எந்தவொரு சட்டரீதியான வரம்புகளும் நியமிக்கப்படவில்லை.
எவ்வளவு தொகையை வேண்டுமானாலும் நீங்கள் உங்களுடைய வீட்டில் வைத்துக் கொள்ளலாம். ஆனால், அந்தப் பணத்திற்கான மூலம் தொடர்பான நிரூபணங்கள் சட்டத்திற்கு உட்பட்டதாகவும், உங்களால் தெளிவாக விளக்கக்கூடிய ஒன்றாகவும் இருக்க வேண்டும். மேலும், ஒவ்வொரு வருடமும் வருமான வரித்தாக்கல் செய்யும்போது உங்களுடைய அனைத்து வருமானம் மற்றும் சேமிப்புகளை சரியான முறையில் நீங்கள் தெரிவிக்க வேண்டும்.
ஒருவேளை வருமான வரி அதிகாரிகள் இது குறித்த விசாரணையை மேற்கொள்ளும்போது, அந்தப் பணத்தை நீங்கள் எப்படி பெற்றீர்கள் என்பதற்கான ஆதாரங்களை நீங்கள் காட்ட வேண்டும். பேங்க் வித்டிராவல் ஸ்லிப், சேலரி ஸ்டேட்மெண்டுகள், தொழில் சம்பந்தப்பட்ட வருமான பதிவேடுகள் அல்லது பிற அதிகாரப்பூர்வ நிரூபணங்களை நீங்கள் ஆதாரங்களாகக் காட்டலாம். இந்தப் பணத்திற்கான மூலங்களை நீங்கள் நேர்மையாகக் காட்டும்போது, அதனை வைத்துக் கொள்வதற்கான முழு உரிமை உங்களுக்குக் கிடைக்கும்.
விவரிக்க முடியாத வருமானத்தில் இருந்துவரும் பணத்தின் நிலை என்ன?: ஒருவர் வீட்டில் எவ்வளவு பணம் வைத்திருக்கலாம் என்பதற்கு உச்சவரம்பு எதுவும் விதிக்கப்படாமல் இருந்தாலும் கூட, கணக்கில் வராத பணத்திற்கான விதிகள் வருமான வரி சட்டத்தில் மிகவும் கண்டிப்பாக அமைக்கப்பட்டுள்ளது. பிரிவுகள் 68 முதல் 69B வரை விவரிக்க முடியாத சொத்துக்கள் மற்றும் வருமானங்களை எப்படி கையாள வேண்டும் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒருவேளை உங்களால் நீங்கள் வைத்திருக்கும் பணத்திற்கு சரியான ஆதாரத்தைக் காட்ட முடியாத பட்சத்தில் அந்தத் தொகையானது விவரிக்க முடியாத வருமானமாகக் கருதப்படும். இந்தச் சூழ்நிலையில் அதற்கான அபராதங்களை நீங்கள் செலுத்த வேண்டும்.
அதாவது, நீங்கள் வைத்திருக்கும் விவரிக்க முடியாத அந்தத் தொகையில் 78% வரி மற்றும் அபராதங்களாக விதிக்கப்படும். உதாரணமாக, உங்களுடைய வீட்டில் நீங்கள் 1 கோடி ரூபாயை வைத்திருந்து, அதனைப் பெற்றதற்கான மூலத்தை உங்களால் நியாயமாக விளக்க முடியாத பட்சத்தில் தோராயமாக நீங்கள் 78 லட்சம் ரூபாய் அபராதமாக செலுத்த வேண்டும். கருப்பு பணம் பதுக்குவதைக் குறைப்பதற்காகவும், அனைத்து வருமானங்களும் ஆவணப்படுத்தப்பட வேண்டும் என்பதை உறுதி செய்யவும் இந்த பெரிய அளவிலான வரி விதிக்கப்படுகிறது.
எனவே, நீங்கள் வீட்டில் எவ்வளவு பணத்தை வைத்திருந்தாலும் அது சம்பந்தமான தெளிவான ரெக்கார்டுகளைப் பராமரித்துக் கொள்ளுங்கள். எப்பொழுதும் வெளிப்படையாக இருப்பது நல்லது. உங்களுடைய மாத சம்பளம், வீட்டு வாடகை அல்லது தொழில் மூலமாக வரும் லாபங்கள் போன்ற அனைத்திற்குமான ரெக்கார்டுகளைப் பராமரித்துக் கொள்ளுங்கள். மேலும், வருமான வரித்தாக்கல் செய்யும்போது உங்களுடைய வருமானங்கள் மற்றும் சேமிப்புகள் அனைத்தையும் கணக்கில் காட்டுவது அவசியம்.
No comments