Breaking News

EPS Pension: 2 மடங்குக்குமேல் ஓய்வூதிய உயர்வு, தனியார் துறை ஊழியர்களுக்கு தீபாவளி பரிசு:

 


இந்தியாவில் இது பண்டிகை காலம். தீபாவளி நெருங்கி வரும் வேளையில், அரசு ஊழியர்களும், தனியார் துறை ஊழியர்களும் தீபாவளி போனஸ், தீபாவளி பரிசுகள் என பல காரணங்களால் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த நிலையில், தனியார் துறை ஊழியர்களுக்கு இந்த ஆண்டு தீபாவளிக்கு முன்னர் கூடுதல் மகிழ்ச்சி கிடைக்கக்கூடும். குறிப்பாக ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் உள்ளவர்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க நல்ல செய்தி கிடைக்க வாய்ப்புள்ளது.

Minimum Monthly Pension: அதிகரிக்கிறதா குறைந்தபட்ச மாத ஓய்வூதியம்?

EPS-95 இன் கீழ் உள்ளவர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ₹1,000 லிருந்து ₹2,500 ஆக அதிகரிக்கப்படலாம் என்று அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. பணி ஓய்வுக்கு பிறகு இபிஎஸ் ஓய்வூதியத்தை சார்ந்துள்ள ஓய்வூதியதாரர்களுக்கு இந்த நடவடிக்கை மிகவும் தேவையான நிதி நிவாரணத்தையும் பாதுகாப்பையும் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Employee Pension Scheme: ஊழியர் ஓய்வூதியத் திட்டம் என்றால் என்ன?

ஊழியர் ஓய்வூதியத் திட்டம் என்பது EPFO ​​இன் கீழ் உள்ள ஒரு சமூகப் பாதுகாப்புத் திட்டமாகும். இது ஒழுங்கமைக்கப்பட்ட துறையில் உள்ள ஊழியர்களுக்கு அவர்களின் ஓய்வுக்குப் பிறகு ஓய்வூதியம் வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவில் சம்பளம் பெறும் ஊழியர்களுக்கான கட்டாய சேமிப்புத் திட்டமாக உள்ளது. ஊழியர் வருங்கால வைப்பு நிதி கணக்கான EPF -இல் பங்களிப்பு செய்யும் ஊழியர்கள் தானாகவே EPS-95 திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள்.

EPS Pension: இபிஎஸ் ஓய்வூதிய கணக்கீடு எவ்வாறு செய்யப்படுகின்றது?

EPS-95 இன் கீழ் ஊழியர்களின் சராசரி மாத சம்பளம் மற்றும் சேவை ஆண்டுகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் ஓய்வூதியம் தீர்மானிக்கப்படுகிறது. தற்போது, ​​EPS-95 திட்டத்தின் கீழ் சேர்ந்த ஓய்வூதியதாரர்கள் குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் ₹1,000 பெறுகிறார்கள். இந்தத் தொகை பல ஓய்வூதியதாரர்களுக்குப் போதுமானதாக இல்லை என்று கருதப்படுகிறது. குறிப்பாக வாழ்க்கைச் செலவுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நீண்ட ஆண்டுகளாக குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் மாற்றப்படாமல் அப்படியே உள்ளது. முன்மொழியப்பட்ட ஓய்வூதியம் ₹2,500 ஆக அதிகரிக்கப்பட்டால், அது லட்சக்கணக்கான ஓய்வூதியதாரர்களின் நிதிப் பாதுகாப்பை உயர்த்த உதவும்.

· தற்போதைய குறைந்தபட்ச ஓய்வூதியம்: மாதத்திற்கு ₹1,000.

· முன்மொழியப்பட்ட குறைந்தபட்ச ஓய்வூதியம்: மாதத்திற்கு ₹2,500.

இந்த மாற்றம் தற்போது குறைந்தபட்ச ஓய்வூதியம் பெறும் சுமார் 65 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு நன்மை பயக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உயர்வு வரவேற்கத்தக்க நிவாரணமாக இருக்கும். குறிப்பாக தீபாவளிக்கு முன்னதாக இதற்கான அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுவதால், பண்டிகை கால செலவுகளுக்கு இது நிவாரணமாக அமையும்.

Pension Hike: ஓய்வூதிய உயர்வு ஏன் முன்மொழியப்படுகிறது?

இபிஎஸ் மூலம் வழங்கப்படும் குறைந்தபட்ச மாத ஓய்வூதியத்தை அதிகரிக்க வேண்டும் என நீண்ட நாட்களாக ஊழியர்களும், ஓய்வூதியதாரர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். பல்வேறு ஓய்வூதியதாரர் சங்கங்கள் தற்போதுள்ள ஓய்வூதியம் அடிப்படை வாழ்க்கைச் செலவுகளை பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லை என்று நீண்ட காலமாக வாதிடி வருகின்றன. 

குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் அதிகரிக்கப்பட்டால், அது ஓய்வூதியதாரர்களுக்கு பின்வரும் நன்மைகளை அளிக்கும்:

- பணவீக்கத்தில் நிவாரணம்: தற்போதைய ஓய்வூதியத் தொகை பல ஆண்டுகளாக தேக்க நிலையில் உள்ளது. ஆனால், வாழ்க்கைச் செலவு, குறிப்பாக நகர்ப்புறங்களில், கடுமையாக உயர்ந்துள்ளது. ஓய்வூதியத் தொகை அதிகரித்தால், அது பணவீக்கத்தில் நிவாரணம் அளிக்கும்.

- நிதிப் பாதுகாப்பு அதிகரிக்கும்: பல ஓய்வூதியதாரர்கள் ஓய்வுக்குப் பிறகு இந்த வருமானத்தை மட்டுமே நம்பியுள்ளனர், எனவே ஓய்வூதியத் தொகையை அதிகரிப்பது அவர்களது பணி ஓய்வுக்கு பிந்தைய வாழ்வில் சிறந்த நிதி நிலைத்தன்மையையும் கண்ணியத்தையும் வழங்கும்.

- அதிகரித்த செலவழிப்பு வருமானம்: ஓய்வூதியதாரர்களுக்கு மாதத்திற்கு ₹1,500 கூடுதலாக கிடைத்தால், தினசரி செலவுகள், சுகாதாரச் செலவுகள் மற்றும் முந்தைய ஓய்வூதியத் தொகையில் கட்டுப்படியாகாத பிற தேவைகளை ஈடுகட்ட அவர்களுக்கு இது உதவும்.

- நிதி நெருக்கடியை சமாளிக்கலாம்: அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் அதிகரித்து வரும் வேளையில், கூடுதல் நிதி நிவாரணத்தின் மூலம், ஓய்வூதியதாரர்கள் பணவீக்க அழுத்தங்களை நிர்வகிப்பது எளிதாகும்.

மாறிவரும் பொருளாதார நிலைமைகளுக்கு ஏற்ப ஓய்வூதியத் திட்டங்கள் உருவாகுவதை உறுதி செய்வதற்காக இந்திய அரசு மற்றும் EPFO ​​மேற்கொண்டுள்ள தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த முன்மொழியப்பட்ட அதிகரிப்பு பார்க்கப்படுகின்றது. இருப்பினும், இந்த நடவடிக்கை திட்டத்தின் நிலைத்தன்மை மற்றும் EPFO ​​மற்றும் அரசாங்கத்தின் பட்ஜெட்டில் அது ஏற்படுத்தக்கூடிய நிதிச் சுமை பற்றிய கேள்விகளையும் எழுப்புகிறது.

Central Board of Trustees

EPFO -வின் மத்திய அறங்காவலர் குழு (CBT) அக்டோபர் 10 முதல் 11 வரை பெங்களூருவில் கூடக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய தொழிலாளர் அமைச்சர் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், குறைந்தபட்ச ஓய்வூதியத்தை அதிகரிப்பது மற்றும் பிற சீர்திருத்தங்கள் குறித்து பரிசீலிக்கப்படலாம். EPF மற்றும் EPS கணக்குகளிலும் பல மாற்றங்கள் செய்யப்படலாம்.

EPF Members: இபிஎஃப் உறுப்பினர்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்துவிட்டதா?

கூடிய விரைவில், ஓய்வூதிய உயர்வு குறித்த அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் EPFO ​​அல்லது தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்திடமிருந்து வர வாய்ப்புள்ளது. ஓய்வூதியதாரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் துல்லியமான விவரங்களை அரிய அதிகாரப்பூர்வ சேனல்கள் மற்றும் வலைத்தளங்களில் சென்று பார்க்கலாம்.

இபிஎஸ் ஓய்வூதிய உயர்வு: சுருக்கமாக....

- இபிஎஸ் ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதிய உயர்வு தீபாவளி பரிசாக கிடைக்கக்கூடும்.

- குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் ரூ.1,000 -இலிருந்து ரூ.2,500 ஆக அதிகரிக்கப்படலாம்.

- மூத்த குடிமக்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்கள் நியாயமான, கண்ணியமான ஓய்வூதியத்தைப் பெறுவதை இந்த நடவடிக்கை உறுதி செய்யும்.

 

No comments