மதிப்பெண்ணா? வாழ்க்கைத் திறனா? - 'எதிர்காலம் குறித்து அஞ்சும் மாணவர்கள்' :
உயர்கல்வியில் எந்த பட்டப்படிப்பை தேர்ந்தெடுக்கப் போகிறாய்?', 'அதைப் படித்தால் வேலை கிடைக்குமா?', 'உன் வருங்கால லட்சியம் என்ன?', இத்தகைய கேள்விகளை நம்மில் பலரும் பள்ளிப்படிப்பின் இறுதி ஆண்டுகளில் எதிர்கொண்டிருப்போம்.
சமீபத்தில் பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் (பிரஸ் அண்ட் அசெஸ்மென்ட்) நடத்திய ஒரு சர்வதேச ஆய்வில், '52% பள்ளி மாணவர்கள் உயர்கல்வி எனும் அடுத்த கட்டத்திற்குத் முழுமையாக தயாராக இல்லை என்பதும், 55% மாணவர்கள் உயர்கல்விக்கு பிறகான எதிர்காலத்திற்கு தயாராக இல்லை என்பதும்' தெரிய வந்தது.
அதாவது கல்லூரி வாழ்க்கை மற்றும் அதற்கு பிறகான எதிர்காலம் குறித்த பயம், குழப்பம் அதிக மாணவர்களுக்கு உள்ளது.
இந்தியா உள்பட 150 நாடுகளைச் சேர்ந்த 3,840 மாணவர்கள் மற்றும் 3,021 ஆசிரியர்கள் இந்த ஆய்வில் கலந்துகொண்டனர்.
இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், சுமார் 67% ஆசிரியர்கள் தங்கள் மாணவர்கள் உயர் கல்விக்குத் தயாராக இருப்பதாக நம்புகின்றனர். 59% ஆசிரியர்கள் தங்களது மாணவர்கள் உயர்கல்வியைத் தாண்டிய வாழ்க்கைக்குத் தயாராக இருப்பதாகவும் கூறுகின்றனர்.
ஆசிரியர்களுக்கு மாணவர்கள் மேல் இருக்கும் நம்பிக்கை, மாணவர்களுக்கு ஏன் இல்லை என்ற கேள்வி இங்கு எழுகிறது. செயற்கை நுண்ணறிவு மாணவர்களிடையே என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதையும் இந்த ஆய்வு அலசுகிறது.
"அடுத்த ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்கான குறுகிய கால திட்டங்கள் மாணவர்களிடம் உள்ளன, ஆனால் பட்டப்படிப்பை முடித்த பிறகு என்ன செய்வது என்று அவர்களுக்குத் தெரியவில்லை." என இந்த ஆய்வில் கலந்துகொண்ட, இந்தியாவைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் கூறியுள்ளார்.
ஒரு பாடம் குறித்த முழுமையான அறிவு (Subject knowledge) என்பது கல்விமுறையில் முக்கியமான அங்கம் வகித்தாலும் கூட, பொதுத் தேர்வுகள், போட்டித் தேர்வுகள் மற்றும் கல்லூரி/பல்கலைக்கழக சேர்க்கை போன்ற விஷயங்களுக்காக மட்டுமே மாணவர்கள் அதற்கு முக்கியத்துவம் அளிக்கிறார்கள் என ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
பள்ளி மற்றும் கல்லூரி படிப்பைக் கடந்து எதிர்காலத்திற்கு 'பாட அறிவு' என்பது முக்கியம் இல்லை என்றே இந்த ஆய்வில் கலந்துகொண்ட ஆசிரியர்களும் மாணவர்களும் கருதுகின்றனர்.
"ஏஐ (செயற்கை நுண்ணறிவு) மிகவும் பிரபலமடைந்து, எளிதாக அணுகக்கூடியதாக மாறியுள்ளதால், பாட அறிவை மனப்பாடம் செய்ய வேண்டிய அவசியம் குறைந்து வருகிறது. ஏனெனில் ஏஐ உதவியுடன் பாட அறிவை எளிதாகப் பெற முடியும்." என இந்த ஆய்வில் கலந்துகொண்ட மாணவர் ஒருவர் குறிப்பிடுகிறார்.
ஆனால், "அதிகமான மாணவர்கள் தொழில்நுட்பத்தை மட்டும் நம்பத் தொடங்குவது எனக்கு நிச்சயமாக கவலை அளிக்கிறது. பல மாணவர்கள் தங்கள் மூளையின் சிந்தனைத் திறனை பயன்படுத்துவதற்குப் பதிலாக, சிறிய உதவிக்கு கூட சாட்ஜிபிடி-யை நாடுவதைப் பார்க்க முடிகிறது. இது எளிதான பதிலைப் பெறுவதற்கான ஒரு வழியாகும். தனிப்பட்ட முறையில், ஏ.ஐ பயன்படுத்த நான் விரும்பவில்லை, ஏனெனில் அது என் படைப்பாற்றலை அழிக்கிறது." என மற்றொரு மாணவர் கூறுகிறார்.
