Breaking News

Group 4: குரூப் 4 காலிப்பணியிடங்கள் குறைவாக இருப்பது ஏன்? டிஎன்பிஎஸ்சி விளக்கம்.. ரிசல்ட் எப்போது?

 


 டிஎன்பிஎஸ்சி குரூப் 4 (TNPSC Group 4) காலிப்பணியிடங்கள் குறைவாக இருப்பது ஏன் என்பது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பணியிடங்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட பாதியாக குறைந்துள்ளதாக தேர்வர்கள் கவலை தெரிவித்த நிலையில், டிஎன்பிஎஸ்சி இந்த விளக்கத்தை அளித்துள்ளது.

தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி நிரப்புகிறது. குரூப் 1, குரூப் 2, குரூப் 2 ஏ என பல்வேறு நிலைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. ஆண்டு தோறும் கால அட்டவணை வெளியிட்டு இந்த பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி நிரப்பி வருகிறது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தமிழகத்தில் அரசு பணிக்காக காத்திருக்கும் பல லட்சக்கணக்கான தேர்வர்களுக்கு கலங்கரை விளக்கம் போல டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுகள் உள்ளன. தேர்ச்சி பெற்றால் போதும், பணி நிச்சயம்; நேர்முகத் தேர்வு எதுவும் இல்லை என்பதால் தேர்வர்கள் பெரிதும் விரும்பும் தேர்வுகளில் ஒன்றாக டிஎன்பிஎஸ்சி உள்ளது. சில ஆயிரம் பணியிடங்களுக்கே பல லட்சக்கணக்கான தேர்வர்கள் போட்டியிடுவார்கள்.
பத்தாம் வகுப்பு கல்வித் தகுதி கொண்ட இந்த குரூப் 4 தேர்வு கடந்த 25.04.2025 அன்று அறிவிக்கப்பட்டது. இந்த தேர்வை எழுத 15 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்திருந்தனர். மொத்தம் 3,935 பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட இந்த தேர்வுக்கு தேர்வர்கள் மத்தியில் கடும் போட்டி இருந்தது. கடந்த ஜூலை 12 ஆம் தேதி நடத்தப்பட்டது.
தேர்வர்கள் அதிருப்தி இதற்கிடையே, கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வனக்காப்பாளர் மற்றும் வனக்காவலர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்காக நடத்தப்பட்ட இந்த தேர்வில் கூடுதலாக 727 காலிப் பணியிடங்கள் சேர்க்கப்பட்டன. இதனால் மொத்த காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 4662 ஆக உயர்ந்தது. எனினும், கடந்த காலங்களை ஒப்பிடும் போது குரூப் 4 தேர்வு காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக தேர்வர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.

இந்த நிலையில்தான், குரூப் 4 பணியிடங்கள் குறைவாக உள்ளதா? என்பதற்கான விளக்கத்தை டிஎன்பிஎஸ்சி அளித்துள்ளது. இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- டிஎன்பிஎஸ்சி விளக்கம் "2022-ஆம் ஆண்டிற்கு முன்பு வரை வருவாய்த்துறையிலுள்ள வரைவாளர் (Draftsman) மற்றும் நில அளவர் (Field Surveyor) பதவிகளுக்கான காலிப்பணியிடங்கள் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு தொகுதி IV பணிகள் தேர்வு மூலம் நிரப்பப்பட்டது. 2022-ஆம் ஆண்டு முதல், வரைவாளர் (Draftsman) மற்றும் நில அளவர் (Field Surveyor) பதவிகளுக்கான காலிப்பணியிடங்கள் தொழில்நுட்ப பணிகள் தேர்வு மூலம் நிரப்பப்படுகின்றன.
எனவே 2022 ஆண்டிற்கு முன்பு ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு தொகுதி IV பணிகள் தேர்வு மூலம் அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையுடன், 2025-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையை ஒப்பிட இயலாது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிசல்ட் எப்போது? குரூப் 4 தேர்வு முடிந்த மூன்று மாதங்களுக்குள் முடிவுகள் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி வட்டாரங்கள் கூறின. ஜூலை மாதம் தேர்வு நடைபெற்றதால், இந்த மாதத்தில் தேர்வு முடிவு வெளியாகும் என தெரிகிறது. இதனால், குரூப் 4 தேர்வர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் இந்த தேர்வு அறிவிப்பினை எதிர்பார்த்து உள்ளனர். br />

No comments