CBSE LOC Verification: 10, 12-வது வகுப்பு மாணவர்கள் உஷார்; இந்த மாத இறுதிக்குள் இதை நீங்க செய்தே ஆகணும்!
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE), 10 மற்றும் 12 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வெழுதவிருக்கும் மாணவர்கள், தங்கள் LOC (List of Candidates) விவரங்களை உடனடியாகச் சரிபார்க்க வேண்டும் என அவசர அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE), 10 மற்றும் 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வெழுதவிருக்கும் மாணவர்களுக்கான பட்டியல் சரிபார்ப்பு செயல்முறை (List of Candidates - LOC) தொடர்பாக முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த சரிபார்ப்பு பணியில் மாணவர்கள் செய்யும் சிறு அலட்சியம்கூட, அவர்களின் எதிர்கால உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பைப் பாதிக்கலாம் என்பதால், பெற்றோரும் மாணவர்களும் இதில் முழு கவனம் செலுத்த வேண்டும்.
LOC என்றால் என்ன?
எல்.ஓ.சி (List of Candidates) என்பது, 10 மற்றும் 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வில் பங்கேற்கப் போகும் மாணவர்களின் விவரங்களைப் பட்டியலிடும் இறுதிப் பதிவாகும். இந்தப் பட்டியலை சி.பி.எஸ்.இ-ன் இணையதளத்தில் பள்ளி நிர்வாகம் சமர்ப்பிக்கும். இதில் உள்ள விவரங்களே மாணவர்களின் ஹால் டிக்கெட், மதிப்பெண் சான்றிதழ் மற்றும் இறுதியாக வழங்கப்படும் அனைத்துச் சான்றிதழ்களிலும் இடம்பெறும்.
சரிபார்ப்பின் முக்கியத்துவம்
பொதுத் தேர்வுக்குப் பிறகு சான்றிதழ்களில் திருத்தங்கள் மேற்கொள்வது என்பது மிக கடினமான செயல்முறை ஆகும். பல கல்லூரிகள் மற்றும் மேலாண்மை நிறுவனங்களில் (Integrated Program in Management - IPM, போன்ற) சேர்க்கையின்போது, மாணவர்களின் பெயர், பிறந்த தேதி ஆகியவற்றில் உள்ள பிழைகள் நிராகரிப்புக்கு வழிவகுக்கும். CBSE-யும், ஒருமுறை LOC பதிவு செய்யப்பட்டுவிட்டால், பின்னர் எந்தக் காரணத்திற்காகவும் திருத்தங்களை ஏற்காது எனத் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
மாணவர்கள் கட்டாயம் செய்ய வேண்டியவை
அக்டோபர் மாத இறுதிக்குள் அல்லது குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் (லேட் ஃபைன் இல்லாமல்) பள்ளிகள் LOC ஐச் சமர்ப்பித்த பின் மாணவர்கள் மற்றும் பெற்றோரின் சரிபார்ப்புக்காக ஒரு 'தரவுச் சரிபார்ப்பு சீட்டு' (Data Verification Slip) வழங்கப்படும். மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இந்த காலக்கெடுவுக்குள் பின்வரும் ஆவணங்களில் உள்ள விவரங்களுடன் சரிபார்ப்புச் சீட்டை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.
பிறப்புச் சான்றிதழ் (Birth Certificate): இதில் உள்ள பிறந்த தேதி சரியாக உள்ளதா எனப் பார்க்க வேண்டும்.
10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்: இதில் உள்ள பெயர், பெற்றோரின் பெயர் சரியாக உள்ளதா எனப் பார்க்க வேண்டும்.
சமூகச் சான்றிதழ் (Community Certificate): (தேவைப்பட்டால்) இதில் உள்ள சமூகப் பிரிவினர் தகவல் சரியாக உள்ளதா எனப் பார்க்க வேண்டும்.
விண்ணப்பப் படிவங்கள் (Application Forms): மாணவர்கள் பூர்த்தி செய்த விண்ணப்பப் படிவத்துடன் ஒப்பிட வேண்டும்.
பெயர் அல்லது பிறந்த தேதி ஆகியவற்றில் ஏதேனும் பிழை இருந்தால், அது உடனடியாகப் பள்ளி நிர்வாகத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு, இந்த இறுதி வாய்ப்புக்குள் கட்டாயம் திருத்தப்பட வேண்டும். மாணவர்கள் இந்தச் சுற்றறிக்கையின் தீவிரத்தைப் புரிந்துகொண்டு, தங்கள் எதிர்காலப் படிப்பைத் தடையின்றித் தொடர, அலட்சியம் இல்லாமல் இந்த மாத இறுதிக்குள் சரிபார்ப்புப் பணியை முடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
No comments