'பாட அறிவு' என்பதற்கு பதிலாக தலைமைத்துவம், மேலாண்மை மற்றும் வணிகத் திறன்கள், தொடர்பாடல் திறன்கள், சுய மேலாண்மை திறன்கள் ஆகியவை முக்கியமானவை என மாணவர்கள் கருதுகின்றனர். மறுபுறம், 'சிந்தனை மற்றும் ஆராய்ச்சி திறன்கள்' வாழ்க்கைக்கு முக்கியமானவை என ஆசிரியர்கள், மாணவர்கள் என இருதரப்பும் ஒப்புக்கொள்கிறார்கள்" என கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வு குறிப்பிடுகிறது.
ஆனால், சிக்கல் என்னவென்றால் இத்தகைய வாழ்க்கைத் திறன்களை கற்றுக்கொடுப்பதும் கற்றுக்கொள்வதும், மிகவும் கடினமான ஒன்று என மாணவர்களும் ஆசிரியர்களும் கருதுகின்றனர்.
இதுவே, உயர்கல்வி மற்றும் எதிர்காலத்தின் மீதான மாணவர்களின் பயத்திற்கு ஒரு முக்கிய காரணம் என்பதையும் ஆய்வு கூறுகிறது.
'உடனடி கல்வித் தேவைகளுக்கும் (பாட அறிவு அவசியமான இடத்தில்) நீண்டகால இலக்குகளுக்கும் (தலைமைத்துவம் போன்ற வாழ்க்கைத் திறன்கள் தேவையான இடத்தில்) இடையிலான இந்த வேறுபாடு, மாணவர்கள் எதிர்கொள்ளும் இரட்டைச் சவாலை எடுத்துக்காட்டுகிறது.' என இந்த ஆய்வு கூறுகிறது.
"நமது கல்விமுறை இதுவரை பலரின் வாழ்க்கையை நேர்மறையாக மாற்றியுள்ளது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், 21ஆம் நூற்றாண்டின் திறன்கள் எனப்படும் 'தலைமைத்துவம், குழு மனப்பான்மை, தொடர்பாடல், படைப்பாற்றல், பகுப்பாய்வு' போன்றவற்றிற்கு இங்கு இடமில்லை என்பதும் உண்மையே" என்கிறார் பேராசிரியரும், உயர்கல்வி ஆலோசகருமான ரவிக்குமார்.
தொடர்ந்து பேசிய அவர், "ஒரு மாணவனிடம் நியூட்டனின் மூன்றாம் விதி குறித்து 'நீ என்ன நினைக்கிறாய்' என யாரும் கேட்பதில்லை. அந்த விதியை வார்த்தை மாறாமல் தேர்வில் எழுதினால் போதும் என்றே கூறுகிறார்கள். ஒரு ஆசிரியர் என்பவர் மாணவனின் பக்கம் நின்று அறிவியலை அல்லது எடுத்துக்கொண்ட பாடத்தை பகுப்பாய்வு செய்ய வேண்டும். ஆனால், மதிப்பெண்கள் பக்கம் நிற்பதால் தான், ஒரு மாணவனுக்கு ஆசிரியரும் நியூட்டனும் எதிரியாகத் தெரிகிறார்கள்" என்கிறார்.
முந்தைய தலைமுறைகள் போல அல்லாமல், இணைய உலகின் மூலம் பல விஷயங்களை அறிந்துகொள்ளும் இன்றைய மாணவர்கள், அதை சுயமாக கற்றுக்கொள்ள முயற்சிக்கிறார்கள், ஆனால் எல்லோருக்கும் அதில் முழு வெற்றி கிடைப்பதில்லை எனக்கூறும் ரவிக்குமார், "அதன் பிறகு மாணவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்படுகிறது. கற்றல் என்பது கூட்டு முயற்சி அதனால் தான் இந்தத் திறன்களை பள்ளிகளில் கற்றுக்கொடுக்க வேண்டும்" என்கிறார்.
வாழ்க்கைத் திறன்கள் இல்லாமல் அல்லது போதுமான அளவில் இல்லாமல் உயர்கல்வி அல்லது அதற்கடுத்த கட்டத்திற்குள் நுழையும் மாணவர்கள், மிகப்பெரும் 'கலாசார அதிர்ச்சியை' எதிர்கொள்கிறார்கள் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
இதை திருப்பூரைச் சேர்ந்த முதலாமாண்டு பொறியியல் மாணவி தனுஸ்ரீயும் ஒப்புக்கொள்கிறார். கோயம்புத்தூரில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பயிலும் அவர், "வகுப்பின் முன் வந்து பேசுங்கள் என ஆசிரியர் அழைத்தால் ஒருவித தடுமாற்றம், பயம் ஏற்படுகிறது. சில சமயங்களில், பள்ளியில் அனைத்தையும் மேம்போக்காக மதிப்பெண்களுக்காக மட்டுமே படித்துவிட்டோமோ என்ற எண்ணம் உருவாகிறது. கிராமத்தில் இருந்து வருபவர்கள் இன்னும் சிரமப்படுவதைப் பார்க்க முடிகிறது" என்கிறார்.
"மதிப்பெண்கள் தாண்டி சிந்திக்காதது, வேலைக்கான நேர்காணல்களில் எதிரொலிக்கிறது. பல ஆண்டுகள் பள்ளி மற்றும் கல்லூரி படிப்புக்குப் பிறகு நினைத்த வேலை கிடைக்காத போது மாணவர்கள் விரக்தி அடைகிறார்கள்" என்கிறார் பேராசிரியர் ரவிக்குமார்.
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ரேகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) உள்ளூரிலேயே பள்ளி மற்றும் பொறியியல் படிப்பை முடித்தவர்.
"எனது கல்லூரியில் 'கேம்பஸ் பிளேஸ்மென்ட்' என்ற ஒன்றே கிடையாது. படித்து முடித்துவிட்டு வேலைக்கு செல்ல வேண்டுமென்பதில் நான் உறுதியாக இருந்ததால், சென்னைக்கு வந்தேன். ஆனால், வந்தபிறகுதான் வெறும் நல்ல மதிப்பெண்கள் மட்டுமே நேர்காணல்களில் உதவாது என்று தெரிந்துகொண்டேன். ஒரு முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை கிடைக்க எனக்கு 2 வருடங்கள் ஆனது. 'தொடர்பாடல் திறன்' எவ்வளவு முக்கியம், நம்மை எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்பதை அந்த இரண்டு வருடங்கள் எனக்கு கற்றுக்கொடுத்தன" என்கிறார் ரேகா.
மதுரையைச் சேர்ந்த விவேகானந்தன் இப்போது சென்னையில் ஒரு முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரிகிறார். "நிச்சயமாக சென்னை அல்லது கோயம்புத்தூர் போன்ற ஒரு நகரத்தில் இருக்கும் கல்லூரியில் படிக்க வேண்டும் என்பதில் நான் தெளிவாக இருந்தேன். காரணம், மதிப்பெண்கள் தாண்டிய திறன்களை வளர்க்க நகரச் சூழல் உதவும் என நான் நம்பினேன்." என்கிறார்.
அதேசமயம், "நகரத்தில் படித்தால் தான் முன்னேற முடியும் என நான் கூறவில்லை. ஆனால் இங்கு வாழ்க்கைத் திறன்களை வளர்த்துக்கொள்வதற்கான சூழல் ஓரளவு உள்ளது. ஆனால், கிராமத்தில் இருந்து வந்ததால் எனது தாழ்வு மனப்பான்மையைக் கடந்துவர மிகவும் சிரமப்பட்டேன்." என்கிறார் விவேகானந்தன்.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வின்படி, 'நவீன தொழில்நுட்பம் உலகளாவிய இணைப்பை சாத்தியப்படுத்தினாலும் கூட, அது நடைமுறை வாழ்க்கையின் தொடர்பாடல் திறன்களை கட்டுப்படுத்துகிறது. நேருக்கு நேராகப் பேசுவது மற்றும் தீவிரமான விவாதங்களில் சிரமப்படுவதை மாணவர்கள் ஒப்புக்கொண்டனர்.'
மேலும், 'விமர்சனங்கள் அல்லது சமூக விளைவுகள் குறித்த கவலை காரணமாக விவாதங்களில் இருந்து விலகி இருப்பதாகவும் பலர் ஒப்புக்கொண்டனர். இது விவாதத்திலும் பேச்சாற்றலிலும் தன்னம்பிக்கையை மேம்படுத்துவதற்கான அவர்களின் திறனை பாதிக்கிறது. செயற்கை நுண்ணறிவு மாணவர்களுக்கு உதவினாலும் கூட, அது உலகைப் பற்றிய ஒரு குறுகிய பார்வைக்கே வழிவகுக்கிறது'
"செயற்கை நுண்ணறிவை எப்படி, எதற்காகப் பயன்படுத்த வேண்டும் என மாணவர்களுக்கு யாரும் கற்றுக்கொடுப்பதில்லை. எனவே அதுவும் படைப்பாற்றல் மற்றும் பகுப்பாய்வு திறன்களை மேம்படுத்த அல்லாமல், மதிப்பெண்களுக்காகவே பயன்படுத்தப்படுகிறது." என்கிறார் கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி.
No comments